05 மே 2011

போர்க் குற்ற விசாரணைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடையாக விளங்கக் கூடாது.

அன்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு!
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் பற்றிய பொறுப்பிற்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்களின் அறிக்கைக்கு பங்கம் விளைத்தக்கதாக எந்த காரணத்துக்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படக்கூடாது என்றும், குறிப்பாக, சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகளும் அந்த காரணங்களுக்குள் அடங்கும் என்றும், ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு வேண்டிக்கொண்டுள்ளது. சர்வதேச ஆணைக்குழு ஒன்று சிறிலங்கா போர்க்குற்றங்களை விசாரணை செய்ய அமைக்கப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
போரின் இறுதிநாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதை இந்த ஐ.நா. அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் பாலியல் வல்லுறவுகள், மருத்துவமனைகளும் பொதுமக்களும் அடையாளம் காணப்பட்டு குண்டுவீசி அழிக்கப்பட்டது, உணவு தடுக்கப்பட்டு மக்கள் பட்டினியால் மரணிக்க செய்யப்பட்டது, மருந்துகள் தடுக்கப்பட்டு மக்கள் இரத்தம் பெருகி இறக்க வழி செய்தது ஆகியவற்றை இந்த அறிக்கை குறிப்பிட்டு காட்டியுள்ளது. மேலும், கற்றறிந்த பாடங்களுக்கும் மீளிணைதலுக்குமான ஆணைக்குழு சுதந்திரமான ஆணைக்குழு அல்ல என்றும் இந்த ஐ.நா. அறிக்கை குறை கூறியுள்ளது. சிறிலங்கா அரசின் கடுமையாள எதிர்ப்புக்கு மத்தியில் பல சர்வதேச நிறுவனங்களின் முயற்சியின் விளைவாகவே இந்த ஐ.நா. அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக்கொள்ள வேண்டும்.
சிறிலங்கா அரசுடன் தொடரும் பேச்சுவார்த்தைகளில் சில விட்டுக்கொடுப்புகளுக்கு பதிலீடாக போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுக்க கூடும் என கருதப்படுகின்றது. சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவதை எவ்வாறாயினும் தடுப்பதற்கு சிறிலங்கா அரசு தீவிரமான முயற்சிகளை செய்துவருவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக்கொண்டு, அதற்கு இடங்கொடுக்க கூடாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகளில் செய்யப்படும் எந்தவிதமான விட்டுக்கொடுப்புகளுடனும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவது சம்பந்தப்படுத்தப்பட மாட்டாது என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
சிறிலங்கா அரசுடன் ஏதாவது உடன்பாட்டை முடிவு செய்தவுடன் சர்வதேச சமுகம் எமது விடயங்களில் இருந்து வெளியேறிவிடும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்து கொள்ளவேண்டும். இதனை தவிர்த்து கொள்வதற்காக, எந்தவிதமான உடன்பாட்டுக்கும் சர்வதேச சமுகம் பிணையாளராக செயற்பட வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுக்க முடியாத கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். எந்தவிதமான உடன்பாடும், சிறிலங்கா அரசு உடன்பாட்டின் அம்சங்களை நிறைவேற்ற தவறும் போது அதனை கையாள்வதற்கு சர்வதேச சமுகம் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட உத்தரவாதங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
நன்றி.
ஒபாமாவுக்கான தமிழர்கள்:
தமிழ் அமெரிக்கர்களின் ஒரு அரசியல் செயற்பாட்டு குழுவான ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு, ஹில்லரி கிளின்ரனையும், பரக் ஒபாமாவையும் அமெரிக்க மக்களாட்சி கட்சியின் வேட்பாளர் தெரிவிலும் பின்னர் 2008 தேர்தலிலும் ஆதரித்தது. சிறிலங்காவின் உள்நாட்டு போரில் இறுதி வாரங்களில் 70.000 க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என நாம் நம்புகிறோம். வெற்றி கொண்ட சிறிலங்கா சிங்களவரின் செயற்பாடுகளை நாம் அவதானித்ததில் இருந்து, இந்த கவலைக்குரிய தீவு இரண்டு நாடுகளாக பிரிவதே தமிழர்கள் அங்கு பாதுகாப்பாக வாழ வழிவகுக்கும் என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக