சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னோடியாக வன்னிப் பகுதியில் அதிகளவான பிரதேசங்களை தற்போது இராணுவம் தமது தேவைகளுக்காக கையகப்படுத்தியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக, சமய நிறுவனங்கள் குரல்கொடுக்க வேண்டும். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பிரமுகரும் புவியியல் துறைப் பேராசியர் இரா.சிவசந்திரன் மேதின கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
யாழ். நகரிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மேதின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டார்.மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது. கிழக்கில் அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதியில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வவுனியாவிலும் 30 வீதமான சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மன்னார் பூநகரி வீதி (ஏ32) நவீன முறையில் செப்பனிடப்பட்டு வருகிறது. அந்தப் பிரதேசத்தில் சிங்களக்குடியேற்றம் இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. பூநகரியில் மர முந்திரிகை செய்கைக்காக 2 ஆயிரம் பரப்பளவு நிலத்தை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. மல்லாவி, துணுக்காய்ப் பகுதியில் விவசாயப்பண்ணைக்கு என அதிகளவு நிலத்தை இராணுவம் எடுத்துள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகரை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத் தில் 70 ஆயிரம் இராணுத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதே வேளை அங்கு 70 ஆயிரம் பொது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மக்களும் இராணுவமும் சம அளவில் உள்ளனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் எப்படி மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.எனவே வன்னிப் பெருநிலப்பரப்பில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சுதந்திரமாகச் சென்று பணியாற்ற அனுமதி கிடைக்க வேண்டும்.
இவற்றுக்காக பல நிறுவனங்கள், அமைப்புகள் உருவாகி குரல் கொடுக்க வேண்டும்.அத்துடன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மறக்கப்பட முடியாதவை. தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக