11 மே 2011

சூடானைப்போல் ஒரு தீர்மானம் இலங்கையிலும் ஏற்படுத்த அமெரிக்காவிடம் வலியுறுத்தப்படுகிறது.

சூடானில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை போன்றதொரு தீர்மானத்தை சிறீலங்கா விடயத்திலும் கொண்டுவருவது தொடர்பில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் த ஐலன்ட் நாளேடு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எதிர்வரும் 18 ஆம் நாள் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தயாராகி வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பே ஏற்பாடு செய்துள்ளது. ஐ.நாவுக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை பான் கீ மூனுக்கு கொடுப்பதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முயன்று வருகின்றனர்.
தடைசெய்யப்பட்ட இராசாயண ஆயுதங்களை பயன்படுத்தியமை.
40,000 மக்களை படுகொலை செய்தது.
தமிழ் மக்களையும், முன்னாள் விடுதலைப்புலிகளையும் துன்புறுத்தியமை.
தமிழ் பெண்களையும், விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளையும் கூட்டமாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியமை.
நீதிக்குப்புறம்பான படுகொலைகள்.
போன்றவற்றையே புலம்பெயர் தமிழ் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேசயம், சூடானில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை போன்றதொரு தீர்மானத்தை சிறீலங்கா விடயத்திலும் கொண்டுவருவது தொடர்பில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றது.
அதற்கான அழுத்தங்களை தமிழ் மக்கள் அமெரிக்க அரசுக்கு ஏற்படுத்தி வருகின்றனர். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடந்த தேர்தலில் ஒபாமாவை வலுவாக ஆதரித்த அமைப்பாகும். என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக