14 மே 2011

வலிகாமத்தில் பல கிராமங்கள் படைகள் வசம்.

யாழ்மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் 26 தமிழ் கிராமங்களை சிறீலங்கா இராணுவத்தினர் கையகபப்படுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த சிறீலங்கா அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் சகோதரருமான பசில் ராஜபக்சா வடக்கில் உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லை என தெரிவித்திருந்தார்.
நாடு முழுவதும் அமைதிவலையம் எனவும் அவர் பொய்யுரைத்திருந்தார். ஆனால் யாழ் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் பகுதியில் 26 கிராமங்கள் சிறீலங்கா படையினர் வசம் உள்ளன. அங்கிருந்து 17,108 குடும்பங்களைச் செர்ந்த 43,700 தமிழ் மக்களை சிறீலங்கா அரசு துரத்தியுள்ளது.
எனினும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பலர் வெளிநாடுகளிலும் வாழ்வதால் அதன் எண்ணிக்கை 70,000 ஆக இருக்கும் என நம்பப்படுகின்றது. இந்த பகுதிகளில் படையினரால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அவர்களே அகற்றுவதற்கு 8 வருடங்கள் எடுக்கும் என சிறீலங்கா அரசு தெரிவிப்பதால் தாம் தமது வீடுகளை மீண்டும் பார்க்க முடியாது போகலாம் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலையத்தின் எல்லைகளில் உள்ள 13 கிராமங்களில் மீள்குடியேற்றங்களை மேற்கொள்வதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளபோதும், அந்த பிரதேச மக்களும் மிகப்பெரும் நெருக்கடிகளை சந்தித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக