11 மே 2011

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை நிராகரித்த கோத்தபாய.

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கான வாய்ப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவு தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பதற்கு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை 'நாங்கள் அந்தக் கட்டத்தைத் தாண்டி விட்டோம்'என்று கூறி பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்ச நிராகரித்து விட்டுள்ளார்.
போர் பிராந்தியத்திற்கு செல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கோரப்பட்ட அனுமதியும் மறுக்கப்பட்டிருந்ததாக கசிந்த விக்கி லீக்ஸ் ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் மறுபடியும் மறுபடியும் மறுத்து வருகிறது.
இலங்கையின் உள்நாட்டுயுத்தம் மே 2009 இல் முடிவுக்கு வந்தது.
'போராளிகள் எந்த நிபந்தனையுமின்றி நடுநிலையான ஒரு மூன்றாம் தரப்பினரிடம் சரணடையத் தயாராக இருக்கிறார்கள் என்று 2009 மே 16ஆம் திகதி கே.பி என அழைக்கப்படுகின்ற செல்வராசா பத்மநாதன் என்பவரிடமிருந்து தனக்குத் தொலைபேசி அழைப்புக் கிடைத்ததாக நோர்வேத் தூதுவர் அமெரிக்கத் தூதுவருக்கு தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது என நோர்வேஜியப் பத்திரிகையான Aftenposten தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தூதுவர் இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்ட போது, தங்களுடைய அலுவலர்கள் சரணடைவதற்கு மத்தியஸ்தம் வகிக்க இராணுவ ஹெலிகொப்டர்களில் மோதல் பிரதேசத்திற்குச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்று அது தெரிவித்ததாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு செயலர் கோட்டாபேய ராஜபக்ச முதலில் இதற்கு உடன்பட்டதாகவும், அதற்கு முதல் சரணடைய விரும்பும் போராளிகளுடைய பெயர்கள் தனக்குத் தேவை என அவர் கேட்டதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தலைவராக இருந்த போல் கஸ்ரெல்லா தெரிவித்ததாகவும் அவ்வாவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் போராளிகளால் அவ்வாறான ஒரு பெயர்ப்பட்டியலைக் கொடுக்காததால் நோர்வேயால் சாதகமான முயற்சிகள் எதனையும் இது தொடர்பில் எடுக்க முடியாமல் போய் விட்டது என்றும் அவ்வாவணம் குறிப்பிடுகிறது.
ஏராளமானோர் இறந்தும் காயப்பட்டும் இருந்த போர்ப்பிராந்தியத்துக்கு உதவி புரியச் செல்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் மீளவும் மீளவும் நிராகரித்து வந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதி வழங்குவதை கடுமையாக மறுத்து வந்தார் என்றும் அக்குறிப்புக்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக