தமிழனாக இருந்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மன்னிக்க முடியாதளவுக்கு தொடர்ந்தும் குற்றம் இழைத்துவருகிறார். அதே சமயம் ஐ.நா. சபையில் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் அபத்தமானவை கண்டிக்கப்பட வேண்டியவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா நேற்று யாழ். நகரில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மேதினக் கூட்டம் நேற்று யாழ். நகர் மார்ட்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரசு சார்ந்த டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்கள் விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகிறார்.வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்கால் நோக்கி 4 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் சென்றனர். இதனை அப்போது அரச அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் உறுதிப்படுத்தியிருந்தார். அத்துடன் உலக உணவுத் திட்டத்தில் மூன்று லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பதியப்பட்டிருந்தனர்.இவ்வாறு ஆதார ரீதியாக நிரூபிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசுடன் இணைந்து 70 ஆயிரம் மக்கள் மட்டுமே அங்கு உள்னர் என எண்ணிக்கையைக் குறைத்துக் கூறினார். அது தொடர்பாக தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார். இது டக்ளஸ் தமிழ் மக்களுக்குச் செய்த முதலாவது தவறு ஆகும்.
எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டும், கலாசாரம் சிதைக்கப்பட்டும், சிங்கள மயமாக்கப்படும் நிலையில் தமிழனாக உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு உண்மையை மூடி மறைத்துக் கூறுவது எவ்வளவு பெரிய குற்றம்.வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததை ஐ.நாவின் அறிக்கை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் ஒன்றுமே இறுதிப் போரில் இடம்பெறவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டிருப்பது இரண்டாவது மாபெரும் தவறு ஆகும்.
தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல் தீர்வு காண்பதற்காக அரச தரப்பு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்தியது. அதன்போது 13 ஆவது அரசியல் திருத்தத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தியிருக்கிறார். இது அவரது மூன்றாவது மிகப்பெரிய தவறு ஆகும்.
13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்களுக்கென எந்த அதிகாரமும் இல்லாத வெறும் எலும்புக் கூடு போன்றது ஆகும்.
தமிழ்மக்களது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என இந்தியத் தலைவர்கள் அவ்வப்போது கூறியிருக்கின்றனர்.இந்த நிலையில் டக்ளஸ் தமிழ் மக்களது அரசியல் தீர்வு குறித்து அவசரப்பட்டு இப்படிக் கூறுவது ஏன்?அரசுடனும் ஏனைய அமைச்சர்களுடனும் இணைந்து சர்வதேசத்துக்கு இவ்வாறு உண்மைகளை மறைத்து டக்ளஸ் தேவானந்தா நடந்துகொள்வதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என மாவை சோனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக