29 மே 2011

இலங்கையின் செயற்பாடுகள் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு வழிகோலும்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நீதியான நியாயமான இணக்கப்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் தவறுமானால், இது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் விசாரணைக்கு வழிகோலும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இவ்வாறு ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய அரசாங்கத்தினதும் மேற்குலக நாடுகளினதும் அழுத்தங்களின் காரணமாக இலங்கை அரசாங்கமானது யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஊடாக ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. எந்தவொரு நீதித்துறைசார் அதிகாரங்களையும் கொண்டிராத அரசாங்க அதிகாரிகளுக்கு பரிந்துரை மட்டும் வழங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, யுத்தக் குற்றச்சாட்டுகள் உள்ளடங்கலாக இலங்கைக்குள் இடம்பெற்றுள்ள முக்கிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தேங்கிக் கிடக்கும் முக்கிய குற்றச்சாட்டு கள் தொடர்பான முறைப்பாடுகளை அலசி ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம். நியமிக்கப்படவுள்ள இக்குழுவானது நாட்டின் சகல பாகங்களிலும் இடம்பெற்றுள்ள மிகவும் முக்கியமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த பெரேரா ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிபடைந்த 2009-ம் ஆண்டில், இலங்கைப் படைகளால் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழுவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மீறல்களை நிரூபிக்கத்தக்க வகையில் நம்பகமான ஆய்வொன்றை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் தலைமையின் கீழ் மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளன. இவை தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் செய்யப்பட்ட பொய்யான பரப்புரைகள் எனக் குற்றம் சாட்டியுள்ள அரசாங்கம், ஐ.நாவின் வல்லுநர் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறியுள்ளது. அத்துடன் இலங்கைப் படைகள் பொதுமக்களை குறிவைத்துத் தாக்குதல்களை மேற்கொண்டன என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது.
போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நீதியான நியாயமான இணக்கப்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் தவறுமானால், இது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு வழிகோலும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் இலங்கைக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு வழங்குவதற்கு சாத்தியபாடுகள் மிகக் குறைந்ததாகக் காணப்படுவதாக பெரும்பாலான இராஜதந்திரிகள் எதிர்வு கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக