22 மே 2011

ஸ்ரீலங்காவிற்கு எதிரான பரப்புரையை முறியடிக்க சிறப்புப் பிரிவு அமைத்துள்ள மகிந்த.

சிறிலங்கா அரசுக்கு அடுத்தவாரம் தொடங்கப் போகும் புதிய தலைவலியை சமாளிக்க ஸ்ரீலங்கா அரசானது முன்கூட்டியே பரப்புரைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அடுத்தவாரம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
மே மாதம் 30ம் திகதி தொடக்கம் ஜுன் 17ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதும் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான தீர்மானம் கொண்டு வரப்படுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது போனாலும் அதனைச் சமாளிப்பதற்கான தயார்படுத்தல்களில் சிறிலங்கா அரசு தற்பொழுது இறங்கியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகளை முறியடிக்க சிறப்பு அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் ஆகியோரைக் கொண்ட உயர்நிலைக் குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக்குழு விரைவில் ஜெனிவா சென்று முன்கூட்டிய தற்பாதுகாப்பு பரப்புரை நடவடிக்கைளில் உடனடியாக இறங்கவுள்ளதுடன் சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொலிப் பதிவு போலியானது என்றும் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி காணொளி படைச் சிப்பாய் ஒருவரால் கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்டது என்றே கூறப்பட்டிருந்தது. ஆனால் அது ஒரு தரமான ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டதென்று சிறிலங்கா அரசு கூறியுள்ளது. இந்நிலையில் ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து இன்று கருத்து வெளியிட்டுள்ள சண்டே ரைம்ஸ் பத்திரிகை சிறிலங்கா அரசுக்கு புதியதொரு தலைவலி அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக தனது பத்தியொன்றில் கூறியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடருக்கு தாய்லாந்து தலைமை தாங்கவுள்ளதுடன் மேலும் 47 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக