
பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்,
கடந்த 2010 இதே மே 18ஆம் தேதி மதுரையில் நாம் தமிழர் என்கிற இயக்கம் அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது. கட்சி தொடங்கி ஏழே மாதத்தில், இரண்டு மாத போராட்டத்தில் ஐந்து மாதம் சிறைப்படுத்தப்பட்டேன். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தேர்தல் வந்துவிட்டது.
ஓராண்டுக்குள் என்ன சாதித்தாய் என்று எல்லோரும் கேட்கலாம். என் இனத்தின் எதிரிகளை கொன்றொழித்தோம். வீழ்த்தி காட்டினோம். அரசியல் களத்திலே எல்லோரும் தேர்தலை, தேர்தலாக பார்த்தார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி அதை யுத்த களமாக பார்த்தோம். யாருக்கு யாருக்குமான யுத்தம். என் இனத்தை கொன்ற காங்கிரஸ் கட்சிக்கும், இன உணர்வுள்ள தமிழர்களுக்கான யுத்தம்.
இந்த தேர்தலை பிரபாகரன் தம்பி சீமானுக்கும், காங்கிரஸ் தலைவி சோனியா மகன் ராகுல் காந்திக்கும் நடக்கும் சண்டையாகத்தான் நான் கருதினேன். என் தாய் ஈழம், தமிழ் ஈழம் மண்ணில் என் இனத்தை கொன்று ஒழிப்பதற்கு, சிங்கள இனவெறி அரசுக்கு இருகரமும் கொடுத்து உதவிய காங்கிரஸ் கட்சி, என் இன்னொரு தாய் ஈழம், தமிழகத்திலே நிர்மூலமாக வீழ்த்தி காட்டுவேன் என்ற லட்சிய உறுதியோடுதான்.
என் அண்ணன் பிரபாகரனை பெற்ற வீரமாதா திருமதி பார்வதி அம்மாள் அவர்களுடைய புனித சாம்பல் எனக்கு வந்தது. என்னைப்போலவே அண்ணன் நெடுமாறன், அண்ணன் வைகோ அவர்களுக்கும் வந்தது. அவர்கள் இருவரும் கடல் நீரிலே கரைத்தார்கள். ஆனால் நான் பத்திரமாக இன்னும் என் அறையில் வைத்திருக்கிறேன். என்றைக்கு என் லட்சியத்தை தொடுகிறேனோ, அன்றுதான் என் தாயின் சாம்பலை நான் கரைப்பேன்.
என் தாயின் சாம்பல் மட்டுமல்ல. தமிழ் சொந்தங்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்களை உசுப்பிவிடுவதற்காக தீக்குச்சாக மாறி வெந்து செத்தானே என் தம்பி முத்துக்குமாரின் புனித சாம்பலும் என்னிடத்தில்தான் இருக்கிறது. அதையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். என் இனம் என்று விடுதலை அடைகிதோ, அன்றுதான் அந்த சாம்பலை நான் கரைப்பேன். அதுவரை ஒவ்வொரு போருக்கும், ஒவ்வொரு களத்திற்கும் நான் செல்லும்போது அந்த சாம்பல் மீது சத்தியம் செய்துதான், நானும் என் தம்பிகளும் களத்திலே இறங்குவோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக