06 மே 2011

பிளேக் தமிழ் மக்களை பிழையாக வழி நடத்தக்கூடாது.

போர் முடிவடைந்தவுடன் உடனடியாகவே இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் என்ற எண்ணத்தை அப்போது ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் வெளியிட்டு பிரச்சாரப்படுத்தியதனூடாக இந்நாட்டின் தமிழ் மக்களை அவர் தவறாக வழிநடத்தி உள்ளார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளராக முன்னர் இருந்த கொண்டலிஸா ரைஸ் மனித உரிமைகளினதும் சுதந்திரத்தினதும் காவலன் என்று மனோ கணேசனை முன்னர் ஒரு முறை பாராட்டியிருந்தார்.
மனோகணேசன் தனது அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது, போர் நடைபெற்ற காலப்பகுதி முழுவதும் பிளேக், 13வது திருத்தச் சட்டம் பற்றியே உபதேசித்து வந்தார். அவர் சென்னைக்கு விரிவுரை ஒன்றிற்காகச் சென்றிருந்த போது கூட இலங்கைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அவர் 13வது திருத்தச் சட்டத்தையே அரசியல் தீர்வாக வலியுறுத்தினார்.
அன்று அவர் 13வது திருத்தச் சட்டத்திற்குமதிகமான அதிகாரங்கள் பற்றி உத்தரவாதம் வழங்கி இருந்தார். ஐக்கிய அமெரிக்கா போருக்கு ஆதரவளிப்பதனை நியாயப்படுத்தும் நோக்கிலேயே இந்த 13வது திருத்தச் சட்டம் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். இவ்வளவு அழிவுகளும் நடைபெற்று போரும் முடிவடைந்த பின்னரும் கூட இந்நாட்டில் உள்ள தமி;ழ் மக்கள் 13வது திருத்தச் சட்டத்தின் அறிகுறியைக் கூடக் காணவில்லை.
போர் நடைபெற்ற காலப்பகுதி முழுவதும் நாங்கள்பொதுமக்களுடைய பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தோம். மக்கள் கண்காணிப்புக்குழுவில் இருந்த நாங்கள் எங்களுக்கு வந்த உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கூட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராகப் போராட்டத்தை நடாத்திக் கொண்டே இருந்தோம். அதன் போது தான் ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திரத்தைக் காப்பதற்கான விருது எனக்கு அளிக்கப்பட்டது. அப்போது தூதுவராக இருந்த பிளேக் இதற்குக் காரணமாக இருந்தார். இந்த விருது என்னில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக எனக்கு மேலும் அச்சுறுத்தல்களையே கொண்டு வந்தது.
இந்த விருதுக்கான நிகழ்வை நாம் இரத்து;ச செய்தோம். ஆனால் பிளேக் இந்த விருதை தனது அலுவலகத்தில் தனது தனிப்பட்ட அலுவலர் முன்னிலையில் வைத்து கட்டாயப்படுத்தி எனக்கு வழங்கினார். பின்னர் தான் நாங்கள் உணர்ந்தோம் இந்த விருது அவருடைய ஒரு பிரச்சாரத் தாக்குதல் என. ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் தனக்குச் சாதகமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்தது. அதேவேளை உண்மையிலேயே அமெரிக்க அரசு பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்கள் பற்றி அக்கறைப்படவில்லை. போருக்கான அவர்களுடைய ஆதரவு நிபந்தனைகள் எதுவுமற்றதாக இருந்தது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக இறுதி நேரத்தில் போரை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இது வன்னி மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதல்ல. எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைப் பாதுகாப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. மக்களைப் பாதுகாப்பதற்கான காலம் மிகவும் கடந்திருந்தது. மீளத்திரும்ப முடியாத ஒரு கட்டத்திற்குப் போர் சென்று விட்டது. இப்போது இன்னொரு பிரச்சாரப் பணி நடைபெற்று வருகிறது. இது புலம் பெயர்ந்த தமிழர்களைச் சாந்தப்படுத்துவதை நோக்காகக் கொண்டது.
இவையெல்லாவற்றுக்குமப்பால் ஐநா நிபுணர்களின் குழு அறிக்கை இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒன்று பொறுப்புக் கூறும் கடப்பாடு பற்றியது.
இரண்டாவது ஒரு அரசியல் தீர்வுக்கான வழிகளைத் திறப்பது பற்றியது.
போர் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், இலங்கைச் சமூகம் இனச்சிக்கலால் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளது. ஒரு உண்மையான அரசியல் தீர்வு ஒன்றினாலேயே இது சரி செய்யப்படக் கூடியது.
போருக்கு நிபந்தனை எதுவுமற்ற ஆதரவை வழங்கியவர்களுக்கு இலங்கைத் தமிழ் சமூகம் குறித்த பொறுப்புணர்வு ஒன்று இருத்தல் அவசியம். ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பதில் தீர்மானகரமாகச் செயலாற்றுவதில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் எவரும் திருப்பித் தரப் போவதில்லை.
ஒரேயொரு சாத்தியமான வழி மட்டுமே இப்போது உள்ளது. அது தான் ஒரு நியாயமான அரசியல் தீர்வு.
இது தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துடன் தீர்மானகரமான செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும். ஐக்கிய அமெரிக்காவுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தனது முன்னைய உபதேசத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் இதுவே.
அவர் மீளவும் ஒரு முறை தமிழ் மக்களைத் தவறாக வழிநடாத்தக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக