இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என அக்கட்சி கேட்டுள்ளது.
இந்த நிபுணர் குழுவில் யாஸின் சூகா என்ற முன்னணி தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் இடம்பெற்றுள்ளார்.
இலங்கையில் இறுதி கட்ட யுத்தத்தின் சமயத்தில் இலங்கை அரச படையினரும் சரி விடுதலைப் புலிகளும் சரி இருதரப்பாருமே சர்வதேச மனித உரிமை விதிகளையும் மனிதாபிமானச் சட்டங்களையும் மோசமான வகையில் மீறியிருந்தனர் என்று இந்த நிபுணர் குழு முடிவு தெரிவித்திருந்தது.
இந்த சட்டமீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் அமையக்கூடியவை என்றும் அந்த நிபுணர் குழு கூறியிருந்தது.
இந்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளுக்கு தாங்கள் முழுமையான ஆதரவு தருவதாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தமிழ்ச் சமூகத்தின் முக்கியக் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கம் உண்மையான ஒரு சமூக நல்லிணக்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக