03 மே 2011

ஒசாமா மீதான தாக்குதலை நேரடியாக பார்த்த ஒபாமா.

அல் குவைதா அமைப்பின்தலைவர் ஒசாமா பின் லேடன் மீதான முற்றுகையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிரத்தியேக நேரடி ஒளிரப்பு மூலம் வெள்ளை மாளிகையிலிருந்து பார்வையிட்டுள்ளார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்த 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அபோதாபாத்தில் ஒசாமா தங்கியிருந்த பாரிய வீட்டின்மீது அமெரிக்க கடற்படையின் விசேட தாக்குதல் அணியான – கடல், ஆகாய, தரை தாக்குதல் குழு) பாகிஸ்தானின் நேரப்படி நேற்று திங்கட்கிழமை அதிகாலை முற்றுகை மேற்கொண்டது.
தாக்குதலில் பங்குபற்றிய அமெரிக்க படைவீரர்களின் தலைக் கவசங்களில் வீடியோ கமெராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. இதன்மூலம் பெறப்பட்ட ஒளிப்பதிவுகள் செய்மதி ஊடாக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பப்பட்டன.
அப்போது அமெரிக்காவில் நேரம் ஞாயிறு பிற்பகலாக இருந்தது. இத்தாக்குதல் ஆரம்பிப்பதற்கு சற்றுமுன்னர் வெள்ளை மாளிகயிலுள்ள அறையொன்றில் ஜனாதிபதி பராக் ஒபாமா, உப ஜனாதிபதி ஜோ பிடென், பாதுகாப்புச் செயலாளர் ரொபர்ட் கேட்ஸ், இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் படை உயரதிகாரிகள் சிலர் கொண்ட சிறிய குழுவொன்று ஒன்றுகூடினர்
அந்த அறையிலிருந்து சுமார் 11,000 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் நடைபெறும் தாக்குதல் நடவடிக்கைகளை ஒபாமாவும் ஏனையோரும் பார்வையிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.’தாக்குதலின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை நேரடியாக நாம் பார்வையிட முடிந்தது’ என அமெரிக்காவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதி ஒபாமாவின் பயங்கரவாத ஒழிப்பு விவகார ஆலோசகருமான ஜோன் பிரென்னன் தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின் லேடனை காப்பாற்றுவதற்கு அவரின் மனைவிகளில் ஒருவர் மனிதக் கேடயமாக ஒசாமாவின் முன்னால் நிற்க முயற்சித்ததாகவும் ஆனால் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படை வீரர் ஒருவரின் ஏகே 47 துப்பாக்கியினால் சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒசாமாவின் இடது கண்ணில் துப்பாக்கி ரவை பாய்ந்தது. பின்னர் ஒசாமா கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்காக மீண்டுமொரு தடவை அவ்வீரர் நெஞ்சில் சுட்டாராம்.
இத்தாக்குதலில் ஒசாமா பின்லேடன், அவரின் மனைவி, மகன்களில் ஒருவர், மற்றும் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக