03 டிசம்பர் 2013

இடம்பெயர்ந்தோரை சந்தித்தார் ஐ நா பிரதிநிதி!

இலங்கையில் போருக்கு பின்னரான காலத்தில், அதனால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கான தீர்வு குறித்து ஐ நா வின் விசேஷப் பிரதிநிதி வடமாகாண அளுநர், முதலவர்ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான தீர்வு, அதை அடைவதில் இருக்கும் தடைகளை களைவதில் உள்ள சிக்கல்கள் குறித்து இன்றைய பேச்சுக்களில் முக்கியமாக பேசப்பட்டது என்று யாழ்ப்பாணம் சென்றுள்ள ஐ நா வின் சிறப்புத் தூதர் சாலோக்கா பெயானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து இப்போது கோணாப்புலவு முகாமில் தங்கியுள்ள மக்களை பெயானி சென்று சந்தித்தார்.
அந்த முகாமிலுள்ள மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் இருப்பதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ நா வின் சிறப்பு பிரதிநிதியிடம் தெரிவித்துள்ளனர்.
"தடுக்கப்பட்டனர்"
விரைவில் தங்களுடைய சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து உதவுமாறும் அவரிடம் முகாம்வாசிகள் கோரியுள்ளனர்.
சாலோக்கா பெயானி அவர்கள் கோணாப்புலவு முகாமுக்குச் சென்ற போது, அவரிடம் தமது சிரம நிலைகளையும், கஷ்டங்களையும் தெரிவிக்கவிடாமல் சில அதிகாரிகள் தடுத்ததாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஐ நா பிரதிநிதி பெயானி
இராணுவத்தின் பிரசன்னமே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்திருப்பதாக வட மாகாணத்தின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐ நா சிறப்பு பிரதிநிதியிடம் கூறியுள்ளார்.
பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் விவசாயம் செய்வது, மீன்பிடிப்பது, கடைகள் நடத்துவது என பல தொழில்களையும் இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் பெயானி அவர்களுக்கு மாகாண முதலமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைப் பயணத்தின் ஒரு பகுதியாக நாளை-புதன்கிழமை ஐ நா வின் சிறப்பு பிரதிநிதி முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக