யாழ். மாவட்டம், கந்தரோடையில் இடம்பெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொடர்பில் சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளியான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் இந்தச் செய்தி தொடர்பில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் புஷ்பரட்னம் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
கந்தரோடையில் புராதன காலத்துக் குடியிருப்பு மற்றும் பௌத்த குருமாரின் புராதன வாழ்விடம் என்பன அமைந்திருந்தமைக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க தெரிவித்தார் என்று லங்காதீப என்ற சிங்களப் பத்திரிகை தனது 17ஆம் திகதிய பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியை யாழ்.பல்கலைக்கழக தொல்லியல்துறை மறுத்துள்ளது. அதேவேளை, குறித்த செய்தி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அது பொய்யான செய்தி கலாசார அமைச்சின் அனுமதியின்றி நாம் எந்தவொரு ஆய்வு முடிவுகளையும் வெளியிடுவதில்லை என்று தெரிவித்தார் பிரதி ஆணையாளர் நிமல் பெரேரா.
அத்தகைய எந்த ஒரு ஆதாரமும் கந்தரோடையில் இருந்து இதுவரையில் பெறப்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை என்று யாழ். பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வுத்துறையும் அடித்துக் கூறியது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் பெருங்கற் கால பண்பாட்டை ஒத்ததானகுடியிருப்புக்கள் அங்கிருந்ததற்கான ஆதாரங்களே கிடைத்துள்ளன. பௌத்த அடையாளத்துக்கான எவையும் கிடைக்கவில்லை. அண்மையில் வெண்கலச் சூலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது'' என்று ஆய்வுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
'கந்தரோடையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வுப் பிரிவின் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் மாணவர்களும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்'' என்று லங்காதீப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணத்திடம் கேட்டபோது, 'ஆய்வின் இறுதியில் பல்கலைக்கழகமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து முடிவுகளை வெளியிடுவது என்பதே ஒப்பந்தம். அப்படியிருக்கையில் இப்படி ஒரு செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது'' என்றார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள கந்தரோடை தொல்லியல் சான்றுகள் புத்த சமய காலத்திற்கு முற்பட்ட பெருங்கற்காலத்திற்குரியவை என்று பல வரலாற்று ஆய்வாளர்களும் வரலாற்றுப் பேராசிரியர்களும் தெரிவித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் மிகப் பழைய நாகரீகத்திர்க்குரிய ஆதாரமாக அமைந்துள்ள இந்தச் சான்றுகள் தமிழ்பௌத்தத்திற்குரியவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக