18 டிசம்பர் 2013

சவேந்திரசில்வாவிற்கு வீசா வழங்க கனடா மறுப்பு!

ஐக்கியநாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு வீசா வழங்க கனடா மறுப்புத் தெரிவித்துள்
ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில், 58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை, கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய, இவரது படைப்பிரிவினர் படுகொலை செய்தனர் என்ற வகையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தநிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக இவர் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, இவரை அமெரிக்க இராணுவ போர்க் கல்லூரியில் பயிற்சிக்காக இணைந்து கொள்வதற்கு அமெரிக்கா அனுமதி வழங்க மறுத்திருந்தது.
அதேபோல், அண்மையில் சவேந்திர சில்வாவை, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது.
கனடாவில் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக அண்மையில், அங்கு செல்ல முயன்றபோதே, அவருக்கு வீசா வழங்க கனேடிய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இறுதிக்கட்டப் போரில் 57ஆவது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய ஜெகத் டயசுக்கும் வீசா வழங்க அவுஸ்திரேலியா மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இறுதி யுத்தத்தில் பங்கெடுத்த படை அதிகாரிகளை சர்வதேச ராஜதந்திர சேவையில் ஈடுபடுத்தி அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் இலங்கையின் அரசியல் தந்திரோபயத்திற்கு தொடர்ச்சியாக விழும் அடியாகவே இந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.மறுப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக