19 டிசம்பர் 2013

புலம்பெயர் தமிழரை திருப்பி அனுப்பாதீர்கள்-ரவிகரன்

ravikaran swissநிரந்தரத் தீர்வு ஏற்படும்வரை புலம்பெயர் தமிழர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுவிஸ் தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 14/12/2013 அன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற சந்திப்பில் வடகிழக்கின் சமகால நிலை தொடர்பில் தூதரக அதிகாரிகளிடம் எடுத்து விளக்கியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் கலந்து கொண்டு ரவிகரனுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது தமிழ்மக்களின் பல பிரச்சினைகள் பற்றி ரவிகரனால் அவர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.
தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் நில அபகரிப்பின் இக்கட்டான சூழ்நிலைபற்றியும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் கலாச்சார, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையால் தமிழ் மக்களின் வாழ்வியல் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது பற்றியும் ரவிகரன் எடுத்துக்கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கு விவசாயம், கடற்றொழில் உள்ளிட்ட அனைத்து வாழ்வாதார நடவடிக்கைகளைத் தமிழ் மக்கள் தொடர்வதில் உள்ள இடர்பாடுகள் தொடர்கிற நிலையில், தடுப்பிலிருந்து வந்தவர்கள் அடிக்கடி கண்காணிக்கப்படுவதாலும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாலும் இளைஞர் சமூகம் பெரும் விரக்தி அடைந்துள்ளது. இந்நிலையிலேயே தம் வாழ்வாதாரத்திற்காக , தம் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர்.
தாயகத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில், புலம்பெயர் தமிழர் திருப்பி அனுப்பப்படுவது வருத்தமளிக்கிறது. இங்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில், எங்கள் உறவுகளை திருப்பி அனுப்ப வேண்டாமென உங்களிடமும் சர்வதேசத்திடம் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக