சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் ஆளும்கட்சியினர் நடத்திய மேதின ஊர்வலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கும், அதன் செயலாளர் நாயகத்திற்கும் எதிராக கடுமையான கோசங்கள் எழுப்பப்பட்டதாக கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நேற்று (01) நடைபெற்ற ஊர்வலத்தி;ல் உரையாற்றிய சிறீலங்கா அரச தலைவர், ஐ.நாவை நேரிடையாக தாக்காது, மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார்.
நாம் எமது நாட்டை கட்டியெழுப்பும்போது வெளியாரின் பல அச்சுறுத்தல்களை சந்தித்துவருகின்றோம். மக்களும் பிரச்சனைகளை ஏற்படுத்துக்கின்றனர். ஆனால் நாம் அவர்களுக்கு அடிபணியப்போவதில்லை என மகிந்தா தெரிவித்துள்ளார்.
நான் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் சிலர் பணத்திற்காக நாட்டைப் பற்றி தவறாக எழுதி வருகின்றனர். தமிழ் மக்களுக்கு உணவும், உடையும் நாம் தான் வழங்கினோம். அவர்களுக்கு வீடுகளையும் வழங்கினோம். அது போர்க்குற்றமா? ஏன மகிந்தா மேலும் தெரிவித்திருந்தார்.
அதேசமயம், கூட்டத்தில் கலந்துகொண்ட அரச ஆதரவாளர்கள் “பான் கீ மூன் எமக்கு வேண்டாம்” “நாம் ஐ.நாவை புறக்கணிக்கிறோம்” “பன்கீ ஒரு யான்கீ” என்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.
சிறீலங்கா அரசின் பெருமளவான நிதி உதவிகளுடன் கொழும்பு வீதிகள் ஆளும் தரப்பினரின் கட்சிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதுடன், பெருமளவான மக்களும் ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவர்களில் பலர் பலவந்தமாக கொண்டுவரப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்காவில் தலையீடுகளை மேற்கொள்ள உங்களால் முடியாது என்பதை நான் அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் சுனில் பிரேமஜெயந்தா தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரச தலைவரின் இந்த ஊர்வலத்தை தொடர்ந்து கொழும்பின் பாதுகாப்பு பல மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தது. 8,000 சிறீலங்கா காவல்துறையினரும், பெரும்தொகையான இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் தமது வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர். எனினும் வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் தருவதாக கூறிய ஈ.பி.டி.பி துணைஇராணுவக்குழுவினர், அவர்களை மகிந்தாவின் கூட்டத்திற்கு அழைத்து வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக