18 மார்ச் 2013

சேந்தாங்குளம் மக்களின் அவலம்!

sentha[1]நாங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு 2 வருடங்கள் கடந்துவிட்டன. ஆயினும் இதுவரை எமக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
இதேநேரம் நாங்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட சமகாலப் பகுதியில் ஏனைய பிரதேசங்களில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கூட எமக்குக் கிட்டவில்லை” இவ்வாறு இளவாலை சேந்தாங்குளம் மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வலி.வடக்கு குடிமக்கள் குழுக்களுக்கான கூட்டம் நகுலேஸ்வரம் முன்பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன்போதே குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் மேற்கண்டவாறு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
“மீளக்குடியமர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மின்சாரம், நீர், மலசல கூடம் போன்ற அடிப்படை வசதிகள் அரசியல் செல்வாக்குடனேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. சேந்தாங்குளம் பகுதியில் 105 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டோம்.
நாங்கள் கடற்றொழில், விவசாயம் என்பவற்றையே வாழ்வாதாரத் தொழில்களாகக் கொண்டுள்ளோம். ஆனால் எமது தொழிலை மேற்கொள்வதற்குரிய எதுவித உதவிகளும் வழங்கப்படவில்லை. தொழில் ஊக்குவிப்பு உதவிகளும் கிடைக்கவில்லை.
இந்திய அரசினால் வழங்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்திலும் கூட நாங்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்தப் பகுதிக்கான மீள்குடியமர்வுக்கும் பொறுப்பான அரச அதிகாரிகளின் அசமந்தத்தாலேயே அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்காத நிலையில் 2 வருடங்களாக அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். இனியாவது அதிகாரிகள் கண்திறந்து, எமக்கான வாழ்வாதார வசதிகளைச் செய்துதர வேண்டும்” என்று கோரியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக