அண்ணன் இராணுவ முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளபோது சகோதரிக்கு இராணுவ முகாமில் கட்டாய தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகின்றது எனவும் இது உயர் கல்வியை எதிர்பார்க்கும் மாணவர்களின் மன நிலையை பெரிதும் பாதித்துள்ளதாகவும் சுதந்திரமான உயர் கல்விக்கும் குந்தகம் ஏற்படுத்தி உள்ளது எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டாய தலைமைத்துவப் பயிற்சி தொடர்பாகவே அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். சபை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது, ஐ.தே.க. உறுப்பினரான ஜோன் அமரதுங்க பொது மக்களின் அதி முக்கிய விடயம் தொடர்பாகக் கவன ஈர்ப்பு பிரேரணை ஒன்றை முன்வைப்ப தாகக் கூறி எழுந்தார். ஆனால் சபாநாயகர் அதற்கு இடமளிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.
சபாநாயக்கர் அவர்களே! நாடாளுமன்றின் நிலையியர் கட்டளையின் 17 ஆம் பிரிவின் கீழ் நாட்டின் முக்கியத்துவம் தொடர்பான ஒரு விடயம் தொடர்பாக உறுப்பினர் ஒருவருக்கு சபையின் முன் சமர்ப்பிக்கும் உரிமை உண்டு என அமரதுங்க குறிப்பிட்டார்.
இன்று பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி அளிப்பதன் மூலம் தனி மனித உரிமை மீறப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சபையில் பேச எனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஜோன் அமரதுங்க கூறினார். ஆனால், சபாநாயகர் அவரது கூற்றை நிராகரித்ததுடன் அடுத்த நிகழ்வுகளை ஆரம்பிக்கும்படி அறிவித்தார்.
இதனால் ஐ.தே.க. உறுப்பினர்கள் அனைவரும் பதாகைகளுடன் எழுந்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சில உறுப்பினர்கள் சபாநாயகருக்கு முன்னால் வந்தும் பதாகைகளைத் தூக்கிப் பிடித்தவாறு நின்றனர்.
சபாநாயகரின் உத்தரவைத் தொடர்ந்து ஆளும் கட்சி கொறடாவான தினேஷ் குணவர்த்தன 'பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்துவது'' தொடர்பான திருத்தச்சட்டமூலத்தை சபையில் முன்வைத்தார்.இந்த சட்டவரைவு தொடர்பாக எந்த விதமான விவாதமும் இடம்பெறாமல் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டதும் சபை நடவடிக்கைகள் இன்று 26 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிவரை ஒத்தி வைக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளுடன் எழுந்து நிற்க, விளையாட்டுத்துறை தொடர்பாக அமைச்சர் அளுத்கமகே சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பெரிதும் பயன்படுத்திக் கொண்டார் ஜே.வி.பி. உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க.பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவது தொடர்பாகப் பேச ஜோன் அமரதுங்காவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும், தனது ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் பெரும் பகுதியை இந்த விடயம் தொடர்பாகப் பேசுவதிலேயே செலவிட்டார்.
இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் ஆட்சேபித்த போதும் இந்த மாணவர்களும் இளைஞர்கள்தான். இவர்களுக்கும் விளையாட்டுடன் தொடர்பு உண்டு. எனவே விளையாட்டுத்துறைகள் தொடர்பாகப் பேசும்போது அவர்களைப் பற்றியும் பேசமுடியும் என்றார் அநுர குமார திஸாநாயக்க.
தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சகோதரன் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள போது தங்கைக்கு இராணுவ முகாமில் கட்டாயப் பயிற்சி என்பது விரும்பத்தகாத ஒன்று. அவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனுரகுமார திஸாநாயக்க உரையாற்றும்போதும் ஐ.தே.க. உறுப்பினர்கள் பதாகைகளுடன் எழுந்து நின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.எழுந்து நின்றவாறே அநுர குமார திஸாநாயக்காவின் பிரேரணையை வழிமொழிந்தனர். இப்பொழுதும் கூட காலம் கடந்து விடவில்லை. புத்திஜீவிகளும் மாணவர்களும் பல்கலைக்கழக சமூகமும் மாணவர்களுக்கு இராணுவ முகாமில் பயிற்சி வழங்குவதை எதிர்க்கின்றனர். எனவே அரசாங்கம் இந்தத் திட்டத்தை ரத்துச் செய்யவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியதுடன் பதாகைகளை சுருட்டிக் கொண்டு ஆசனங்களில் அமர்ந்து விட்டனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி அளிப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல. உயர் கல்வியை ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சியோ துப்பாக்கிப் பயிற்சியோ வழங்கப்படவில்லை.
எதிர்க்காலத்துக்குத் தேவையான விளையாட்டு மற்றும் கணினி ஆங்கில மொழிப்பயிற்சி என்பனவற்றுக்கான ஆரம்பப் பயிற்சிகளே வழங்கப்படுகின்றன. இதனை மாணவர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். அரசியல்வாதிகளே இதனை அரசியல்சாயம் பூசி இலாபம்தேட முனைகின்றனர். எவர் எதிர்த்தாலும் இந்தப் பயிற்சிகள் தொடரும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக