தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாக அமைந்த முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போதான 40,000ற்க்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலையை நினைவுகூர நாடு கடந்த அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று வட அமெரிக்காவின் அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் நாடு கடந்த அரசோடு கரம் கோர்த்து செயலாற்றுகின்றன. நாடுகடந்த அரசு, அமெரிக்க தமிழ் அரசியல் விவகார அமைப்பு, கனடியத் தமிழ்க் காங்கிரஸ், கனடிய தமிழ் தேசிய மக்களவை, இலங்கைத் தமிழர் சங்கம், நாம் தமிழர் இயக்கம் - வட அமெரிக்கா, உலகத் தமிழ் அமைப்பு அமெரிக்கா, ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு, இனப்படுகொலைக்கெதிரான தமிழர் அமைப்பு என சகல அமைப்புகளும் ஒரே குரலில் தமிழர்களின் வேதனைகளை உலகிற்கு ஓங்கிச் சொல்ல முடிவெடுத்துள்ளன.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த இனப்படுகொலை மனித குலத்திற்கும் சர்வதேச சட்டங்களிற்கும் எதிரான ஒரு கோர வன்முறை எனச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபை இந்தப் படுகொலையைத் தடுக்கத் தவறி விட்டது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.ஈழத்தில் வாழும் தமிழர்களின் குரல் அடக்குமுறைகளாலும், மிரட்டல்களாலும் அடக்கப்பட்டுள்ள இப் பொழுதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களின் குரலாக எமது விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் காத்திரமான பங்களிப்பை செய்யவுள்ளதாக மேற்படி அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் சார்பாகவும் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 18ம் திகதி புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து 4 மணி வரை ஐ.நாவிற்கு முன்னால் நீதி வேண்டிய போராட்டமும், இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரை மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி நிகழ்வும் அதே இடத்தில் இடம்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக