31 மே 2011

ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப்பிடித்து தள்ளியது யார்?

உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,.......கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார்.
மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செயலாகும்.
அதைப் பார்த்தவர்கள் அனுதாபத்துடனான அக்கறையுடன் அவருக்கு வருத்தத்தோடான ஆறுதலை வழங்கியபோது மக்களவையைச் சார்ந்த முக்கியமானவர்கள் பார்த்தும் பாராமுகம் காட்டியது தனக்கு வேதனை தருவதாகவும் கனடாத் தமிழரின் மூத்த அரசியல்வாதியான ஈழவேந்தன் ஐயா கும்பிட்டார்.
நேரில் கண்ட பலர் தொலைபேசிமூலம் தன்னை அழைத்து ஆறுதல் கூறியதாகவும், சாட்சி சொல்வதற்கு தாம் எப்பவும் வரத்தயார் எனவும், மக்களவையினர் செயலுக்கு தாம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்கள் கூறியது கண்டு தான் பெருமையடைந்ததாகவும் தேசியத்தலைவரால் பரப்புரைக்காக தேசியப் பட்டியலில், நாடு நாடாக பரப்புரை செய்ய, நியமித்த ஈழவேந்தன் ஐயா குறிப்பிட்டார்.
பெரியார் கூற்றின்படி தன்மானம் இழந்தும் தமிழ்மானம் காக்க தான் உறுதி கொண்டுள்ளதகவும் இந்தியாவில் இருந்து இரண்டு தடவைகள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவேளையிலும், ஈழத் தமிழருக்குப் பரப்புரை செய்ததற்காக அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட அந்த நாவின் வல்லவன் கூறினார்.
இன்றுவரை, மக்களவை நிர்வாகம் மௌனம் சாதிப்பது அவர்களுடைய கொள்கையை, அவர்களின் மனப்போகை திட்டவட்டமாகக் எடுத்துக் கூறுவதாகவே அமைகிறது. இந்தக் கொடிய நிகழ்வு கனடாத் தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழருக்கும் வேதனையும், வெட்கமுமான ஓர் விடயமாகும்.
அவரை இம்சைப்படுத்தி, அவமானப்படுத்தியவர்களின் வயதை விட ஈழவேந்தன் ஐயாவின் ஈழத்தமிழ்ர்களின் விடிவுக்கான போராட்ட்தின் இடைவிடாத பங்களிப்பின் வயதோ பலமடங்கு. ஈழவேந்தன் ஐயா ஒரு பகுதிநேர ஈழப் போராளி அல்ல, தந்தை செல்வா காலம்தொட்டு இன்றுவரை தொடர்ந்து முழுநேரப் போராளியாக செயற்பட்டு வரும் ஈழத்தாயின் ஓர் இணையற்ற புதல்வன்.
இந்தத் தண்டனையைப்பெற அவர் செய்த குற்றம்தான் என்ன? தன் மொழிக்கும், தனது இனத்தின் விடுதலைக்கும் ஏறக்குறைய 60 வருடகாலமாக அயராது உழைத்தது, உழைப்பது தவறா? அல்லது தேசியத் தலைவரின் கொள்கைக்கு அமைய இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத்தை அமைக்க, தேசியத் தலைவரின் இலட்சியப் பாதையில் ஈழவேந்தன் ஐயா பயணிப்பது தப்பா? அவரின் கழுத்தைப் பிடித்து தள்ளியவர்களே சொல்லுங்கள்.
இந்த நிகழ்வு கனடா வாழ் தமிழருக்கு இழிவாக அமைந்தாலும், ஈழவேந்தன் ஐயாவுக்கு இது ஓர் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். தன் இனத்திற்காக இலங்கையில் சிங்களவனிடமும் கனடாவில் மக்களவையினரிடமும் (NCCT) அடிவாங்கிய ஒரே ஒரு மறத்தமிழனும், பாராளுமன்ற உறுப்பினரும் இவரே. தள்ளாத வயதிலும் தனியொருவனாக போரிட்டு தப்பிவந்த உங்கள் வீரத்தை, தீரத்தைக் கண்டு உலகத் தமிழினமே உன்னைச் சிரம்தாழ்த்தி வணங்குதய்யா.
ஈழவேந்தன் ஐயாவின் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தை எண்ணாது, 78 வயதிலும் காலை 8 மணிக்கே தமிழருக்கான பணியை ஆரம்பிக்கும் அவர் செயலை உணராது, அன்னாரின் அறிவை, ஆற்றலை, அனுபவத்தை மதிக்காது மக்களவையினர் செய்த மனிதாபிமானமற்ற செயலை உலகெலாம் வாழும் ஈழத் தமிழர் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசின் கல்வி, கலாச்சார, உடல்நல அமைச்சு வன்மையாகக் கண்டிக்கிறது.
எமது பண்பாட்டுக்கு முரணான, எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரான, எம் பழக்க வழக்கத்துக்கு மாறான இச்செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல், இவர்கள் எம் மக்களின் சீற்றத்துக்கு ஆளாவதை யாராலும் தடுக்கமுடியாது.
கலாநிதி ராம் சிவலிங்கம்
கல்வி, கலாச்சார, உடல்நல அமைச்சு
நாடுகடந்த தமிழீழ அரசு
r.sivalingam@tgte.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக