30 மே 2011

ஸ்ரீலங்கா புரிந்த படுகொலை காணொளி உண்மையென நிரூபணம்.

ஜெனீவாவில் இன்று (30) ஆரம்பமாகிய .ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விவகாரமே முதலில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்கா இராணுவத்தினரால் தமிழ் கைதிகள் படுகொலை செய்யப்படும் காணொளி காட்சியுடன் ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று வார கூட்டத்தொடர் அங்கு பல வாதப்பிரதி வாதங்களை தோற்றுவித்துள்ளது.
சிறீலங்கா படையினரின் இந்த படுகொலைக் காணொளி உண்மையானது என்பதை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்து உரையாற்றிய ஐ.நாவின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் விவகாரத்திற்கான பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்ரோப் ஹெயின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐந்து நிமிடங்கள் பதிவு செய்யப்பட்ட அந்த காணொளி உண்மையானது என தெரிவித்துள்ள அவர், சிறீலங்கா அரசின் பொய் பிரச்சாரங்களை முறியடித்துள்ளார்.
காணொளி உண்மையானது என்பதை சுயாதீன நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்தாக தெரிவித்துள்ள ஹெயின்ஸ், சிறீலங்காவில் வன்முறைகள் எவ்வளவு உக்கிரமாக நடந்துள்ளன என்பதை இது எடுத்துக்காட்டுவதாகவும், இது ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் எனவும் தெரிவித்துள்ளார்.
காணொளி போலியானது, அதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிகழ்ச்சி நிரலில் இணைக்க முடியாது என சிறீலங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் போட்ட கூச்சலை தென்ஆபிரிக்காவின் சட்டத்துறை பேராசிரியரான ஹெயின்ஸ் இன்று முறியடித்துள்ளார்.
மனித உரிமைகள் சபையில் அவர் ஆற்றிய உரையின் இறுதியில் காணொளி உண்மையானது என்பதை தெளிவுபடுத்தியதுடன், சிறீலங்காவின் வன்முறைகளையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள், தமக்கு புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மறுஆய்வு செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிள்ளையின் கருத்தை வலுவாக ஆதரித்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் தமது கருத்துக்களையும் தெரிவித்திருந்தன.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு சமர்பித்துள்ள பரிந்துரைகளை சபை ஆய்வு செய்யவேண்டும் என அமெரிக்கத் தூதுவர் எயிலீன் சம்பர்லின் டொனகோ தனது உரையில் தெரிவித்துள்ளார்.
போரில் வன்முறைகளை யார் மேற்கொண்டது என்பது இங்கு முக்கியமல்ல, அங்கு மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் தொடர்பில் அனைத்துலக தரத்திலான விசாரணைகள் அவசியம் என்பதே முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், சிறீலங்கா விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்வதற்கு ஆபிரிக்க மற்றும் அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிறீலங்காவின் அமைதி முயற்சிக்கு அனைத்துலக சமூகம் ஆதரவுகளை வழங்கவேண்டும் என பாகிஸ்தான் தூதுவது சமீர் அக்ரம் தெரிவித்துள்ளார். அரபு நாடுகள் சார்பாக பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை சரிபார்க்கப்பட்ட தகவல்களை கொண்டது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக