25 மே 2014

தமிழர் சொத்துக்களை அபகரித்தல் தொடர்கிறது!

கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம், தடைவிதிக்கப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் எல்லா நிதிகள், ஏனைய நிதிச் சொத்துகள், பொருளாதார வளங்களையும், முடக்கும் வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று ஐ.நா பாதுகாப்புச்சபையின் 1373 தீர்மானத்துக்கு அமைய வர்த்தமானியில் பெயரிடப்பட்ட இந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்களையே முடக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த தடை அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்குப பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இதற்கான வர்த்தமானி அறிவிப்பை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.இதற்கமைய, பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று பிரகடனப்படுத்தப்பட்ட, அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் எல்லா சொத்துகள் மற்றும் நிதிகள், பொருளாதார வளங்களும், அவர்களினால் சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்களின் வசமுள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பான உத்தரவு சிறிலங்கா மத்திய வங்கியின் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவினால், சம்பந்தப்பட்ட எல்லா துறைகளுக்கும் குறிப்பாக வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

22 மே 2014

மோடி பதவியேற்பு விழாவை முதல்வர் புறக்கணிப்பார்?

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அழைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கக் கூடும் என்று தெரிகிறது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வரும் 26-ந் தேதியன்று மாலை பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல்கள் நேற்று வெளியானது முதலே தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகி உள்ளன.பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுக பொதுச்செயலர் வைகோ, ராஜபக்சேவை அனுமதிக்கக் கூடாது என மோடியை இருகரம் கூப்பி கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். மே 17 இயக்கத்தின் சார்பில் வரும் 25-ந் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே ராஜபக்சேவை அழைத்ததற்கு புதிய மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபை தீர்மானங்களை சுட்டிக்காட்டியும் முந்தைய காங்கிரஸ் அரசு அலட்சியப்படுத்தியதையும் அதில் விவரித்துள்ளார். அத்துடன் புதிய மத்திய அரசின் நடவடிக்கையானது தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி, வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் மோடி பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காமல் புறக்கணிக்கக் கூடும் என்றே தெரிகிறது.

18 மே 2014

வீதியில் அமர்ந்து அனந்தி போராட்டம்!

உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு செல்ல அனுமதி கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அவரது உதவியாளர் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் நடமாட்டமேதுமற்ற கீரிமலையின் எல்லையில் அவர் பொலிஸ் மற்றும் படையினரது சோதனை சாவடி முன்பதாக இப்போராட்டத்தினை கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக முன்னெடுத்து வருகின்றார்.
முன்னதாக உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலையில் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கீரிமலைக்குச் செல்லும் பிரதான வீதி மார்க்கங்கள் அனைத்திலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டுள்ளன.
அந்தப் பிரதான வீதிகளினூடாகவோ குறுக்கு வீதிகளினூடாகவோ யாரும் கீரிமலைக்குச் செல்ல முடியாதவாறு இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் குறித்த புதிய சோதனை சாவடியொன்றினில் அனந்தி வழிமறிக்கப்பட்ட நிலையில் தன்னை கீரிமலைக்கு செல்ல அனுமதிக்க கோரி வீதியின் நடுவில் அமர்ந்து அவர் போராட்டத்தை முன்னெடுத்தார்.அவ்வேளையில் தான் படை அதிகாரிகளினால் அச்சுறுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவித்த அவர் தன்னை புகைப்படமெடுத்து அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

17 மே 2014

மூன்று நாள்களுக்கு எந்த நிகழ்வும் நடத்தக்கூடாதாம்!

முள்ளிவாய்க்கால் பகுதியில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவிவழங்கும் நிகழ்வை நடத்தியபோது அங்குவந்த இராணுவத்தினர், இங்கு மூன்று நாள்களுக்கு எந்த நிகழ்வும் நடத்தக்கூடாது என்று எச்சரித்து நிகழ்வை குழப்ப முயற்சித்துள்ளனர். எனினும் தான் உதவி வழங்கும் நிகழ்வையே ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த மாகாணசபை உறுப்பினர், மெளன வணக்கத்துடன் அந்த நிகழ்வை ஆரம்பித்தார். இந்த நிகழ்வை இன்று முற்பகல் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நடத்தியுள்ளார். நிகழ்வு நடந்து முடியும்வரை இராணுவத்தினர் அங்கேயே காத்திருந்தனர். இதனால் முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் பதற்றம் நிலவியது.

10 மே 2014

யாழில் 800 இளைஞர் யுவதிகளை படையில் இணைக்க நடவடிக்கை!

பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு தொண்டர்கள் என்ற போர்வையில் 800 படை வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட படையின் ஊடக இணைப்பாளர் மல்லவராட்சி இன்று வெளியிட்டார்.
படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள சிவில் அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
அதன்போதே குறித்த அறிவித்தலையும் உத்தியோக பூர்வமாக தெரிவித்தார் மல்லவராட்சி. அவர் மேலும் தெரிவிக்கையில், வயதின் அடிப்படையில் ஓய்வுபெற்றவர்கள், சேவை அடிப்படையில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வேறு தொழில் தேடி இடைவிலகிச் சென்றவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தொண்டர்களாக கடமையாற்றுவதற்கு 700 தொடக்கம் 800 வெற்றிடங்கள் உள்ளன.
எனவே நாம் கட்டாயப்படுத்தவில்லை விரும்பியவர்கள் இணைந்து கொள்ளமுடியும். இதற்காக காங்கேசன்துறையில் 3 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதன்போது மரவேலை, கைத்தொழில் முயற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பயிற்சி நிறைவில் வலுவான சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன் பயிற்சிக்காலத்திலும் சம்பளம் வழங்கப்படும். மேலும் உணவு, இருப்பிடம், மருத்துவம், போக்குவரத்து ஆகியன இலவசமாக வழங்கப்படுவதுடன் குடும்பத்தினருக்கும் சலுகைகள் வழங்கப்படும். பயிற்சி முடிவடைந்ததும் படை தொண்டர்களாக உள்வாங்கப்பட்டு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா சம்பளமும் வழங்கப்படும்.
குறித்த பணியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல விரும்பாதவர்கள் கடிதம் மூலம் அறிவித்து விட்டு விலகிச் செல்ல முடியும். இதற்கு எதுவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. இதற்கு 18 வயது தொடக்கம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆண்கள் 22 வருட நிறைவிலும் , பெண்கள் 15 வருட நிறைவிலும் ஓய்வு பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு ஓய்வூதியமும் வழங்கப்படும். மேலதிக கல்வியினை தொடர விரும்புபவர்களுக்கு அரசாங்கம் மற்றும் தனியார் ஊடாக வழங்கப்படுவதுடன் வெளிநாட்டு புலமைப்பரிசில்களும் வழங்கப்படும்.
எனினும் அதிகாரிகளை இணைப்பதற்கே வர்த்தமானியில் அறிவிக்கப்படுமே ஒழிய தொண்டர்களை இணைப்பதற்கு அல்ல. இவ்வாறே தான் தெற்கிலும் தொண்டர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.எனினும் கடந்த காலங்களில் வடக்கில் ஆட்களை இணைப்பதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. எனவே தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களாக இணைந்து தங்களுடையதும், குடும்ப பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பிணை இளைஞர், யுவதிகள் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

09 மே 2014

யாழ்.பல்கலையில் நடந்த அமைதிப் போராட்டம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இனந்தெரியாதவர்ளால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் இன்று நண்பகல் 11.15 மணியளவில் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மௌன எதிர்ப்புப் போராட்டம் ஒன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தங்கும் பொது மண்டபத்தில் இருந்து பல்வேறு வகையான கண்டனங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கிய வண்ணம் ஊர்வலமாக பிரதான வாயில் வரை வந்த விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அமைதியான முறையில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை பாதாதைகளை தாங்கிய வண்ணம் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அமைதியான முறையில கலைந்து சென்றார்கள்.
அவர்கள் தாங்கியிருந்த பதாதைகளில் -
'யாழ்.பல்கலைக்கழகம் என்பது கல்விக் கழகமா அல்லது கொலைக்களமா', 'நினைத்த நேரத்தில் பல் கலைக்கழகத்தை மூடுவது தான் மாணவர்களின் மையக் கல்வியா', 'யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மகத்தான ஆயுதம் பேனா முனையே தவிர துவக்கு முனையல்ல புரிந்து கொள்ளுங்கள்', 'பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துக','அச்சுறுத்தலும் கொலை மிரட்டலும் பயங்கரவாதம் இல்லையா','ஆசியாவின் அதிசயம் பல்கலைக்கழக ஆசிரியர்களை கொல்வதா' போன்ற சுலோகங்கள் அடங்கியிருந்தன.

08 மே 2014

சிறீலங்காவிற்கு பத்தாயிரம் கோடி ஒதுக்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்!

சிறிலங்காவில் போரினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய இலங்கை ரூபா மதிப்பீட்டின்படி பத்தாயிரம் கோடி ரூபாவினை ஒதுக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்த நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையானது ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ள ஒரு நாடாகும். அந்த வகையில் இங்கு போர் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருபதாயிரம் வீடுகள் மற்றும் 200 பாடசாலைகளை நிர்மாணிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
அதற்கு மேலதிகமாக அந்தப்பிரதேசங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப வேறு திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

07 மே 2014

இலங்கைப் போர்க்குற்ற விசாரணைக்கு மேற்கு நாடுகள் நிதியுதவி!

இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள 15 லட்சம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்கவே இந்தத் தொகை தேவைப்படுவதாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கணக்கிட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதியில் சுமார் இருநூறு மில்லியன் ரூபா பெறுமதியான இந்தத் தொகையை திரட்டிக் கொள்வது மற்றும் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பன தொடர்பில் ஐ.நா தலைமையகத்தில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.
இதற்கிடையே இலங்கைக்கு எதிரான இந்த சர்வதேச விசாரணைக்குத் தேவையான பணத்தில் ஒருபகுதியை கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. மேலும் தேவைப்படும் எஞ்சிய பணத்தைத் திரட்டித் தரவும் அந்நாடுகள் முன்வந்துள்ளன. இதனையடுத்து இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை அமைப்பது மற்றும் அதன் பொறுப்புகள் தொடர்பில் இம்மாத இறுதிக்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளது.
அதேவேளை, இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த நோர்வே நிதி உதவிகளை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி வழங்குவது குறித்து நவனீதம்பிள்ளையுடன் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

06 மே 2014

திருகோணமலைக் கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல்!

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்கள் இன்று செவ்வாய் அதிகாலை முதல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். 15 வயதிற்கு மேற்பட்டவர்களை தாங்கள் விசாரிக்கப்போவதாகவும் இதற்கு பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறும் படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்ததன் பின்னர் இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத்துறை, ஈச்சிலம்பற்று, புன்னையடி, கல்லடி இலங்கைத்துறை முகத்துவாரம் போன்ற கிராமங்களே சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்,மற்றும் விசாரணைகளை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.
இதேவேளை 15 வயதிற்கு மேற்பட்டவர்களையும் சந்தேகித்திற்கிடமானவர்களையும் படையினர் தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை இலங்கைத்துறை கடற்கரைப் பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகவும் உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று, 2 மகஸின்கள், 78 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

05 மே 2014

இந்தியாவின் நடுநிலமைக்கு கூட்டமைப்பே காரணம்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்தார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
2012 ஆம் ஆண்டு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமைக்கு தமிழ் நாட்டில் இடம்பெற்ற பாரிய போராட்டங்கள் தான் காரணம். இதை தெரிந்து கொண்ட சுமந்திரன் தமிழ்நாட்டில் பேசும் போது உங்கள் பிரச்சினையினை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எம்பிரச்சினையினை நாம் பார்த்துக் கொள்கின்றோம் என்று கூறினார்.
இவ்வாறு சுமந்திரன் தமிழ்நாட்டினை வாயை மூடும்படி கூறியதால் தான் இம்முறை தமிழ்நாட்டின் போராட்டங்கள் பலவீனமுற்று காணப்பட்டது. ஆகையால் இந்தியாவின் இந்த முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம்.
சுமந்திரன் ஐ.நா.அமர்வுகள் தொடர்பான பல பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். நாம் சர்வதேச விசாரணையினை கோரவில்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார். மனித உரிமை மீறல் விசாரணை மட்டும் தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பது இலங்கை அரசின் எதிர்பார்ப்பு என்றும் இதற்கு மேலாக போர்க் குற்ற விசாரணையும் இடம்பெறும் என்று சுமந்திரன் கூறுகிறார்.
அமெரிக்கத் தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டே கருத்துக்களை மட்டுப்படுத்தியுள்ளது. மனித உரிமை என்பது வேறு, மனிதாபிமான சட்டம் என்பது வேறு. மனித உரிமை விசாரணை நடக்க வேண்டுமானால் அதில் மனிதாபிமான சட்டத்திற்குள் அடங்காதவை நடத்தப்படவேண்டும். ஆனால் உண்மையில் தமிழருக்கு இடம்பெற்ற அநியாயம் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்குள் வரும் என்று நாம் கூறினோம் தமிழர் தொடர்பில் இத்தீர்மானத்தில் எதுவும் இல்லை என ஒரு சில தரப்பினர் கூறியமையினாலேயே நாம் இதனை எதிர்த்தோம் என்று ஆபிரிக்க நாடுகள் கூறியதாக சுமந்திரன் கூறியிருந்தார்.ஆனால் உண்மையில் நான் அந்நாட்டவர்களுடன் கதைத்த போது, ‘அமெரிக்க கொண்டு வரும் எந்தத் தீர்மானத்தினையும் ஏற்பதில்லை என்றும், அமெரிக்க உள்நாட்டு அரசியலினைக் குழப்பி அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதினாலேயே ஏற்பதில்லையெனத்’ தெரிவித்திருந்தனர்.ஆகவே ஐ.நா.வில் நானும் கலந்துகொண்டேன் என்ற வகையில் மக்களுக்கு உண்மையினை கூறவேண்டிய கடமைகள் எமக்குண்டு. ஆகவே மக்கள் எதை சொன்னாலும் நம்புவார்கள் என்று நினைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பிழையான கருத்துக்களை கூறி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

04 மே 2014

கோபியின் மனைவி உட்பட மூவர் விடுதலை!

இலங்கையில் அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் வெள்ளியன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். மற்றுமொருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த நால்வரில் இருவர் பெண்கள். இருவர் ஆண்கள்.
நெடுங்கேணி காட்டுப்பகுதியில் இராணுவ சுற்றிவளைப்பொன்றின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவரான கோபி என்று இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த கஜீபன் என்பவரின் மனைவி சர்மிளா, கஜீபனின் தாயாருக்கு உதவியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படும் புவனேஸ்வரி ஆகிய இரண்டு பெண்களுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் விடுதலைப் புலிகளை மீளிணையச் செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள் என்றே கோபி என்ற கஜீபன் உள்ளிட்ட மூவரின் மீதும் அரசு குற்றம் சாட்டியிருந்தது.
இவர்களுடன் பேக்கரி உரிமையாளர் எனக் கூறப்படும் ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பேக்கரியில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொருவர் விடுதலையாகியுள்ளார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவதற்கும், விடுதலைப்புலிகளை மீளிணையச் செய்வதற்கும் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின் உதவியோடு இலங்கையில் சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக இராணுவம் குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும், அவர்களுக்கு உதவினார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
அவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இன்னும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பூஸா முகாம் உட்பட தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டிருப்பவர்கள் உட்பட கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பற்றிய மேலதிக தகவல்களை காவல்துறை பேச்சாளரிடம் உடனடியாகப் பெறமுடியவில்லை.

01 மே 2014

18 நாடுகளில் புலிவேட்டையாம்!

அனைத்துலக ரீதியாக சுமார் 18 நாடுகளுக்கு தமது புலனாய்வு குழுக்களை அனுப்பியுள்ளதாகவும் இவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கண்காணிக்கவும் அவர்களை சர்வதேச பொலிசாருடன் சேர்ந்து கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பார்கள் என போர்க்குற்றவாளி கோத்தபாய அறிக்கைவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதாம்.. இந்தக் கோரிக்கை விடுதலைப் புலி உறுப்பினர்கள் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ள நாடுகளிடம் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கோத்தா.

30 ஏப்ரல் 2014

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மே தின அழைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இணைந்து நடாத்தும் சர்வதேச தொழிலாளர் தின ஊர்வலமும், பொதுக்கூட்டமும் எதிர்வரும் மே 1ம் திகதி இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்விற்கு அனைவரையும் அணிதிரண்டு வருமாறு வடமராட்சி எங்கும் துண்டு பிரசுரம் மூலம் அழைப்பு விடுத்து வருகிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள்.கஜேந்திரன்,கஜேந்திரகுமார் உட்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி துண்டுப்பிரசுர விநியோகத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.கொள்கைகளை விட்டுக் கொடுக்காது தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்: ஞானவைரர் ஆலய முன்றல், சாமியன் அரசடி, கரவெட்டி (நெல்லியடி – கொடிகாமம் வீதியிலுள்ள கரவெட்டி தபாற் கந்தோர் அருகாமை)

திகதி: 01-05-2014 (வியாழக்கிழமை)
நேரம்: பி.ப3.00 – பி.ப 6.00 மணிவரை

நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

தொடர்புகளுக்கு : 0773024316, 0779599361, 0212223739
முகவரி : இல 43, 3ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்.

28 ஏப்ரல் 2014

மரக்கறி இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களின் ராஜாவான அல்போன்சா மாம்பழம் மற்றும் சில காய்கறிகளுக்கு தடை விதித்து ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது.
பழங்களின் ராஜாவான இந்திய அல்போன்சா மாம்பழம் மற்றும் காய்கறிகளுக்கு எதிராக 28 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள எம்.பி.க்களும், இந்திய மக்கள் மற்றும் வியாபாரிகளும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
2013 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த பழம் மற்றும் காய்கறிகளில் ஈக்கள், பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருந்ததை தொடர்ந்தே இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாம்பழம் மற்றும் கத்திரிக்காய், முட்டை கோஸ், பாகற்காய், புடலங்காய் ஆகிய காய்கறிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவையனைத்தும் 5 சதவிகிதத்திற்கும் குறைவான அளவுக்கே அங்கு இறக்குமதி செய்யும் நிலையில், இவற்றில் காணப்படும் ஈக்கள் மற்றும் பூச்சிகளால் தங்கள் நாட்டு விவசாயம் பாதிக்கும் என அந்நாடு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

27 ஏப்ரல் 2014

ஜெர்மன் பெண்ணிடம் வாலாட்டிய விமானப்படையினன்!

நீர்கொழும்பு சுற்றலாத்துறை பிரதேசத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஜேர்மன் நாட்டு இளம்பெண்ணொருவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டியதாக கூறப்படும் விமானப்படை வீரரின் சார்பாக விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையினை நிராகரித்த நீர்கொழும்பு மேலதிக நீதிவான் திலக்கரத்ன பண்டார சந்தேக நபரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 29 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மீரிகமயில் கடமையாற்றும் விமானப்படை வீரரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.
சந்தேக நபரை நீர்கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் கைது செய்து மன்றில் ஆஜர் செய்தனர்.
வழக்கின் முறைப்பாட்டாளரான ஜேர்மன் பிரஜை 25 வயதுடைய திருமணமான பெண்ணாவார். இவர் தனது கணவருடன் இலங்கைக்கு சுற்றலா வந்துள்ளார். நீர்கொழும்பு சுற்றலாத்துறை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இவர்கள் குளிப்பதற்காக அருகிலுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
கணவர் கடற்கரையில் இருக்கும் போது ஜேர்மன் பெண் மாத்திரம் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். இதன் போது கடலில் குளித்துக் கொண்டிருந்த சந்தேக நபரான விமானப்படை வீரர் அந்த வெளிநாட்டுப் பெண்ணின் அருகில் நீந்தி வந்து பெண்ணின் உடலை தொட்டுள்ளார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து ஏசியுள்ளார். இதனை அடுத்து சந்தேக நபர் தனது காற்சட்டையை கீழிறக்கி தனது அந்தரங்க உறுப்பை அந்த ஜேர்மன் பெண்ணிற்கு காட்டியுள்ளார் என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.(சிங்களப் படைகள் என்றாலே அது (அ)சிங்கப்படைகள் தானே!)

26 ஏப்ரல் 2014

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படையினரின் தொகை குறைவு என்கிறார் சவேந்திர!

சவேந்திரசில்வா,டயஸ் 
யுத்த காலத்திலும், அதன் பின்னரும், குறைந்த அளவான இராணுவ துருப்பினரே வடக்கில் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தினர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் யுத்த காலத்தில் 6 சதவீதமான சம்பவங்களிலும், அதன் பின்னர் 4 சதவீதமான சம்பவங்களிலுமே இராணுவத்தினர் தொடர்பு கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய பெரும்பாலான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களே ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தின் போது இலங்கை இராணுவத்தினர் தமிழ் பெண்களுக்கு எதிராக பல்வேறு பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் யுத்த கால பாலியல் கொடுமைகள் சம்பந்தமான சிறப்பு பிரதிநிதி சைனப் ஹாவா பங்குரா நேற்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கை படையினரால் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணி யாஸ்மின் சூக்கா அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இவற்றுக்கு பதில் வழங்கும் வகையிலேயே சவேந்திரசில்வா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

25 ஏப்ரல் 2014

நீதிபதி சதாசிவம் தலைமையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்த வழக்கை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.
அரசியல் சாசன பெஞ்ச்சின் தீர்ப்பு வரும் வரை, சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடையையும் அது நீட்டித்திருக்கிறது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பிப்ரவரி 18ம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து, இந்த மூவரையும் இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட வேறு நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவு பற்றி மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு கெடு விதித்தது.
இதனை எதிர்த்து மத்திய அரசு தொடுத்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வில் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பில், இந்த வழக்கு முக்கிய அரசியல் சட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்புவதால்,இது குறித்து ஒரு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கவேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வெளியிட்டது.
அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கில் விசாரிக்க ஏழு முக்கிய அரசியல் சட்ட கேள்விகளையும் அது வரையறுத்தது.
மரண தண்டனை ஆயுள் தண்டனையாக , உச்சநீதிமன்றத்தாலோ, அல்லது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநராலோ குறைக்கப்பட்ட பின்னர், அதை மேலும் மாற்றியமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது இதில் முக்கியமான கேள்வி.

24 ஏப்ரல் 2014

துண்டுபிரசுரம் வைத்திருக்கிறீர்களா?

தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்பு முடிந்து மானிப்பாய் வீதியினூடாக வீடுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சிலரை வழிமறித்துள்ள இராணுவத்தினர், அம்மாணவர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வைத்துள்ளீர்களா என்று விசாரணை நடத்திய சம்பவமொன்று நேற்று புதன்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரே இவ்வாறு மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள மாணவர்கள், எம்மிடம் பாடக்கொப்பிகள் தான் இருக்கின்றன பாருங்கள் என்று கூறியதை அடுத்து அம்மாணவர்களின் முதுகைத் தட்டி ‘சொறி’ என மன்னிப்பு கேட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (17) இரவு ‘தமிழீழம் மலரும்’ என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒட்டிய குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (வயது 24)இ இணுவில் பகுதியினைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (வயது 24) ஆகிய இருவரும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து இவர்கள் இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கபபட்டதன் பின்னர் அந்த இளைஞர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத்தொடர்ந்து, ‘கணினி வலைப்பின்னல்’ என்னும் நிலையத்தை நடத்திய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் யுத்தத்தில் கால் ஒன்றினை இழந்தவருமான கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இராஜரட்ணம் சுதர்சன் (வயது 30) என்பவர் வெள்ளிக்கிழமை (18) கைது செய்யப்பட்டார்.
இவ்விரு சம்பவங்களை அடுத்து, பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்நிலையிலேயே வீதியில் கொப்பிகளுடன் நின்றிருந்த மாணவர்களிடமும் படையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

23 ஏப்ரல் 2014

வவுனியாவில் திலீபனை தேடுகிறதாம் சிங்கள புலனாய்வுத்துறை!

விடுதலைப்புலிகளை மீள உருவாக்கியதாக கூறி வவுனியா நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகியோர் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து வவுனியாவில் தேவிகன் அவர்கள் வசித்த வீடு கண்டு பிடிக்கப்பட்டதுடன் அவருடன் இணைந்து நெருக்கமாக செயற்பட்டவர்கள் தொடர்பாகவும் தகவல்களைப் பெற்ற புலனாய்வு துறையினர் விடுதலைப் புலிகளின் விமானப்படையைச் சேர்ந்த தேவிகன் என்பவருடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்ததாக வவுனியா வடக்கு வலய பாடசாலை ஆசிரியரான திலீபன் என்பவர் மீது தமது கவனத்தை செலுத்தினர்.
ஆனால், கடந்த 8 ஆம் திகதி பாடசாலை லீவு விடுவதற்கு முன்பாகவே அ.திலீபன் என்ற ஆசிரியர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து திலீபன் என்பவர் வசித்து வந்த வவுனியா திருநாவற்குளத்தில் உள்ள வாடகை வீடு ரிஐடியினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வவுனியா நகர பஸ் நிலையப் பகுதியில் திலீபனால் நடத்தப்பட்டு வந்த வர்த்தக நிலையமும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
திலீபன் கற்பித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நண்பர்கள், கடையில் வேலை செய்தோர் எனப் பலரிடமும் துருவி துருவி விசாரணைகளை புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் விசாரணைகளின் மூலம் தேவிகன் வசித்த வவுனியா வீடு திலீபன் என்பரின் திட்டமிடலில் கட்டப்பட்டது என உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு பலதடவை சென்று வந்துள்ள திலீபன் தேவிகனுடன் பணக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேவிகன், திலீபன் ஆகியோருடன் தொடர்புகளை வைத்திருந்ததாக கூறி பலர் மீது விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அதன் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் யாழ் நல்லூர் பகுதியில் கடந்த 21 ஆம் திகதி ஹய்சஸ் வாகனம் ஒன்றினை ரிஐடியினர் கைப்பற்றியுள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்ட இவ் வான் திலீபனின் பெயரில் 35 லட்சம் ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது எனவும் தேவிகனே இதனை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
தேவிகன் வசித்த வீடு கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, அக்காணி உரிமையாளர், அவ் வீட்டுக்கு வந்து சென்றவர்கள், தேவிகனின் வாகனம் என்பன ரிஐடியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரும் தீவிர விசாரணையால் மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

22 ஏப்ரல் 2014

ஜோசப்,லசந்த கொலைகளைச் செய்தது அரசாங்கமே!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தையும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே கொலை செய்தது என்று, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் நடந்த விவாதம் ஒன்றிலேயே எரிக் சொல்ஹெய்ம் இது குறித்து தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் ஆகியோரை விடுதலைப் புலிகளே கொலை செய்தனர்.
அதுபோலவே, ஜோசப் பரராஜசிங்கத்தையும், லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே படுகொலை செய்தது என்று எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நோர்வேயின் அனுசரணையுடனான போர் நிறுத்த உடன்பாடு நடைமுறையில் இருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது தேவாலயத்துக்குள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.