16 மே 2011

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கண்டனம்.

போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் தேவை என்ற ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்தும் கண்டித்தும் கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இன்று இந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வடபகுதியிலிருந்து சென்றிருந்த தமிழ்த்தரப்பு சட்டத்தரணிகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக துணிந்து நின்று செயற்படுவதிலும் சட்டத்துறை சார்ந்தவர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. ஆனால் அதனை மறந்து எமது சட்டத்தரணிகள் கொழும்பில் செயற்பட்டிருப்பது வேதனைக்கும் வெட்கத்திற்குரியதும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களது முள்ளிவாய்க்கால் படுகொலை சர்வதேச ரீதியாக நீதி வழங்க வேண்டும் என்று உலகெங்கும் குரல் ஒலித்துக் கொண்டிருக்கையில் சட்டத்தரணிகள் சார்ந்த எம்மவர்கள் செயற்படும் விதத்தையே எமது கட்சி கண்டிக்கின்றது என்றும் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்க்க துணிவில்லாது விட்டாலும் அவற்றிலிருந்து ஒதுங்கி நிற்பதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரில் நிற்கும் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டை யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவி செல்வி சாந்தினி அபிமன்னசிங்கம் மறுதலித்திருக்கின்றார். அவ்வாறு தமது பிரதிநிதிகள் எவரும் அக்கூட்டத்திற்கு சென்றிருக்கவில்லை எனவும் தான் அறிந்த வரையில் தமிழ்த் தரப்பு சட்டத்தரணிகள் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை எனவும் வழமையாக இடம்பெறுகின்ற கூட்டம் ஒன்றிற்கென அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் யாராவது விசயம் தெரியாது போய் மாட்டுப்பட்டிருக்கலாமேயன்றி தமிழ் சட்டத்தரணிகள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக