26 மே 2011

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப த.தே.கூ.செயற்பட்டால் யுத்த காலத்தில் ஏற்பட்ட கதியே ஏற்படும்.

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுமாயின் பேச்சுவார்த்தையிலிருந்து உடனடியாகவே விலகிக் கொள்ளவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பேச்சுவார்த்தைச் சூழலில் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு தீர்வுத் திட்டத்தை உடனடியாக முன்வைத்து பேச்சுவார்த்தையில் உடனடியாக ஈடுபடவேண்டுமெனவும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனைத் தெரிவித்தார் ஸ்ரீகாந்தா. இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மைக்காலங்களில் இப் பேச்சுவார்த்தையானது பிரயோசனம் அற்றது எனவும், இதனை இலங்கை அரசாங்கமே முறித்துக்கொள்ளும் எனவும் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இறுதி யுத்தத்தின் பின்னர் ஐ.நா.வின் விசாரணைகளின்படி அவர்களின் ஆலோசனைகளை வைத்துக்கொண்டு தற்போதய பேச்சுவார்த்தையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பேச்சுவார்த்தையின்போது சர்வதேச சமூகத்தின் பிரசன்னமும் தேவை.
கடந்த காலங்களில் குறிப்பாக 70ம் ஆண்டுக்குப் பின்னரும், 80ம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.ஆர்.உடன் அன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிரதான கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி அடிக்கடி பேச்சுவார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தது. இறுதியில் இடம்பெற்ற கதி இந்தப் பேச்சுவார்த்தையிலும் நடக்கக் கூடாது. இதற்குத் தமிழ் மக்கள் விடவும் கூடாது. பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் முடித்துக் கொள்ளுமென்றோ, பிரயோசனம் அற்றது என்று கூறுவது அனைத்து மக்களையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுவதானால் யுத்த காலத்தில் நடந்த கதியே மீளவும் ஏற்படும். இனியும் இந்தியாவை நம்பிக்கெட முடியாது. இலங்கை அரசாங்கத்துடன் சீனா, பாக்கிஸ்தான் உறவு கொள்வதைக் காரணங்காட்டி இந்தியாவும், சீனாவைக் காரணங்காட்டி பாக்கிஸ்தானுடன் இந்தியாவும் இராஜாங்க உறவுகளை மேற்கொண்டு வருகிறது. சாகச அரசியலுக்கு இனி இடமில்லை.
நாம் பொறுப்புள்ள அரசியற் கட்சி என்ற வகையில் இனப் பிரச்சினைத் தீர்வை உடனடியாக முன்வைக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு அவர்களுடைய மரபுவழிப் பிரதேசத்தில் சுயாட்சி செய்வதற்கான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் என். சிறிகாந்தா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக