14 மார்ச் 2013

சிறிலங்கா தொடர்பில் கியூபா அமெரிக்கா இடையில் கடும் சொற் போர்!

இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் இறுதிவரைவு குறித்து விளக்கமளிப்பதற்கு அமெரிக்கா நேற்று நடத்திய முக்கிய கூட்டத்தின்போது குறித்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட கியூபா, இவ்விவகாரம் தொடர்பில் வோஷிங்டனுடன் நேரடிச் சொற்போரிலும் ஈடுபட்டது.
கியூபா பிரதி நிதிகளுக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் சூடான வாதப் பிரதி வாதங்கள் இடம்பெறுகையில், இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா குரல்கொடுத்தன.
இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பிரேரணையை நலிவடையச் செய்வதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டன.
இவ்வேளையில், குறுகீடு செய்து களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள், கனடா இராஜதந்திரிகள் ஆகியோர் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு முழுமையான ஆதரவை வெளியிட்டதுடன், அதில் காட்டமான முன்மொழிவுகளை உள்ளடக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதிகள் வழமையான பாணியில் மௌனம் காத்தனர். அமெரிக்கப் பிரேரணை விடயத்தில் பிரதான பாத்திரத்தை வகிக்கும் இலங்கைப் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஜெனிவா இராஜதந்திர சமர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா இன்று உத்தியோகபூர்வமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக