22 மே 2011

யாழில் மீண்டும் குடும்பப் பதிவுகளை தொடங்கியுள்ள சிங்களப்படைகள்.

யாழ். குடாநாட்டில் குடும்பப் பதிவுகள் மற்றும் குடும்பப் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கைகளைப் படைத்தரப்பு சத்தமின்றி மீண்டும் ஆரம்பித்துள்ளது எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக வரணி மற்றும் சங்கானை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேரடியாக இப்பதிவு மற்றும் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
முன்னதாகப் பெருமெடுப்பில் இராணுவப் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கெதிராக நீதிமன்றம் சென்றிருந்தது. இதையடுத்து பதிவு நடவடிக்கைகளை தாம் கைவிடுவதாக படைத்தரப்பு அப்போது அறிவித்திருந்தது.
எனினும் வன்னியில் பெரும்பாலான குடும்பங்களை பதிவு செய்வதிலும் குடும்ப அங்கத்தவர்களை உள்ளடக்கி புகைப்படம் பிடித்து தகவல் திரட்டுவதிலும் படைத்தரப்பு தொடர்ந்தும் ஈடுபட்டே வருகின்றது. இந்நிலையிலேயே யாழ். குடாநாட்டிலும் கிராமங்கள் தோறும் சத்தமின்றி பதிவு நடவடிக்கைகளை மீண்டும் படைத்தரப்பு ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக வரணி மற்றும் சங்கானைப் பகுதிகளில் இப்பதிவு நடவடிக்கைகள் பெரும் பாலும் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படை முகாம்களிலிருந்து நேரடியாக வருகை தரும் படையினரே படிவங்களை விநியோகித்து விபரங்களைத் திரட்டி வருவதாகவும் புகைப்படங்களைத் தாமே கமரா மூலம் எடுத்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது இவ்வாறிருக்கையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் யாழ். குடாநாடு முழுவதிலும் பதிவுகள் ஆட்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்தந்த பகுதிகளுக்கான கிராமசேவகர் பிரிவுகளில் இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து சங்கானை பிரதேச செயலாளர் திருமதி பாபு கூறுகையில், கடந்த சில நாட்களாக யாழ். குடாநாடு முழுவதும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பதிவு நடவடிக்கையானது பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பதிவுக்கான விண்ணப்பங்கள் இங்குள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
யாழ்.குடாநாட்டிலுள்ள மக்களின் விபரங்களை கணனி மயப்படுத்துவதற்காகவே இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக