10 டிசம்பர் 2013

மண்டேலாவின் இறுதிச் சடங்கில் 90 நாட்டு அரச தலைவர்கள்!

தென்னாபிரிக்காவின் ஒளிவிளக்கு நெல்சன் மண்டேலாவின் இறுதி சடங்கு நிகழ்வில் 90 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் என சிஎன்என் சர்வதேச செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
இளவரசி டயானா, மைக்கேல் ஜாக்சன், மற்றும் போப் ஜான் பால் ஆகியோரின் இறுதி சடங்கை விட இது பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தென்னாபிரிக்க அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆராதனை நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், தென் ஆபிரிக்க நாடாளுமன்றத்தில் விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
ஆபிரிக்க தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மற்றும் மண்டேலாவின் பேரன் மண்டேலாவும் உள்ள போதிலும், இந்த விசேட அமர்வில் கலந்து கொள்வார்களா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளன.
தென் ஆபிரிக்காவின் இறுதி வெள்ளை ஜனாதிபதி எப்.டபிள்யூ. கிளாக்கும் அழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டிற்கான சமாதான நோபல் பரிசு, நெல்சன் மண்டேலாவிற்கும் எப்.டபிள்யூ. கிளாக்கிற்கும் இடையே பகிர்ந்து அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாளை சோவேற்றோ விளையாட்டுத் திடலில் இடம்பெறும் ஆராதனை நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரான்சின் தலைவர் பிராங்கோயிஸ் ஒலண்டே மற்றும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் ஆகியோர் கலந்து கொள்வர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கியூபாவின் ஜனாதிபதி ரவுல் கஸ்ரோ கலந்து கொள்வார் என கியூப வானெலி செய்தி வெளியிட்டுள்ளது.
இது தவிர ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜேமன் ஜனாதிபதி ஜோசிம் கவுக், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர், ஜோஸ் மனுவல் பராசோ, நெதலாந்து அரசர் வில்லியம் அலக்ஸ்சான்டர் மற்றும் ஸ்பெயினின் முடிக்குரிய இளவரசர் பெலிப்பியும் கலந்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே சோவேற்றோ விளையாட்டுத் திடலிலேயே, நெல்சன் மண்டேலா தனது இறுதி பாரிய பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக