11 டிசம்பர் 2013

கூட்டமைப்பை திருத்துவது என்பது நாய்வாலை நிமிர்த்தும் முயற்சி-முத்துக்குமார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் இயக்கம் தேவை என்கின்ற விவாதம் பல தளங்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் அரசியலை முன்நோக்கி நகர்த்துவதற்கு பதிலாக பின் நோக்கி நகர்த்துவதாகும்.தமிழர் அரசியல் 1920 தொடக்கம் 1949 வரை சமவாய்ப்புகளை கோருகின்ற அரசியலாக இருந்தது. பின்னர் 1949 தொடக்கம் 1968 வரை தமிழர் தாயகத்தை வரையறைத்து அதற்கு அதிகாரத்தை கோருகின்ற சமஸ்டி தீர்வை முன்வைப்பதாக அமைந்தது. 1968 இற்குப் பின்னர் சமஸ்டி தீர்வும் சரிவராத நிலையில் தனிநாட்டுப் போராட்டமாக பரிணமித்தது. அதற்கு ஏற்ப ஆயுதப்போராட்டமும் எழுச்சியடைந்தது. அப்போராட்டம் இலங்கை மட்டம், பிராந்திய மட்டம் என்பவற்றை தாண்டி சர்வதேச மட்டத்திற்கு வந்து வெற்றியை பெறுகின்ற தறுவாயில்தான் சிறிலங்கா அரசு பிராந்திய அரசு, சர்வதேச ஆதிக்க சக்திகள் அனைத்தும் இணைந்து போராட்டத்தை அழித்திருந்தன.இவ்வாறு பல்வேறு தியாகம் நிறைந்த போராட்டங்களினால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் வெறும் நிர்வாகப் பரவலாக்கலை மட்டும் கொண்ட மாகாணசபை முறைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கீழ் இறக்கியுள்ளது. இது தமிழர் அரசியலை மிகமோசமான வகையில் பின்நகர்த்தும் ஒரு செயற்பாடாகும்.இனப்பிரச்சனை என்பது தேசம் அழிக்கப்படுவதனால் ஏற்பட்ட பிரச்சனையே. இதுவரைகாலப் போராட்டம் தமிழ்த்தேசம் அழிக்கப்படுவதை பாதுகாப்பதற்கான போராட்டமே. எனவே எந்த அரசியல் தீர்வும் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வாகவே அமையவேண்டும். இதன் அடிப்படையில் சிங்களதேசமும் தமிழ்த்தேசமும் சமத்துவமாக இணைக்கப்பட்டு இலங்கை என்ற பொதுவான தேசத்தை உருவாக்குவதையிட்டு தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.தமிழ் மக்களினுடைய இறைமை தமிழ்த்தேசத்திடம் உள்ளது. சிங்கள மக்களின் இறைமை சிங்களதேசத்திடம் உள்ளது. இரண்டு இறைமைகளையும் கூட்டி இலங்கை என்ற தேசத்தை உருவாக்கலாம். இதுவே இருதேசக் கோட்பாடாகும். இலங்கை என்ற கட்டமைப்புக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இதுவாகத்தான் இருக்கமுடியும்.மாற்று அரசியல் இயக்கம் தேவை என்பதற்கு மேற்கூறிய பிரதான காரணியை தவிர வேறு காரணிகளும் இருக்கின்றன. அவை பிரதான காரணியான தமிழர் அரசியலை பின்நோக்கி நகர்த்த முற்பட்டதால் ஏற்பட்டவையே. அதில் முதலாவது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற தமிழ் அரசியலின் அடிப்படைக் கோட்பாடுகளை கூட்டமைப்பு கைவிட்டமையாகும். தேர்தல் கோசங்களுக்காக தேர்தல் காலங்களில் இவை வெளிப்படுத்தப்பட்டாலும் நடைமுறையில் இவ் அடிப்படைக் கோட்பாடுகளை கூட்டமைப்பு 2009இலேயே கைவிட்டுவிட்டது. இந்தியாவிற்கு இவை பிடிக்காததுதான் கைவிட்டமைக்கான காரணமாகும். அதனை பல சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நேரடியாகவே கூறியிருக்கின்றார். பேராசிரியர் சிற்றம்பலம் வெளிநாட்டுப் பிரமுகர்கள் மத்தியில் இவ் அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்தமைக்காக சம்பந்தனால் கண்டிக்கப்பட்டார்.
இரண்டாவது தமிழ் நாட்டையும், டயஸ்போராவையும் பலவீனப்படுத்த கூட்டமைப்பு முயற்சிப்பதாகும். தமிழ்த்தேசிய அரசியலை சர்வதேச ரீதியாக முன்கொண்டு செல்வதற்கு தடையாக உள்ளவை இந்தியாவும், மேற்குலகுமாகும். இதில் இந்தியா போடும் தடைகளை உடைக்கவல்ல ஆற்றல் தமிழ்நாட்டிற்கே உண்டு. அதேபோல் மேற்குலக தடைகளை உடைக்கவல்ல ஆற்றல் டயஸ்போராவிற்கு உண்டு. கூட்டமைப்பு இரண்டையும் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றது.தமிழர் அரசியல் சர்வதேச ரீதியாக பலம் பெறுவதற்கு நிலம், புலம், தமிழகம் என்பவற்றிற்கிடையே ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியம். கூட்டமைப்பு இவ் வேலைத்திட்டங்களை குழப்புகின்றது. அதனால் ஏற்பட்ட அபாயம் தமிழ் மக்களுக்கான சர்வதேச சந்தர்ப்பங்களை கூட்டமைப்பு தவற விடுகின்றமையாகும். பூகோள அரசியல் தமிழ் மக்களுக்கான சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொடுத்திருந்தது. கூட்டமைப்பு அதனை கைவிட்டமையினால் தமிழ் மக்களைச் சாட்டி பிராந்திய சக்தியும், மேற்குலகமும் தங்களினுடைய நலன்களை மட்டும் அடைந்துகொள்ள முயற்சிக்கின்றன. தமிழ் மக்கள் இங்கு வெறும் கருவியாக மட்டும் பயன்படுத்தப்படுகின்றனர்.கூட்டமைப்பு தனது பின் நகர்த்தும் அரசியல் செயற்பாட்டிற்கு தமிழகமும், டயஸ்போராவும் வரவில்லை என்பதற்காக தமிழ் அரசியலைப்பற்றி கதைப்பதற்கு அவற்றிற்கு உரிமை இல்லை எனக் கூறுகின்றது. விக்னேஸ்வரனின் கணவன், மனைவி உறவிற்குள் தமிழகம் தலையிடத் தேவையில்லை என்ற கருத்து இப்போக்கின் உச்சமாகும்.உண்மையில் விக்னேஸ்வரனுக்கும், தமிழர் அரசியலுக்கும் உள்ள உறவினைவிட தமிழகத்திற்கும், தமிழர் அரசியலுக்கும் உள்ள உறவு மிகவும் தொன்மையானது. தமிழ்த் தேசிய அரசியலுக்காக தமிழக உறவுகள் பலர் உயிர்துறந்திருக்கின்றனர். பலர் சிறைக்குச் சென்றிருக்கின்றனர். இத்தகைய தியாகங்களைச் செய்தவர்களுக்கு உரிமையில்லை எனக் கூற விக்னேஸ்வரனுக்கு எந்த அருகதையும் கிடையாது.
மூன்றாவது, தமிழ் மக்களது அனைத்து விவகாரங்களையும் கையாளக்கூடிய ஒரு தேசிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பதிலாக தேர்தலில் கூத்தடிக்கின்ற ஓர் அரசியல் கட்சியாக இருக்கவே கூட்டமைப்பு விரும்புகின்றது.இத்தகைய காரணங்களினால் தான் மாற்று அரசியல் இயக்கம் என்ற கருத்து வலுவடைந்து வருகின்றது.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை திருத்துவதன் மூலம் தமிழ்த்தேசிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்ற ஒரு கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இது தவறானதாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை திருத்துவது என்பது நடைமுறையில் நினைத்தே பார்க்கமுடியாத காரியமாகும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.அதில் முதலாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு சுயாதீனமான அமைப்பு அல்ல. அது இந்தியாவின்sridaran வெறும் பொம்மை. இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவது மட்டுமே அதன் வேலைத்திட்டமாக உள்ளது. தமிழர் அரசியலைப் பொறுத்தவரை இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் என்பது தமிழர் அரசியலை 13வது திருத்தத்திற்குள் முடக்குவதே. இந்தச் செயற்பாட்டிற்கு தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகள் கைவிடப்படவேண்டும் என இந்தியா விரும்புகின்றது. தமிழகத்தினதும் டயஸ்போராவினதும் உறவுகளை தாயகத்திலிருந்து துண்டிப்பதன் மூலமே இதனை சாத்தியமாகலாம் என அது கருதுகின்றது. குறிப்பாக தமிழகத்தை தமிழர் தாயகத்திலிருந்து துண்டிப்பதில் இந்தியா மிகவும் அக்கறையாக உள்ளது அதற்கு தற்போது கிடைத்த மிகப்பெரிய கருவி விக்னேஸ்வரனே.
இரண்டாவது கூட்டமைப்புக்குள் கொழும்பினை மையமாகக்கொண்ட தமிழ்மேட்டுக்குடிகளின் கை மேலோங்கியுள்ளமையாகும். அதனால் போராட்டம் தொடர்பாக சிறிய வலியைக்கூட பெற்றிருக்காத சுமந்திரனும் விக்னேஸ்வரனும் பெரிய உழைப்புக்கள் எதுவும் இல்லாமல் திடீரென தலைமை நிலைக்கு உயர்ந்துள்ளனர். இவர்களுடைய நலன்கள் கொழும்பு சார்ந்ததாக இருப்பதனால் தமிழ் அரசியல் முன்நோக்கிச் செல்வதை இவர்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.ஆயுதப்போராட்டம் வளர்வதற்கு முன்னரும் இவ் மேட்டுக்குடியின் ஆதிக்கம் இருந்தது உண்மை தான். ஆனால் விடுதலை இயக்கங்கள் எழுச்சியடைந்ததும் இவ் ஆதிக்கம் அகற்றப்பட்டது. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பலர் தமிழ் அரசியலின் தலைமை நிலைக்கு உயர்ந்தனர். இன்று ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதால் இம் மேட்டுக்குடிகள் மீண்டும் மேல்நிலைக்கு வந்து தமிழர் அரசியலைக் கைப்பற்றியுள்ளன.மூன்றாவது கூட்டமைப்பு ஒரு ஜனநாயகக் கட்டமைப்பினை கொண்டிராமையாகும். எந்தவித ஜனநாயக பொறிமுறைகளும் அங்கு கிடையாது. இதனால் உட்கட்சிப் போராட்டங்களை நடாத்தக்கூடிய வாய்ப்புக்கள் எதுவும் அங்கு அறவே இல்லை. இந்நிலையில் எப்படித்தான் கூட்டமைப்பை திருத்தமுடியும்.பிரபாகரன்கூட தீர்மானங்களை எடுக்கும்போது தளபதிகளை கலந்து ஆலோசித்தே எடுப்பார். சம்பந்தனிடம் அதுவும் கிடையாது. அவர் தன்னிச்சையாகவே முடிவுகளை எடுக்கின்றார். பணியமறுப்பவர்களை இந்தியாவைக்கொண்டு பணியவைக்க முயற்சிக்கின்றார்.
நான்காவது கூட்டமைப்புக்கென இலக்கோ, கொள்கைகளோ, வேலைத்திட்டங்களோ அமைப்பு பொறிமுறைகளோ எதுவும் கிடையாது. இந்நிலையில் திருத்துவதற்கான எந்த வாய்ப்புகளும் அங்கு இல்லை.ஐந்தாவது கூட்டமைப்பு கொள்கைகளைக் கைவிட்டு தேர்தலில் கூத்தடிக்கின்ற அரசியல் கட்சியாக மாறியுள்ளமையினால் ஜொலி அரசியல் செய்ய விரும்புகின்றவர்களே கட்சிக்குள் உள்நுழைகின்றனர். பிரக்ஞைபூர்வ சக்திகள் ஒன்றில் ஒதுங்கிக்கொள்கின்றனர் அல்லது ஜொலி அரசியல்வாதிகளாக மாறிவிடுகின்றனர்.மொத்தத்தில் கூட்டமைப்பை திருத்துவது என்பது நாய்வாலை நிமிர்த்தும் முயற்சிதான்.யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழ்த்தேசிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என்ற ஒரு கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இது உண்மை தான். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அக்கறையோடு செயற்படுகின்றார் என்பதும் உண்மைதான். அவற்றை நாம் மறுக்கவில்லை. அவர் மாகாணசபைத் தேர்தலின்போது கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி கிளையின் சார்பில் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்களை எடுத்திருக்கின்றார். பாராளுமன்றத்தில் பிரபாகரன் பற்றி பாராட்டிப் பேசியிருக்கின்றார். புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் போராளிகள் என வலியுறுத்தியிருக்கின்றார். இவை எல்லாம் வரவேற்கப்படவேண்டிய விடயங்களே.
ஆனால் அவரது நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை நடந்துகொள்கின்றது. இவரது கிளிநொச்சி தீர்மானங்களில் ஒன்றைக்கூட கூட்டமைப்பின் தலைமை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கவில்லை. மாவீரர் தினம் தொடர்பான இவரது பாராளுமன்ற உரையினை சம்பந்தனும், சுமந்திரனும் கண்டித்திருக்கின்றனர். இவ் உரைக்கும் கூட்டமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறியிருக்கின்றனர்.இந்நிலையில் சிறிதரன் தமிழ்த்தேசியத்துடன் உறுதியாக நிற்பவராக இருந்தால் கட்சி தலைமைக்கு எதிராக உட்கட்சிப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். அப்போராட்டத்திற்கு தலைமை தாங்கியிருத்தல் வேண்டும். போராட்டத்தில் வெற்றிகாணவில்லையாயின் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ்த்தேசியத்திற்காக செயற்படுபவர்களுடன் இணைந்திருக்கவேண்டும்.சிறிதரன் இவை எவற்றையும் செய்யவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக ஏனையவர்கள் போராடியபோது சிறிதரன் ஒதுங்கியே இருந்தார். ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் எடுக்கும் முடிவினை சம்பந்தன் எடுத்தபோது மாவை கடுமையாக முரண்பட்டிருந்தார். அப்போதுகூட சிறிதரன் மாவையுடன் இணைந்து எதிர்ப்பு காட்டுவதற்கு பதிலாக மௌனம் சாதித்திருந்தார்.சிறிதரனின் இப்போக்கு அவர் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதையே வெளிக்காட்டுகின்றது. மக்களிடம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அவர் தமிழ்த்தேசியத்தில் உறுதியாக நிற்பதாக காட்டிக்கொள்கிறார். மறுபக்கத்தில் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக கூட்டமைப்பின் தலைமை செயற்படும்போது மௌனம் காத்து ஒத்துழைக்கின்றார். இது முழுக்கமுழுக்க பதவியை பாதுகாப்பதற்கான நடிப்பே தவிர வேறென்றும் அல்ல.உண்மையில் இவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் கூட்டமைப்பு தலைமையின் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இவர்கள் தான் வெள்ளைப்பூச்சடிக்கின்றனர். இதன் மூலம் கூட்டமைபினை திருத்துவதற்கு பதிலாக மேலும் கெட்டுப்போவதற்கு துணைபுரிகின்றனர்.எனவே தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதற்கு மாற்று அரசியல் இயக்கம் ஒன்று தவிர்க்கமுடியாதது என்றே வரலாறு நிருபிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக