06 மார்ச் 2013

அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வாசகங்களில் திருப்தியில்லை-சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் தற்போது இடம்பெற்றுள்ள வாசகங்கள் தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று ஜெனிவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வாசகங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த முறை கொண்டுவரப்படும் தீர்மானம் கடந்த முறை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை விட கடுமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
போர் குற்றம் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை தேவை என்பதை தாம் கேட்பதாகவும், இறுக்கமான ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அதே நேரம் மனித உரிமைப் பேரவைகளுக்கான அமெரிக்கத் தூதர், இந்த விடயம் தொடர்பாக இலங்கையோடு இணைந்து செயல்பட முடியும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் போரில் முக்கியப் பங்காற்றிய இலங்கை இராணுவத் தளபதி அமெரிக்க இராணுவப் பல்கலைக்கழகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
அமெரிக்காவை மட்டுமே நம்பி தாம் இருக்க முடியாது என்று தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன் பல்வேறு நாடுகளின் தூதர்களை சந்தித்து தமது நிலைபற்றி விளக்கிக் கூறுவதாகத் தெரிவித்தார்.
மனித உரிமைப் பேரவையின் அமர்வையொட்டி பல்வேறு கவன ஈர்ப்பு நிகழ்வுகளை மனித உரிமை அமைப்புகளும் அரசு சாரா நிறுவனங்களும ஏற்பாடு செய்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக