24 மே 2011

கருணாவை அமைச்சராக்கி விட்டு என்னை சிறையில் தள்ளி விட்டனர்"குமுறும் சரத்பொன்சேகா.

தாய் நாட்டை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு சிங்களமக்களையும் படுகொலைகள் செய்த கருணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை ஒழித்த தனக்கோ சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று கொழும்பு மேல்நீதிமன்றில் நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியம் அளிக்கும்போது தெரிவித்தார்.
நாட்டையும் அழித்து, பொதுமக்களையும் அழித்து, பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்திய கருணா நீதிமன்றில் நிறுத்தப்படாமல் இலங்கை அரசாங்கத்தால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு சுகபோகம் அனுபவிக்கின்றார். ஆனால், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை ஒழித்த தான் சிறைத்தண்டனை அனுபவிப்பதாக அவர் தெரிவித்தார்.
தான் இராணுவத்தில் இருந்த போது மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், போரின்போது ஆபத்தான கட்டங்களில் இராணுவத்தினர் சிக்கி தவிக்கும்போது அவர்களை பல தடவைகள் மீட்டதாகவும், இராணுவத் தளபதியாக வருவதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த ஆபத்தான பணிகளைச் செய்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
1986ஆம் ஆண்டின் செப்டெம்பர் நடுப்பகுதியில் யாழ். மண்டைதீவு பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கும் நடவடிக்கையில் தற்போதைய பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றும் கோட்டாபய ராஜபக்ஷ அன்று கட்டளைத் தளபதியாகவும், தான் சிங்கப் படைப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்ததாகவும், மண்டைதீவை மீட்கும் பொறுப்பு அன்று மேஜர் ஜெனரல் கொப்பேகடுவவினால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அன்றைய தினம் மாலை ஊர்காவற்றுறையிலிருந்து மண்டைதீவுக்கு நுழைவாயில் வழியாகச் செல்லாமல், முழுப் படையினரும் களத்தில் இறங்கிப் போராடினர். அதன்போது இராணுவத்தினர் பலர் உயிரிழக்க நேரிட்டது. அந்த அழிவில் இருந்து காப்பாற்ற தனக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் இருந்தும் தான் படைகளுடன் மண்டைதீவு நுழைவாயில் வழியாக உள்நுழைந்து 40 நிமிடங்களில் முழுத் தீவையும் மீட்டெடுத்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
தான் தனது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் ஆகியோரிடத்தில் நேரத்தை செலவழிக்காமல் இராணுவத்துக்காக, நாட்டுக்காக சேவை ஆற்றியதாகவும், தனது தாயாரும், தந்தையும் சுகவீனமுற்று இறக்கும்போது அவர்களுக்கு அருகில் கூட இருக்க நேரம் கிடைக்கவில்லை. அந்த வேளைகளில் தான் போர்க் களத்தில் பணியாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு மூன்றாவது ஈழப்போரின் பின் யாழ்ப்பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்தோம். அதன்பின்னர் ஜனாதிபதியை சந்தித்தோம். அதன்போது சிரேஷ்ட அதிகாரிகளிடம் யுத்தம் எப்போது முடிவுறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டார். சிலர் 8 வருடங்களாகும் என்றனர். ஆனால் நான் 3 வருடங்களில் முடிவுக்கு கொண்டுவரலாம் என்றேன். அதனை நான்காவது ஈழப்போரில் சாதித்துக் காட்டினேன்.
இந்த வழக்குடன் தொடர்புடைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வேறு எவரையும் இராணுவத் தளபதியாக நியமித்திருந்தாலும் யுத்தத்தில் வெற்றிபெற்றிருப்போம் என்று கூறியுள்ளார். அவ்வாறானால், ஏன் கடந்த 30 வருட காலமாக யுத்தத்தில் வெற்றிபெற முடியாமல் போனது? பாதுகாப்புச் செயலாளரின் கூற்று பொய்யாகிவிட்டது என அவர் தெரிவித்தார்.
நான் இராணுவத்துக்காக எனது சிரமங்களையும் பாராமல் அர்ப்பணிப்புடன் செயற்பட்டபடியால்தான் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை அன்று தளபதியாக நியமித்திருந்தார். ஆனால், இன்றோ அவரும், சகாக்களும் திட்டமிட்டு என்னைத் சிறைக்குள் தள்ளிவிட்டார்கள். இது எந்த வகையில் நியாயம்?� என்றார் சரத் பொன்சேகா.
இதனையடுத்து இந்த வெள்ளைக் கொடி வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக