வெள்ளைக்கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் தலைவர்களைப் படுகொலை செய்யுமாறு கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரையை பகிரங்கப்படுத்திய ஊடகவியலாளர் அமல் சமந்த நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளார்.வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்த விடயம் அமல் வசந்த மூலமாகவே சரத் பொன்சேகாவிற்கு அறியக் கிடைத்திருந்ததை அடுத்து பிரஸ்தாப ஊடகவியலாளருக்கு கோதபாய ராசபக்ஷ கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
சரத் பொன்சேகா உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பின் உயரதிகாரிகளுக்கு மிக நெருக்கமானவரும், நான்காம் கட்ட ஈழப்போரின் போது மாவிலாறு யுத்தக் களமுனை தொடக்கம் ஜனாதிபதி ஊடகப் பிரிவினருடன் இணைந்து ரூபவாஹினி தொலைக்காட்சிக்கான நேரடித் தகவல்களை வழங்கியவருமான ஊடகவியலாளர் அமல் வசந்த தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சிபாரிசின் கீழ் நான்காம் கட்ட ஈழப் போரின் போது ரூபவாஹினியில் இருந்து அமல் வசந்த, ராமவிக்கிரம, சுயாதீன தொலைக்காட்சியில் இருந்து ரொட்ரிகோ ஆகியோர் யுத்தத்தின் தகவல்களை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னை நாள் தமிழ் அதிகாரியான அஷ்ரப் அலீ ஒருங்கிணைத்து வந்திருந்தார்.
அவ்வாறான நிலையில் அமல் வசந்தவும் அஷ்ரப் அலீயும் கடமை நிமித்தமாக ஒரு தடவை கோத்தாபய ராசபக்ஷவின் அலுவலகத்தில் இருந்துகொண்டிருந்த போதே வன்னியிலிருந்த இராணுவ கட்டளை தளபதிக்கு வெள்ளைக்கொடியுடன் வரும் விடுதலைப்புலி தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் என தெரியவருகிறது.
சரத் பொன்சேகாவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்ற வகையில் ஊடகவியலாளர் அமல் வசந்த அவ்விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு தெரிவித்துள்ளார். அதனையே அவரும் பிரட்ரிக்கா ஜேன்ஸிடம் பிரஸ்தாபித்திருந்ததுடன், நீதிமன்ற சாட்சியமளிப்பின் போது சண்டே லீடர் ஆசிரியரிடம் பேசும் போது தான் தனிப்பட்ட ரீதியில் கூறியதாக சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு தான் கூறிய விடயம் அமல் வசந்த ஊடாகவே சரத் பொன்சேகாவிற்கு தெரியவந்ததை அறிந்து கொண்ட கோதபாய ராசபக்ஷ அவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அமல் வசந்த நாட்டை விட்டு தப்பியோடி தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
அமெரிக்க தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் றொபட் ஓ பிளேக்கின் உதவியுடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்ற அமல் வசந்தவிற்கு பின்னர் சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இவருடன் ரூபவாஹினி செய்தி ஆசிரியர் காமினியும் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். அவரிடம் வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களும் உள்ளதாக தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக