10 மே 2011

பொதுமக்களை நிர்ப்பந்தித்து கையெழுத்து வேட்டை,மாவை சேனாதிராஜா கண்டனம்.

தமிழ் மக்களின் விருப்பத்துக்குமாறாக, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பிரதி அமைச்சர் ரத்நாயக்கா தலைமையிலான குழுவினர் பொதுமக்களை நிர்ப்பந்தித்து கையொப்பம் பெற்றமை ஜனநாயக விரோதமான செயற்பாடாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் மாவை சேனாதிராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதியமைச்சர் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் யாழ்.நகர வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றமை கவலைக்குரியதாகும்.
நிபுணர் குழு அறிக்கையைத் தமிழ் மக்களின் சார்பில் வரவேற்பாதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் கருத்துக்கு மாறாக வெளியிடங்களில் இருந்து வந்து கையொப்பத்தை பெறுவது மக்களின் உண்மையான கருத்தை வெளிப்படுத்தாது.இந்தச் சம்பவம் படையினர், காவற்துறையினர் ஆகியோரின் பிரசன்னத்துடன், நிர்ப்பந்தத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
இது ஒரு ஜனநாயக விரோதச் செயற்பாடு. கருத்துக்களை சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் வெளிப்படுத்துவதே நியாயமானது. மக்களை நிர்ப்பந்தித்து கையொப்பம் பெற்ற இந்தச் செயலை நாம் கண்டிப்பதுடன், இந்த நடவடிக்கைக்கு துணை போக வேண்டாம் என இங்குள்ள நிறுவனங்கள், அமைப்புகளை வேண்டுகிறோம் என மாவை சேனாதிராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக