31 மார்ச் 2013

பாலச்சந்திரன் தொடர்பில் கருத்துக்கூற தடுமாறிய பிரசாத் காரியவசம்!

1விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில், புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவாசம் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
இந்தியாவின் ‘டெக்கான் ஹெரால்ட்‘ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குழப்பமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக வெளியான ஒளிப்படங்கள் குறித்து, சிறிலங்கா அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,“அந்தப் படங்கள் மாற்றம் செய்யப்பட்டவை.
அந்தப் படம் எடுக்கப்பட்ட பதுங்குகுழி சிறிலங்கா இராணுவத்தினருடையது அல்ல என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அந்தப் படங்களை முதலில் எம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தால், அதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் விசாரணக்கு உத்தரவிட்டிருக்க முடியும்.
அந்தப் படம் ஊடகங்களில் வெளியிடப்பட்டு நீதி கோரப்பட்டுள்ளதால், இதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.
இந்தச் செவ்வியில் சிறிலங்கா தூதுவர் குழப்பமான கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ள அவரே, இன்னொரு கட்டத்தில் தம்மிடம் அதனை முதலில் தந்திருந்தால் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாற்றம் செய்யப்பட்ட படம் குறித்து விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் உறுதியான பதிலை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக