03 ஏப்ரல் 2013

சிங்கள ராணுவம் இன்னமும் தமிழர்களை சித்ரவதை செய்கிறது!

 Sri Lankan Army Is Still Torturing Tamils இலங்கையில் இருந்து 3 இளைஞர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். ஈழப்போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ஈழத்திலிருந்து அகதிகள் வரத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானோர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதனால் உயிர் பிழைக்க வேண்டி 2009ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். இறுதி போர் முடிந்த பிறகு அகதிகள் வருகை முற்றிலும் நின்று போனது. இந்நிலையில் இலங்கையில் இருந்து 3 அகதிகள் நேற்று தமிழகம் வந்துள்ளனர். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பரிந்துரை வீதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(24), யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ்(26), முல்லைத் தீவு வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (19). இந்த 3 பேரும் சாவகச்சேரியில் இருந்து பேருந்து மூலம் மன்னார் வந்துள்ளனர். அங்கிருந்து நேற்று இரவு 8 மணியளவில் பிளாஸ்டிக் படகு ஒன்றில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். நள்ளிரவில் அரிச்சல்முனை பகுதியில் அவர்களை இறக்கி விட்ட பின்னர் அந்த படகு இலங்கைக்கு திரும்பி சென்றுவிட்டது. இரவு முழுவதும் அரிச்சல்முனை பகுதியில் இருந்த அவர்கள் இன்று காலை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு வந்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறுகையில், இலங்கை ராணுவம் தமிழர்களை பிடித்து சித்ரவதை செய்து வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க எங்கள் பெற்றோரே படகுக்கான வாடகையை கட்டி எங்களை அனுப்பி வைத்தனர். சென்னையில் நண்பர்கள் இருப்பதால் அவர்கள் மூலம் பிழைப்பு தேடலாம் என்று இந்தியா வந்தோம் என்றனர். அதில் ஒருவர் கூறுகையில், இலங்கையில் சண்டை முடிஞ்ச பின்னாலும் அங்குள்ள தமிழ் ஆட்கள் நிம்மதியா இருக்க முடியல. விசாரணைங்கிற பேரால தமிழ் ஆட்களை ராணுவம் அழைச்சிட்டு போறதும், ஆட்களை கடத்திட்டுப் போறதும் தொடர்ந்துகிட்டே தான் இருக்கு. அங்க இருந்தா உசுருக்கு உத்த‌ரவாதம் கிடையாது. அதனால தான் எங்கட அப்பா என்னை அகதியா இந்தியாவுக்கு அனுப்பி வச்சாங்க. இலங்கையில தமிழ் ஆட்களுக்கு எல்லாம் கொடுக்குறதா அரசாங்கம் சொல்லுது. ஆனா, எதுவும் உருப்படியா கிட்டல. போலீஸ் வேலைக்கு ஆட்கள் எடுத்தாலும் எங்கட ஆட்கள போலீஸ் துறையில் அடிமையாத்தான் நடத்துறாங்க. சர்வீஸ் செஞ்சவங்களுக்கு ஒரு புரமோஷனும் கிட்ட‌ல. ஒரு இடத்தை விட்டு வேற இடத்துக்கு நகந்தாலே சோதனைதான். பாஸ் இல்லாம எங்கயும் வெளிக்கிட முடியாது. என்னோட சகோதரர் கனடாவில் இருக்கார். நான் இந்தியாவில வேலை பார்க்கலாம்னு அகதியா வந்துட்டேன். என்னை போன்ற ஆட்கள் இலங்கையில நிறைய இருக்காங்க. ஆனா, அவங்கல்லாம் அங்கிருந்து வெளிக்கிட முடியுமான்னு தோணல என்றார். இந்நிலையில் பாஸ்போர்ட் சட்டப்படி அவர்கள் 3 பேரும் கைது செய்யப்படவிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஊடகங்களை காப்பாற்ற இராணுவத்தை வெளியேற்றவேண்டும்-ராமதாஸ்

20-[1]அரசின் அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்களையும், ஊடகங்களையும் காப்பாற்ற வேண்டுமானால், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் நாளிதழான உதயன் அலுவலகம் மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
”இலங்கையில், கிளிநொச்சி நகரில் உள்ள உதயன் நாளிதழின் கிளை அலுவலகம் மீது இன்று அதிகாலை கொடூரமான முறையில் தாக்குதல் நடததப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் உதயன் நாளிதழின் பணியாளர்கள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
உதயன் அலுவலகம் சூறையாடப்பட்டதுடன், அங்கிருந்த ஊர்திகளும் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் ஊடகங்களுக்கு எதிரான இத்தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழர்களுக்கு எதிரான படையினரின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தியதாலும், ஜெனிவா மனித உரிமை ஆணைய மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகளின் தூதர்கள் தெரிவித்த கருத்துக்களை உதயன் நாளிதழ் விரிவாக வெளியிட்டதாலும் ஆத்திரமடைந்த ஆட்சியாளர்கள் தான் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் நடந்த போது படையினர் அங்கிருந்த போதிலும், தாக்குதலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதலை நடத்தியவர்களும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இராணுவத்தினரை கொண்டு தமிழர்களை அடக்கி வரும் சிங்கள அரசு, ஊடகங்களையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காமல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் இருக்க முடியாது.
இலங்கை அரசின் அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்களையும், ஊடகங்களையும் காப்பாற்ற வேண்டுமானால், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை உடனடியாக வெளியேற்றுவது தான் ஒரே வழி என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை ஐ.நா.வும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

01 ஏப்ரல் 2013

இந்தியாவினால் எதுவும் செய்யமுடியாது-ரணில்

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசாங்கத்தினால் அவசரமாக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்திய - சிறிலங்கா உறவுகளில் நெருடல் ஏற்பட்டுள்ள சூழலிலேயே, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லி அழைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடெல்லியின் அழைப்பை ஏற்று, இன்றிரவு இந்தியா செல்லும் ரணில் விக்கிரமசிங்க, வரும் வியாழக்கிழமை கொழும்பு திரும்புவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்த பின்னணியில், இருநாடுகளுக்கும் இடையில் சுமுக உறவுகள் நிலவவில்லை.
நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாது என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
சிறிலங்காவில் நீடித்து நிலைக்கக் கூடிய அமைதியையும், அதிகாரப் பகிர்வையும் கொண்டு வருவதற்கு இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா அவசர அழைப்பு விடுத்துள்ளது.

“ரோம் எரியும் போது…” சிரித்து மகிழும் ஹக்கீமும் மகிந்தவும்

mahinda-hakeemகொழும்பு ஹவ்லொக் மைதானத்தில் நேற்றுமாலை நடைபெற்ற சிறிலங்கா – சீன தாய்பே அணிகளுக்கு இடையிலான ரக்பி ஆட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலகலப்பாக சிரித்துப் பேசும் ஒளிப்படம் ஒன்றை கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று முகப்புப்படமாக வெளியிட்டுள்ளது.
“ரோம் எரியும் வேளையில்” என்று இந்த ஒளிப்படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான பெளத்த அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹக்கீம் விசனம் வெளியிட்டிருந்தார்.
பெபிலியானவில் முஸ்லிம் வணிக வளாகம் தாக்கப்பட்ட பின்னர், அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் படி சிறிலங்கா அதிபரிடம் ரவூப் ஹக்கீம் கேட்டிருந்தார். ஆனால் அதற்கு சிறிலங்கா அதிபர் செவிசாய்க்கவில்லை.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுகாலை வரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டக்குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆராயப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஹக்கீமும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கத் தவறினால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இந்தநிலையிலேயே நேற்றுமாலை சிறிலங்கா அதிபருடன் இணைந்து அவர் ரக்பி ஆட்டத்தை ரசித்து மகிழ்ந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சீன தைபே அணியுடனான ரக்பி ஆட்டத்தில் சிறிலங்கா அதிபரின் மகனும் சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான யோசித ராஜபக்ச சிறிலங்கா அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.
இதில் சிறிலங்கா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

31 மார்ச் 2013

தமிழக போராட்டங்களால் கலங்கிப்போயுள்ள சிங்களம் புது டெல்லி செல்ல திட்டம்!

சிறிலங்காவுக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்பலைகளால் மஹிந்த அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சிறிலங்கா உயர்மட்ட குழுவொன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி செல்லும் சிறிலங்கா குழுவினர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகளின் சிறிலங்கா எதிர்ப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
நீண்ட காலமாக நிலவி வரும் இரு தரப்பு உறவுகளை பாதுகாக்கவும், தமிழகம் செல்லும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்க எடுக்கப்பட வேண்டுமென இந்தியாவை கோரவுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தல், தனி ஈழ இராச்சியம் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைள தமிழக அரசியல்வாதிகள் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த அழுத்தங்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எனவே, இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் சிறிலங்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாலச்சந்திரன் தொடர்பில் கருத்துக்கூற தடுமாறிய பிரசாத் காரியவசம்!

1விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில், புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவாசம் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
இந்தியாவின் ‘டெக்கான் ஹெரால்ட்‘ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குழப்பமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக வெளியான ஒளிப்படங்கள் குறித்து, சிறிலங்கா அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,“அந்தப் படங்கள் மாற்றம் செய்யப்பட்டவை.
அந்தப் படம் எடுக்கப்பட்ட பதுங்குகுழி சிறிலங்கா இராணுவத்தினருடையது அல்ல என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அந்தப் படங்களை முதலில் எம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தால், அதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் விசாரணக்கு உத்தரவிட்டிருக்க முடியும்.
அந்தப் படம் ஊடகங்களில் வெளியிடப்பட்டு நீதி கோரப்பட்டுள்ளதால், இதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.
இந்தச் செவ்வியில் சிறிலங்கா தூதுவர் குழப்பமான கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ள அவரே, இன்னொரு கட்டத்தில் தம்மிடம் அதனை முதலில் தந்திருந்தால் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாற்றம் செய்யப்பட்ட படம் குறித்து விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் உறுதியான பதிலை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

30 மார்ச் 2013

போர் தொடங்கிவிட்டது- -அணு ஆயுதப் போர் வெடிக்கும்:வடகொரியா அறிவிப்பு

தென்கொரியாவுடன் போர் தொடங்கி விட்டதாக வட கொரியா பிரகடனம் செய்திருக்கிறது.இதனால் கொரிய தீபகற்ப பிரதேசத்தில் போர்ப் பதற்றம் உச்சத்தை அடைந்திருக்கிறது. வடகொரியா- தென்கொரியா இடையேயான பதற்றம் கடந்த அரை நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக நீடித்தே வருகிறது. தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து நிற்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. அதாவது பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ நிலைகளைத் தாக்கும் திறன் தங்களுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது வடகொரியா. இதைத் தொடர்ந்து 3-வது அணுகுண்டு சோதனையையும் வடகொரியா நடத்தியது. இதனால் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தியது அமெரிக்கா. அதே நேரத்தில் கொரிய தீபகற்பகப் பகுதியில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மிகப் பிரம்மாண்டமான போர் ஒத்திகையையும் நடத்தி வருகிறது. இப்போர் ஒத்திகையை வடகொரியா கடுமையாக எதிர்த்து வந்தது. மேலும் நேற்று முன்தினம் அமெரிக்காவின் அதிநவீன அணுகுண்டுகளை வீசக் கூடிய 2 விமானங்கள் தென்கொரியாவின் தீவகப் பகுதி ஒன்றில் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்தது. இதைத் தொடர்ந்து இன்று வடகொரியா, தென்கொரியாவுடன் போரைத் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்திருக்கிறது. மேலும் வடகொரியா அரசு, கட்சிகள்,அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தென்கொரியாவுடனான அனைத்து வகையிலான ஒப்பந்தங்களும் கைவிடப்படுவதாகவும் இனி போர்க் காலங்களில் என்ன மாதிரியான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதுவே அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தென்கொரியா தொடருமேயானால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை அடைந்திருக்கிறது. இப் போர்ப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று ரஷியா,சீனா ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

29 மார்ச் 2013

எம்மீது வீண்பழி போடுகிறார்கள் என்கிறது பொது பல சேனா

வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற தேசத் துரோகச் சக்திகளும் சில சர்வதேச செய்தி நிறுவனங்களுமே இலங்கையில் நடக்கின்ற வன்முறைகள் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் மீது சேறு பூசுவதாக அந்த அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கூறுகிறார்.
அண்மைக் காலங்களாக இலங்கையில் நடந்துவருகின்ற வன்முறைச் சம்பவங்களுடன் தமது அமைப்பை தொடர்புபடுத்தும் முயற்சிகள் நடந்துவருவதாகவும் ஞானசார தேரர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய விடயங்கள்
ஆட்கடத்தல், துஷ்பிரயோகம், தாக்குதல், மனித உரிமை
இதேவேளை, எந்தவொரு நாட்டிலும் வன்முறைகள் நடப்பது இயல்பு என்றும் இவ்வாறான வன்முறைகளுக்கு சிலர் இனவாத சாயம் பூசுவதாகவும் அவர் கூறினார்.அத்துடன், பௌத்த மத அமைப்புகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கோடு வேற்று மதத்தவர்கள் பௌத்த பிக்குகளைப் போல உடையணிந்து தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் ஞானசார தேரர் குற்றஞ்சாட்டினார்.
'முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மீதும் குற்றச்சாட்டு'
இலங்கையில் முஸ்லிம் கடைகளில் பொருள்வாங்க வேண்டாம் என்றும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் தொலைபேசிகளில் எஸ்எஸ்எம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, இலங்கையில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலரே இப்படியான தொலைபேசி எஸ்எஸ்எம் குறுஞ்செய்திகள் மூலமும் டுவிட்டர் போன்ற இணையதளங்கள் ஊடாகவும் இனவாத செய்திகளைப் பரப்பிவருவதாகவும் அவர்களை பாதுகாப்புத் தரப்பினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் பொது பல சேனா அமைப்பு கூறுகிறது.
பொது பல சேனா அமைப்பே நாட்டில் இனவாதக் கருத்துக்களை தூண்டிவருவதாக பல தரப்பினரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அந்த அமைப்புக்கு அரசின் உயர்மட்டத்திலிருந்து பண உதவி கிடைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அண்மையில் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமும் பொது பல சேனா அமைப்பின் ஞானசார தேரரே ஃபெஷன் பக் நிறுவனத்தின் மீதான தாக்குதலை அண்மையில் தூண்டியிருந்ததாக குற்றஞ்சாட்டுகிறார்.
பொது பல சேனா அமைப்பின் பயிற்சிக் கூடமொன்றின் திறப்பு விழாவில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்ட நிகழ்வையும் ரவூப் ஹக்கீம் பிபிசி தமிழோசையிடம் விமர்சித்தார்.

நன்றி:பி.பி.சி.

தமிழக தீர்மானமே வலிமையானது-தமிழ் மக்கள் பேரவை

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது என யாழ் மாவட்ட மக்கள் பேரவை அறிவித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் தமிழருக்கு சார்பான தீர்மானம் நிறைவேற்றியமைக்காக தாங்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்மானம் எமது இனத்தின் விடிவுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக விடிவிற்காகப் போராடி வீரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் மனங்களில் பால் வார்த்த தீர்மானமாக தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம் திகழ்வதாகவும் யாழ். குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ் குடாநாட்டு மக்களின் சார்பில் யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் ஈழத் தமிழர்கள் சிங்களவர்களால் அடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர்.
இந்த அடிமைத்தனத்தை எதிர்த்து கடந்த முப்பது வருட காலம் அகிம்சை ரீதியாகவும் முப்பது வருட காலம் ஆயுத ரீதியாகவும் நாங்கள் போராடினோம். ஆனால்இ எமது போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மீண்டும் அடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர். இந்த நிலையில் யாருமே உதவிக்கு இல்லை என்று தவித்துக்கொண்டிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு சார்பாக தமிழக மாணவர்கள் அலை அலையாக எழுச்சியடைந்து குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் உச்ச நிலையாக தமிழக சட்டப் பேரவை ஈழத் தமிழ் மக்களுக்கு சார்பான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது.
இந்த தீர்மானத்தை சபையில் கொண்டு வந்து சமர்ப்பித்து நிறைவேற்ற முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள். அவரின் இந்தச் செயற்பாடு எங்கள் மனங்களில் தேனாக இனிக்கின்றது. இந்தத் தீர்மானத்தால் ஈழத் தமிழர்கள் இன்று பெருமிதமடைகின்றனர். ஏழு கோடி மக்களின் தாயாக விளங்குகின்ற தமிழக முதல்வர் இன்று ஈழத் தமிழர்களையும் தன் பிள்ளைகள் போல் கருதி எங்களையும் அரவணைத்து நிற்கின்றமை வரலாற்றுத் திருப்பு முனையாக அமைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். இன்று வரை ஈழத் தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தையும் இறந்த தினத்தையும் கொண்டாடுகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் அவர் ஈழத் தமிழ் மக்கள் மீது கொண்ட அளப்பரிய அன்பும் அக்கறையுமே ஆகும். இன்று வரை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மூன்று எம்.ஜி.ஆர் மறுமலர்ச்சிக் கழகங்கள் இயங்கி வருகின்றன என்றால் அது எம்.ஜி.ஆர் மீது ஈழத் தமிழ் மக்கள் வைத்திருக்கின்ற அன்பிற்கும் மரியாதைக்கும் எடுத்துக்காட்டுக்களாகும்.
அதே எம்.ஜி.ஆரின் வழியில் இன்று எங்கள் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா தடம் பதித்துள்ளமை ஈழத் தமிழ் மக்களாகிய எமது விடுதலைக்கு முதற்படியாக இருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கம் எங்கள் மீது கட்டவிழ்த்து விட்ட யுத்தம் காரணமாக லட்சக்கணக்கான எங்கள் உறவுகள் கொல்லப்பட்டனர். ஏராளமான அப்பாவி மக்கள் காயப்படுத்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்னர். அந்தப் பெண்களின் நிலை கண்டும் ஈழத் தமிழரின் இன்னல் கண்டும் எமக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள ஜெயலலிதா அவர்கள் என்றும் எங்கள் மனக் கோயில்களில் பூசிக்கப்படுவார்.
தமிழர்களைக் கொன்றொழித்த சிறிலங்கா அரசுக்கும் அதன் இனவாதப் படைகளுக்கும் எதிராக ஜெனிவாவில் இரண்டு தடவைகள் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் அது வெறும் அடிப்படையற்ற தீர்மானமாகவே அமைந்துள்ளது. அந்த தீர்மானங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் எதுவித அக்கறையையையும் வெளிக்காட்டவில்லை. ஆனால்இ தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது ஐ.நா சபை தீர்மானத்தை விட ஆயிரம் மடங்கு வலிமையானது என்று யாழ். குடாநாட்டு மக்களாகிய நாம் கருதுகின்றோம். நேற்று புதன்கிழமை தொடக்கம் இன்று வரை யாழ்இ குடாநாட்டு மக்கள் தமிழக தீர்மானம் தொடர்பாக கதைப்பதிலேயே தமது பெருமளவு நேரத்தை செலவிடுகின்றனர். அந்தளவிற்கு இந்த தீர்மானம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால் இந்த தீர்மானம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டுமென்பதே எமது அவா ஆகும். இது செயற்படுத்தப்படும் திறன் வாய்ந்ததாக மாற வேண்டுமென்றும் குடாநாட்டு மக்களாகிய நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு மீண்டுமொரு தடவை நாங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

தமிழ் மக்கள் பேரவை
யாழ்.மாவட்டம்

28 மார்ச் 2013

தமிழக சட்டமன்ற தீர்மானத்தால் பாராட்டு மழையில் நனைகிறார் முதல்வர்!

ஈழத் தமிழர்களுக்காக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகள் குவிகிறது.
இதுபற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து:-

தா.பாண்டியன், (இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர்)
இலங்கை மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கை ஈழத் தமிழர்களுக்கு மிகவும் ஆறுதலாக அமைந்துள்ளது.
மிகவும் துணிவுடன் மத்திய அரசிடம் வாதாடும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இதிலும் வெற்றி கிட்டும். அவரது தீர்மானம் வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தும்.

வைகோ, (ம.தி.மு.க. பொதுச் செயலாளர்)
இலங்கை தமிழர்கள் நலன் கருதி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தமிழக முதல்- அமைச்சர் நிறைவேற்றிய தீர்மானம் வரலாற்று சிறப்புக்குரியது.
சுதந்திர தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இதே தீர்மானத்தை இந்திய பாராளுமன்றமும் நிறைவேற்றும் நாள் வரும். அனைத்து உலகம் அதை செயல்படுத்தும் நாளும் வந்தே தீரும். தீர்மானத்தை, நிறைவேற்றிய தமிழக சட்டசபைக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், மற்றும் ம.தி.மு.க. சார்பில் பாராட்டுதலை தெரிவிக்கிறேன்.

டாக்டர் ந.சேதுராமன் (மூவேந்தர் முன்னணி கழக தலைவர்)
ஐ.நா. சபையில் அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து இரட்டை வேடம் போட்ட காங்கிரஸ் ஓட்டு மொத்த தமிழர்களின் மனங்களை காயப்படுத்தியது. காயம்பட்ட தமிழர் இதயங்களுக்கு மயிலிறகால் வருடுவது போல் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம். ஆயிரம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வரலாற்றில் நீடித்து நிற்கும்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா காவிரி உரிமையை பெற்றுத் தந்தது போல நாளை கச்சத்தீவு மட்டுமல்ல, தமிழீழம் பெற்று தருவார். அதற்கான துணிவுடமையும், அறிவுடைமையும் இரண்டற கலந்த வீரப்பெண்மணி அவர்.

சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)
உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனும் ஈழப் பிரச்சினையில் என்ன நடவடிக்கைகள் அடுத்தடுத்து எடுக்கப்பட வேண்டும் என்று சிந்திக்கிறானோ அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக தமிழ் சமுதாயமே அவருக்கு துணை நிற்கிறது.

வேல்முருகன், (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்)
நட்புநாடு என்று நாடகமாடி இனப்படுகொலை நடத்தும் இலங்கையின் முகமூடியை கிழிக்க, தமிழீழம் அமைய இதுவரை எந்த ஆட்சியாளர்களும் செய்யாத, செய்யத் துணியாத நடவடிக்கைகள் தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரால் நடந்துள்ளது. இனமுழக்கங் களை வழங்கிய தமிழக முதல்-அமைச்சரை பாராட்டுகிறோம்.
தமிழர் உரிமை காக்க முதல்- அமைச்சர் எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் தன்னெழுச்சியான மாணவர்களின் எழுச்சி மற்றும் பொதுமக்களின் திரட்சி ஒரு புத்தொளியை தமிழினத்திற்கு தரும் என நம்புகிறோம்.

அருள்தாஸ் (தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர்)
தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு பிறகாவது மத்திய அரசு தமிழர்கள் மீது அக்கறை கொண்டு ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க, தனிஈழத்தை உருவாக்க உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும்.
இதே போல் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழ் சமுதாய அமைப்பினர், மாணவர் அமைப்பினர் பலர் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தேரரின் கூற்றுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் பதிலடி!

தமிழ் மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கொண்டு சென்றமையானது இலங்கையின் சட்டத்திற்கு முரணானது என எவராவது குற்றம் சுமத்தினால், எவரும் தனக்கெதிராக நீதிமன்றத்திற்கு செல்லலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அதியுயர் நாடாளுமன்ற மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக ராவணா சக்தி அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமது நாடாளுமன்ற குழு ஜெனிவாவில் செயற்பட்ட விதம் தொடர்பில் கூட்டமைப்புக்கு எதிராக எவரேனும் நீதிமன்றத்திற்கு சென்றால் அதனை எதிர்கொள்ள கூட்டமைப்பு தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜெனிவாவுக்கு சென்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதான நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து, இலங்கை தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுப்படுத்தியிருந்தனர்.

27 மார்ச் 2013

இலங்கை நட்பு நாடல்ல:தமிழக சட்டசபையில் தீர்மானம்

இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும் இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று புதன் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், தனி ஈழம் குறித்து இலங்கை வாழ்த் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்தோரிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனவும் இன்றைய தீர்மானம் வலியுறுத்துகிறது.
தொடர்புடைய விடயங்கள்
மனித உரிமை, அதிமுக, ஜெயலலிதா, மஹிந்த ராஜபக்ஷ
தீர்மானத்தினை முன்மொழிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தமிழுணர்வாளர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் விரைவில் மலர இருக்கிறது என்ற நிலையில், தமிழக மாணவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை முன்வைத்து, நடத்திவரும் தங்கள் அறப் போராட்டத்தைக் கைவிடவேண்டுமென்றும் கோரினார்.
முன்னதாக இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் அதன் தொடர்பான மாணவர் போராட்டம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கையின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் பேசினர்.
திமுக மீது ஜெயலலிதா சாடல்
திமுக இரட்டை வேடம் என ஜெயலலிதா குற்றச்சாட்டு.
விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதா திமுக இப்பிரச்சினையில் இரட்டைவேடம் போடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
டெசோ அமைப்பிற்கு புத்துயிரூட்டியுள்ள கருணாநிதி, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று கூறும் அவர், அவரது தமக்கை மகன் மறைந்த முரசொலி மாறன் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் சன் குழுமத்திற்குச் சொந்தமான ஐபிஎல் அணி, சன் ரைசர்ஸில், இலங்கை வீரர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து மௌனம் சாதிக்கிறார் என்றார்.
ஆனால் தான் எப்போதுமே உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுத்துவருவதாகக்கூறிய அவர், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதைத் தடுத்து நிறுத்தியதையும், இந்தியாவில் எங்குமே அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தியதையும், இலங்கையர் தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டதையும், இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகள் தமிழகத்தில் நடத்த அனுமதி மறுத்ததையும் நினைவு கூர்ந்தார்.
அவ்வாறான தனது நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் விதமாகத்தான் மாணவ-மாணவியரின் போராட்டம் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மாணவர் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன.

செய்தி:பி.பி.சி 

26 மார்ச் 2013

கூட்டமைப்புடன் பேச பீரீஸ் முட்டுக்கட்டை;ரஜீவ விஜேயசிங்க

newsஅரசியல் தீர்வுத்திட்டப் பேச்சு விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்க, அரச தரப்பு பேச்சுக்குழு மறுசீரமைக்கப்படவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் பீரிஸ் தலைமை வகித்து முன்னெடுத்த எந்தத் திட்டம் வெற்றியளித்துள்ளது என்று கேள்வியெழுப்பிய அவர், பேச்சு குழம்பினால் தனக்குச் சிக்கல் ஏற்படும் எனத் தலையைப் பாதுகாக்க முனைபவர்களை வைத்துக்கொண்டு பேச்சை முன்னெடுப்பது சிக்கல்தான் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், தீர்வுத்திட்டப் பேச்சுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தீர்வுத்திட்டப் பேச்சுகள் தொடர்பில் தமக்கு உரிய வகையில் அறிவிக்கப்படாததால் தான் அந்தக் குழுவிலிருந்து ஆறு மாதங்களுக்கு முன்னரே வெளியேறிவிட்டார் என்றும் ரஜீவ விஜயசிங்க மேலும் கூறினார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் நோக்கில் போருக்குப் பின்னர் இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பித்தது. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனையின் பிரகாரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பேச்சுகள் ஆரம்பமாகி சில மாதங்கள் சென்ற பின்னர் இடைக்காலத் தீர்வுத்திட்ட யோசனையை கூட்டமைப்பு முன்வைத்தது. எனினும், அந்த யோசனைத் திட்டத்தை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதனால், இருதரப்பு பேச்சுகளுக்கும் தடங்கல் ஏற்பட்டது. எழுத்துமூலம் உறுதிமொழி தராவிட்டால் பேச்சுகளைத் தொடர்வதில் பயனில்லை எனத் தெரிவித்து அதிலிருந்து கூட்டமைப்பு வெளியேறியது.
இருப்பினும், சில மாதங்களுக்குப் பின்னர் புரிந்துணர்வின் பிரகாரம் பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகின.
காலப்போக்கில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. அரச தரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் பிரதமர் சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இராஜிநாமா செய்தமை உட்பட அரச தரப்பினரின் அசமந்தப் போக்காலேயே இந்நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில், மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அரசு நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனையை முன்வைத்து கூட்டமைப்புக்கு நிபந்தனை விதித்ததால் தீர்வுத்திட்டப் பேச்சுகள் முடங்கின.
இவ்வாறு பேச்சுகள் முறிவடைந்து பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசு கூட்டமைப்பு பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகவேண்டும் எனச் சர்வதேச சமூகம் கருத்து வெளியிட்டுள்ளது. அரசு இதயசுத்தியுடன் பேச்சை ஆரம்பிக்குமானால் அதில் பங்கேற்கத் தயார் எனக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அரசியல் தீர்வுத்திட்டப் பேச்சுகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதற்கு அரச தரப்புத் தயாராக உள்ளதா என அரச தரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவிடம் "உதயன்' வினவியது.
இதற்குப் பதிலளித்த அவர், பேச்சுகள் மீண்டும் ஆரம்பமானால் அது வரவேற்கக்கூடியதொன்று. இருப்பினும், சில தடங்கல்களும் உள்ளன. பதவியை மட்டும் காப்பாற்றிக்கொண்டால் போதும் எனச் செயற்படுபவர்களை வைத்துக்கொண்டு நேர்மையான பேச்சை முன்னெடுக்க முடியாது. எனவே, தீர்வு விடயத்தில் நீதியாகச் செயற்படும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் அரச தரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெறவேண்டும் என்று கூறினார்.
அப்படியானால் மீண்டும் பேச்சு ஆரம்பமாவதற்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸா தடங்கலாக இருக்கின்றார் என "உதயன்' அவரிடம் மற்றுமொரு கேள்வியைத் தொடுத்தபோது, அவ்வாறு நான் கூறவில்லை. பீரிஸ் தலைமை வகித்து முன்னெடுத்த எந்தத் திட்டம் வெற்றியளித்துள்ளது? பேச்சு குழம்பினால் தனக்குச் சிக்கல் ஏற்படும் எனத் தலையைப் பாதுகாக்க முனைபவர்களை வைத்துக்கொண்டு பேச்சை முன்னெடுப்பது சிக்கல்தான்.
பேச்சு மேசைக்குச் செல்லும்போது அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த எனக்கு இது குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை. இதனால் இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே நான் இராஜிநாமாக் கடிதத்தை வழங்கிவிட்டேன்.'' நிமல் போன்றோர் அதிலிருந்தால்தான் பங்கேற்கத் தயார் என்று கூறியிருந்தேன் என்றும் அவர் கூறினார்.

25 மார்ச் 2013

சர்வதேசம் மத்தியஸ்தம் செய்தால் அரசுடன் பேசத்தயார்-சம்பந்தன்

“கடந்த காலங்களில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகளைக் குழப்பியது அரச தரப்புத்தான். இதனால் அதன் மீது எமக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், விசுவாசமாக ஆக்கபூர்வமாக நம்பகத்தன்மையுடன் சர்வதேசத்தை நடுவராக வைத்துக் கொண்டு அரசு பேச்சுகளை ஆரம்பித்தால் நாம் அதில் பங்கேற்போம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாட்டில் இனப்பிரச்சினை தொடர தாம் விரும்பவில்லை எனவும், அதற்கு மிக விரைவில் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாவதற்கும், மத்தியஸ்தம் வகிப்பதற்கும் உதவ தென்னாபிரிக்காவோ அல்லது ஏனைய மூன்றாம் தரப்போ முன்வருமானால் அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் வடக்குத் தேர்தலை நடத்தி, அதிகாரங்களைப் பகிர்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியிடம் நேற்று மாலை “சுடர் ஒளி’ வினவியது.
இதன்போது அவர் தெரிவித்தவை வருமாறு:
“இந்த நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப்பெற நாம் அரசுடன் விசுவாசமாக பேச்சு நடத்தச் சென்றோம். ஆனால், பல சுற்றுகளில் நடந்த அந்தப் பேச்சுகள் அனைத்தையும் பயனற்றதாக்கி, வடமாகாணசபைத் தேர்தலையும் இழுத்தடித்து எம்மை ஏமாற்ற முனைந்தது அரசு. இந்த நிலையை உணர்ந்துகொண்ட நாம் பேச்சிலிருந்து வெளியேறினோம்.
அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்தோம்.
ஆனால், பேச்சைக் குழப்பியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனவும், அது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வருகின்றதில்லை எனவும் சர்வதேச நாடுகளுக்குப் பொய்களை அள்ளிவீசி வந்தது இந்த அரசு தற்போதும் இதனையே செய்துவருகின்றது.
ஆனால், நாம் ஏற்கனவே உண்மை நிலைவரத்தை பல தடவைகள் இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் தெரிவித்துள்ளோம். அரசு நம்பகத்தன்மையுடன் பேச்சுகளை ஆரம்பித்திருந்தால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் பங்கேற்றிருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளோம்.
இந்நிலையில், இனப்பிரச்சினை அரசியல் தீர்வுப் பேச்சுகளை இலங்கை அரசு தமிழ்க் கூட்டமைப்பு மீண்டும் ஆரம்பிக்க மத்தியஸ்தம் வகிப்பதற்கு சர்வதேச நாடுகள் முன்வந்தால் தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அத்துடன், செப்டெம்பர் மாதத்துக்குள் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழருக்கு அதிகாரங்களை அரசு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா குறியாகவுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக தனது இரண்டாவது பிரேரணையை கடந்த வாரம் ஜெனிவாவில் நிறைவேற்றிய அமெரிக்கா, இலங்கையில் அரசு கூட்டமைப்பு பேச்சு தொடர்பில் தற்போது தமது நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விடயம்.
எனவே, விசுவாசமாக ஆக்கபூர்வமாக நம்பகத்தன்மையுடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பித்தால் நாம் அதில் பங்கேற்போம். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் நாம் காலத்தை இழுத்தடிக்க விரும்பவில்லை.
சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதுவே தமிழ் மக்களினதும் எதிர்பார்ப்பாகும்” என்று தெரிவித்தார் சம்பந்தன் எம்.பி.
இதேவேளை, இலங்கை அரசு தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் அரச தரப்பின் நிலைப்பாடு என்ன என்று கேட்பதற்காக பேச்சுக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவிடம் தொடர்புகொண்டு கேட்பதற்கு நேற்றுப் பல தடவைகள் முயன்றபோதும் அவை பலனளிக்கவில்லை.

24 மார்ச் 2013

அமெரிக்க தீர்மானம் உப்புச்சப்பற்றது;வடபகுதி சிவில் சமூகம் கருத்து!

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிடும் செயற்பாடாகவே, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் உள்ளது. நாங்கள் சர்வதேசத்துக்கு எத்தனையோ விடயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லியுள்ளோம்.
ஆனால் அதில் ஒன்றைத்தானும் இதில் உள்ளடக்காமை எங்களுக்கு ஏமாற்றத்தையளிக்கின்றது. இவ்வாறு வடபகுதி சிவில் சமூகத்தினர் "உதயனிடம்' கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் இரண்டாவது வருடமாகவும் அமெரிக்காவினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பில் வடக்கிலுள்ள சிவில் சமூகத்தினரிடம் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இது குறித்து மன்னார் ஆயர் இராசப்பு யோசப் ஆண்டகை தெரிவிக்கையில், கள்ளனிடமே களவு தொடர்பில் விசாரிக்கச் சொன்னால் எப்படியிருக்கும்? நாங்கள் இங்குள்ள நிலைமை தொடர்பாகவும், சர்வதேச தலையீடு ஏன் என்பது தொடர்பிலும் தெளிவாக விளக்கியும் அவர்கள் அதனை தமது வரைபில் உள்ளடக்காதது ஏமாற்றம்தான் என்றார்.
தனது பெயரை வெளியிட விரும்பாத அரச உத்தியோகத்தர் ஒருவர் தெரிவிக்கையில், ஜெனிவா தீர்மானத்தால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அமெரிக்கா, இந்தியாவுக்கு எது தேவையோ அதைக் கொடுத்தால் சரி. எங்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
தமிழக மாணவர்களிடம் இருக்கின்ற உணர்வுகள் எங்கள் இளைஞர்களிடம் இருக்கின்றதா என்பதை நாம் ஒருமுறை பார்க்க வேண்டும். நீங்கள் நடத்துவது ராஜதந்திரம். அமெரிக்கா நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அன்றே தடுத்திருக்கலாம் என்றார்.
வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் தெரிவிக்கையில் :
இலங்கையின் மீள்குடியமர்வு நடவடிக்கைகளை அமெரிக்கத் தீர்மானம் பாராட்டியுள்ளது. இது எங்களுக்கு ஏமாற்றமாக இருக்கின்றது. இலங்கையில் உள்ளக இடப்பெயர்வு என்று சொல்வதைத் தொடக்கிவைத்தவர்கள் எங்கள் மயிலிட்டி, பலாலி மக்கள். முதன்முதலாக இடம்பெயர்ந்த இலங்கை மக்கள் நாங்கள். இன்னமும் சொந்த இடத்துக்குத் திரும்ப முடியாமல் இருக்கின்றோம்.
மீள்குடியமர்வு என்று சொல்லிக் காடுகளுக்குள் இரண்டு தடியும், தகரமும் வழங்கி மீளக்குடியமர்த்தினால் சரியா? எனவே அமெரிக்கத் தீர்மானம் எங்கள் மீள்குடியமர்வு பற்றிச் சொல்லத் தவறிவிட்டது என்றார்.
காணாமற் போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவிக்கையில், காணாமற் போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெற்றால் மாத்திரமே நீதி நிலைநாட்டப்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே இந்த விடயத்தில் ஐ.நாவின் தலையீட்டைக் கோரி நிற்கின்றோம்.
அமெரிக்கத் தீர்மானத்தில் காணாமற் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்று கூறப்பட்டதை வரவேற்கின்றோம் என்றார். மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்தந்தை ஜெபமாலை தெரிவிக்கையில் :
அமெரிக்கத் தீர்மானம் பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிடும் செயற்பாடு போலுள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்கா தான் சமர்ப்பித்த வரைவுத் தீர்மானத்தில் உறுதியாக இருந்திருக்க வேண்டும் என்றார்.
வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவிக்கையில் :
எமக்கு ஏமாற்றமாக இருக்கின்றது. இந்தத் தீர்மானத்தில் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இருப்பினும் எங்களுக்காகக் குரல் கொடுக்கும் தாய்த் தமிழக மாணவர்களுக்காக நாங்கள் தலை வணங்குகின்றோம் என்றார்.

மகிந்த, கோத்தா, 14 இராணுவ அதிகாரிகள் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வர்!

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட்டாலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, மற்றும் 14 இராணுவ அதிகாரிகள் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் புதுடெல்லி சிறப்பச் செய்தியாளரான, வெங்கட் நாராயண் இதுகுறித்து எழுதியுள்ளதாவது-
2009இல் நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தனது பாதுகாப்புப் படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் குறித்த நம்பகமான சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற அனைத்துலக சமூகத்தின் கோரிக்கையை சிறிலங்கா தொடர்ந்தும் புறக்கணிக்கும் என்று புதுடெல்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனென்றால், இந்த விசாரணைகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரரும், பாதுகாப்புச்செயலருமான கோத்தாபய ராஜபக்ச, மற்றும் குறைந்தது 14 மூத்த இராணுவ அதிகாரிகள் வகித்த முக்கியமான பங்கை வெளிப்படுத்தி விடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்த, மூன்று பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் இறுதிக்கட்டத்தில், குறைந்தது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவும் சுதந்திர வட்டாரங்களும் மதிப்பிட்டுள்ளன.
இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை இரண்டாவது ஆண்டாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அனைத்துலக சமூகம் கோரியுள்ளது.
நாசிக்களுக்கு எதிரான நூரன்பேர்க் விசாரணை மற்றும் கம்போடியா, ருவான்டா, யூகோஸ்லாவியா, சியராலியோன், லெபனான் போன்ற நாடுகளில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து நடத்தப்பட்ட ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளின் போது, அதற்குப் பொறுப்பான உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோன்று சிறிலங்காவிலும் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், சிறிலங்கா ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்ற வகையில், விசாரணை செய்யப்படுவோரின் பட்டியலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முதலிடத்தில் இருப்பார்.
அடுத்ததாக, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இருக்கக் கூடும்.
அவர், சிறிலங்கா அதிபரின் சகோதரர் என்ற நெருக்கத்தைப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு என்னென்ன ஆயுதங்கள், கருவிகள் தேவையோ அவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.
போரில் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்த திறமையான மூலோபாயத்தை திட்டமிட்டு செயற்படுத்தியவர் என்ற மதிப்பை கோத்தாபய ராஜபக்ச பெறவேண்டும் என்றால், போரின் முடிவில் தனது படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்காக வெட்கப்படாமல் இருப்பது சாத்தியமில்லை என்று புதுடெல்லி நிபுணர்கள் வாதிட்டுள்ளனர்.
அதன்பின்னர், கூட்டுப்படைகளின் தலைவர் எயர் மார்சல் டொனால்ட் பெரேரா, இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, விமானப்படைத் தளபதி றொசான் குணதிலக ஆகியோரும் விசாரிக்கப்படக் கூடும்.
மேலதிகமாக, அப்போது 53வது டிவிசன் தளபதியாக இருந்த பிரிகேடியர் கமால் குணரத்ன, 55வது டிவிசன் தளபதியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வா, 57வது டிவிசன் தளபதியாக இருந்த பிரகேடியர் ஜெகத் டயஸ், 58வது டிவிசன் தளபதியாக இருந்த பிரிகேடியர் சவீந்திர சில்வா, 59வது டிவிசன் தளபதியாக இருந்த பிரகேடியர் நந்தன உடவத்த, அதிரடிப்படை - 1 இன் தளபதியாக இருந்த பிரிகேடியர் றோகண பண்டார, அதிரடிப்படை - 2 இன் தளபதியாக இருந்த பிரிகேடியர் சத்யப்பிரிய லியனகே, அதிரடிப்படை-8இன் தளபதியாக இருந்தவரும், உண்மையில் பிரபாகரனைக் கொன்றவருமான கேணல் ஜிவி ரவிப்பிரிய ஆகியோரும் இந்த விசாரணையை எதிர்கொள்வர்.
டிவிசன்களின் தளபதிகளான இவர்கள், தப்பிப்பதற்கான எல்லா வழிகளையும் மூடி, வன்னியில் ஓரிடத்தில் சிக்க வைத்து விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள்.
ஈழப்போரின் மீறல்கள் குறித்த விசாரணைகளில் திருப்தி கொள்ளும் வரை அனைத்துலக சமூகம், நீதியாயமான நம்பகமான விசாரணைகளைக் கோரும் என்றும் புதுடெல்லி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

23 மார்ச் 2013

அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு… தமிழக அரசு உத்தரவு!

 Tn Govt Gives Police Protection M K Azhagiri முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மதுரை போலீஸ் கமிஷனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை தமிழர் பிரச்னைக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேறியது. அழகிரி உட்பட 5 மத்திய அமைச்சர்கள், தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். அதையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரிக்கு மட்டும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு, மதுரை போலீஸ் கமிஷனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அழகிரி வீட்டில் வழக்கம் போல் 4 போலீசார், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அழகிரியுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாப்பு போலீசார் உடன்செல்வர். "எதற்காக அழகிரிக்கு பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற விபரம் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது, தி.மு.க.வில் அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே மறைமுகமான மோதல் இருப்பதால், அழகிரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருக்கலாம்" என்று மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் தமிழ் மக்களுக்கு பிரயோசனமற்றது!

ஜெனிவாவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றுப்பட்டுள்ள தீர்மானம் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழித்துள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இத் தீர்மானம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயற்பாடு என்பதால் தீர்மானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஜ.நா மனிதவுரிமை கூட்டத் தொடரில் உரையாற்றி நாடு திரும்பியுள்ள அவர் இன்று நண்பகர் யாழ்.இராசாவின் தோட்ட வீதியில் உள்ள யாழ்.ஊடக மையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
இச் சந்திப்பில் ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
அமெரிக்காவால் ஜ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் என்று சொல்லப்படும் தீர்மானத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி எந்தவிதத்திலும் சொந்தம் கொண்டாடவில்லை.
ஏனெனில் தமிழ் மக்களை ஏமாற்றி அழிவின் பாதையில் கொண்டு செல்ல நாம் ஒருபோதும் தயாராக இல்லை. இத் தீர்மானத்தை நாம் எதிர்ப்பதற்கு காரணங்கள் உள்ளது.
கடந்த வருடமும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் என்று சொல்லிக் கொண்டு சிறிலங்க அரசாங்கம் தனக்கு விசுவாசமானவர்களால் தனது யுத்தக் குற்றத்தை மூடி மறைப்பதற்காகவும், சர்வதேச விசாரணையில் இருந்து தப்பிக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி அறிக்கையினையே முன்வைக்கப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் தாயரிக்கப்பட்ட அறிக்கையினை நடைமுறைப்படுத்த ஒருவருட கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஒரு வருட கால அவகாசத்திற்குள் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக மோசமானதாகும்.
குறிப்பாக தமிழ் மக்களுடைய காணிபறிப்பு, பல்கலைக்கழகங்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் உச்சம், மீள்குடியேற்றம் என்னும் போர்வையில் மக்கள் காடுகளுக்குள் தள்ளிவிடப்பட்டது மற்றும் புணர்வாழ்வு அழிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறான விடையங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறாமலும் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையினை கைவிடப்பட்டும் உள்ளதாக இம்முறை அமெரிக்காவல் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளது.
அது மட்டும் அல்லாமல் எந்தவிதமான பிரியோசனம் இல்லா கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் மூலமாக 13 ஆவது திருத்தத்துடன் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே நாம் இத் தீர்மானத்தை முழுமையாக எதிர்க்கின்றோம்.
எமது தழிழ் இனம் அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பிற்குப் அப்பால் சர்வதேசத்தில் தலையீட்டுடன் அல்லது சர்வதேசத்தின் முழுப் பார்வையில் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றும் இங்கு நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா-வின் நடவடிக்கையே சந்தேகத்துக்கு உரியது!

may17_protest[1]ஐ.நா. இப்போது தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், போர் நடந்துகொண்டு இருந்த காலத்தில் மௌனமாகப் பார்த்துக்​கொண்டு இருந்ததும் இதே ஐ.நா-தான். அதிகாரிகள். தமிழ் உணர்வாளர்கள் இதையும் ஒரு பக்கம் விமர்சிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் ஒன்றுகூடலை நடத்தியது ‘மே-17’ இயக்கம். அதன் நிறுவனர்களில் ஒருவரான திருமுருகன் இதுபற்றி நம்மிடம் விரி​வாகப் பேசினார்.
கேள்வி: அமெரிக்கத் தீர்மானத்தை இரண்டு விதமாக விமர்சிக்​கிறார்களே?
பதில்: அமெரிக்கத் தீர்மானம் தமிழர்களுக்குச் செய்யும் மோசடி என்று முதலில் பேசியது எங்கள் இயக்கம்தான். இதுவரை உலகம் பார்க்​காத கொடூரத்தைச் செய்தது இலங்கை அரசு.
இதுபற்றி, சர்வதேச விசாரணை வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்தபோது, உலகத்தை ஏமாற்றுவதற்காக ‘நாங்களே விசாரிக்​கிறோம்’ என்று இலங்கை அரசாங்கமே விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதை அடிப்படையாகக்கொண்டுதான் அமெரிக்கத் தீர்மானம் வடிக்கப்பட்டுள்ளது.
அது எப்படி சரியானதாக இருக்கும்? இலங்கை அரசை எவரும் நம்பாத நிலையில், அமெரிக்கத் தாம்பூலத்தில் வைத்து அதே ஆணைக்குழுவின் முடிவுகளை ஐ.நா. மூலமாக தமிழர்கள் தலையில் கட்டலாம் என்று நினைத்தனர்.
தமிழர்கள் கொஞ்சம் அசந்து இதை ஆதரித்திருந்தால்கூட சர்வதேச சமூகத்தின் காதுகளில் உருவாக்கி வைத்திருக்கும் நமது நியாயங்களையும் உரிமைக்குரலையும் ஒட்டுமொத்தமாக ஊத்தி மூடும் ஆபத்து அதில் இருக்கிறது. இது சம்பந்தமான விழிப்பு உணர்வை மாணவர்கள் ஊட்டியதால் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கேள்வி: ஐ.நா-வின் இந்த மனித உரிமை அமர்வில் வரவேற்கத்தக்க விஷயம் என்று எதுவுமே இல்லையா?
பதில்: ஐ.நா-வின் இந்த அமர்வு தமிழர்களைப் பொறுத்தவரை சிந்தனை மட்டத்தில் தோல்விஅடைந்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழர் தரப்புக் குரல் ஐ.நா. அமர்வில் ஒலித்திருக்கிறது. தமிழீழ மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஐரோப்பிய ஒன்றியமோ, அமெரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ முடிவு செய்வது அல்ல.
ஈழத்து மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் குரலாக கஜேந்திரகுமார் பொன்​னம்பலத்தின் குரல் ஒலித்திருக்கிறது.
அவர், ‘ஈழத் தமிழ் மக்களுக்கு உடனடிப் பாதுகாப்பாக இடைக்கால நிர்வாக சபை வேண்டும். அது, இலங்கை அரசின் மேலாதிக்கத்தில் இல்லாமல் சர்வதேசக் குழுவின் கண்காணிப்பில் அமைய வேண்டும்’ என்று, ஐ.நா. அமர்வில் பேசி இருக்கிறார்.
மக்கள் தங்களது விருப்பங்களைச் சொல்லும் பொது வாக்கெடுப்பை நோக்கி நகரும் வரை இடைக்காலத் தீர்வாக இதைக்கொள்ளலாம்.
கேள்வி: ஐ.நா. தீர்மானத்தின் மூலமாக இராணுவ முற்றுகையில் இருந்து விடிவு கிடைத்தால்கூட, அது பெரிய விஷயம் அல்லவா?
பதில்: அப்படி நடந்தால் நன்மைதான். ஆனால், அது சாத்தியம் அல்ல. குறைந்தபட்சம், பறிக்கப்​பட்ட நிலங்களைத் தமிழர்களிடமே மீண்டும் வழங்கி, இராணுவத்தை விலக்கி, சுதந்திரமாகத் தொழில்​செய்யும்படியான உரிமைகள்கூட அமெரிக்கத் தீர்மானத்தில் இல்லை.
பொத்தாம்பொதுவாக, ‘இலங்கை நீதி வழங்க வேண்டும்’ என, கொலை செய்தவர்களிடமே மீண்டும் இவர்கள் கோருகி​றார்கள். இதை நாம் ஏற்றுக்கொண்டால், எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிடும்.
கேள்வி: இலங்கைக் கொடூரங்கள் குறித்து இதுவரை, தருஸ்மன் குழு அறிக்கை, டப்ளின் தீர்ப்பாய அறிக்கை, சார்ள்ஸ் பெற்றி அறிக்கை ஆகிய மூன்றும் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் சில ஆவணப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இத்தனைக்கும் பிறகு, ஐ.நா. அதிகார​பூர்வமாக வாய் திறக்காதது ஏன்?
பதில்: ஐ.நா-வின் நடவடிக்கைகளில் பலத்த சந்தேகங்கள் உள்ளன. போர் முடிந்தவுடன் ஐ.நா-வின் உயர் சட்ட ஆலோசனைக் குழு, ‘ இலங்கை மீது உடனே சர்வதேச விசாரணையைத் தொடங்க வேண்டும்’ என்று சொன்னது. அதை நிராகரித்த பான் கி மூன், ‘இலங்கை அரசாங்கமே அதை விசாரிக்கலாம்’ என்று கூறினார்.
நல்லிணக்க ஆணைக் குழுவை ராஜபக்ச அமைத்தார். தருஸ்மன் குழு அறிக்கையையோ, கெலம் மேக்ரேயின் ஆவணங்களையோ அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளாத ஐ.நா., இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையை ஏற்றுக்கொள்கிறது என்றால்… அதை நாம் நிராகரித்துப் போராடுவதுதான் நேர்மையானது.
கேள்வி: காங்கிரஸ் கூட்டணியை விட்டு தி.மு.க. வெளியேறி இருக்கும் நிலையில், வருங்காலத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களில் டெசோவையும் இணைத்துக் கொள்வீர்களா?
பதில்: தி.மு.க-வோடு ஈழ ஆதரவு அமைப்புகளுக்கு இதுவரை கிடைத்த அனுபவமே போதுமானது. இன்றைக்கு எழுச்சி பெற்றிருக்கும் மாணவர் போராட்டங்களில் நுழைந்து அதனுடைய திசைவழியை மாற்றிவிடும் வல்லமைகூட தி.மு.க-வுக்கு உண்டு என்பதால், அவர்களுடன் இணைய மாட்டோம்.
தி.மு.க. வெளியேறி இருப்பது அவர்களது அரசியல் நலன் சார்ந்த நடவடிக்கையே தவிர, ஈழப் பிரச்சினைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது சாதாரண மக்களுக்குக் கூட தெரியும்!

ஜூனியர் விகடன்

22 மார்ச் 2013

சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டனர் மாணவர்கள்!

 Students Detained Bid Picket Pc Chennai House சென்னையில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வீடு உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். இலங்கையில் நடந்தது திட்டமிட்ட தமிழின படுகொலை என்பதை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும். ஐ.நா. மேற்பார்வையில் இலங்கையில் நடைபெற்ற தமிழின படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களின் கோரிக்கை. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட பள்ளி கல்வித்துறை வளாகம் முன்பு மாணவர்கள் கூடினர். இதனால் வளாகத்தின் முக்கிய நுழைவு வாயில் பூட்டப்பட்டது. மாணவர்கள், சாஸ்திரி பவனை முற்றுகையிடுவதற்கான ஊர்வலத்தை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் இருந்து தொடங்கினர். போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்து தடுப்புகளை அமைத்தனர். ஆனால் தடுப்புகளை உடைத்த மாணவர்கள் அருகில் இருந்த நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு மாணவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயின் கல்லூரி மாணவர் கார்த்திக் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டதால், மயக்கமடைந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதே போல சென்னையில் மன்றோ சிலை அருகில் உள்ள தென்பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக மாணவர்கள் அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடி நின்றனர். அங்கு ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு, ஊர்வலமாக ராணுவ தலைமை அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். போலீசார் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆவின் பாலகம் அருகில் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றம் எதிரே உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. சென்னையில் நேற்று மட்டும் 22 இடங்களில் நடந்த மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.