30 மே 2011

ஸ்ரீலங்காவிற்கு எதிராக அமெரிக்கா செயற்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை.

சில சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக செயற்படுமாறு அமெரிக்காவை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனீவாவில் இன்றைய தினம் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சர்வதேச அனர்த்த குழு,மனித உரிமை கண்காணிப்பகம்,சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட 11 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இவ்வாறு இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக செயற்பட வேண்டுமென அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனிடம் குறித்த மனித உரிமை அமைப்புக்கள் எழுத்து மூலம் கோரியுள்ளன.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்த அமைப்புக்கள் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிபுணர் குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ளல், நம்பகரமான விசாரணைகள் நடத்தப்படுவதனை உறுதி செய்தல், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தராதரம் பார்க்காது தண்டனை வழங்குதல், சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதுமான முறையில் விசாரணை நடத்துதல், நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்தல் ஆகிய கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் கோரியுள்ளன.
சர்ச்சைக்குரிய நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றில் எதிர்வரும் ஜூன் மாதம் கூட்டமொன்றை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக