03 மார்ச் 2013

இலங்கைக்கு எதிராக நாளை தீர்மானம் தாக்கல்!

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா நாளை தீர்மானம் கொண்டு வரவுள்ளது.
இதற்கிடையே போர்க்குற்றம் தொடர்பான ஆவணப் படம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது.
இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரெல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றும்படியும், கடமையை நிறைவேற்றுவதில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படும்படியும் இலங்கை அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்படும்” என்றார்.
2012ல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையொட்டி இப்புதிய தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. கடந்த ஆண்டு தீர்மானத்தில் நல்லிணக்கத்தையும், பொறுப்புடைமையையும் வலியுறுத்தி இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது” என்றார்.

பான் கீ மூன்:
இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கூறியதாவது:
இலங்கையில் பொறுப்புடைமையையும், தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த விரிவான செயல் திட்டம் தேவை என்பதை தொடக்கம் முதலே நான் வலியுறுத்தி வருகிறேன்.
கடந்த வாரம் நியூயோர்க்கில் ஜப்பான் தூதர் என்னை சந்தித்தார். அவரது தலைமையில்தான் இலங்கையில் உள்ள நிலைமையை ஆராய கடந்த ஆண்டு டிசம்பரில் குழு ஒன்றை ஐ.நா. அனுப்பிவைத்தது.
அக்குழுவில் வங்கதேசம், நைஜீரியா, ருமேனியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும், கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியரும் இடம்பெற்றிருந்தனர்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக உலக நாடுகளுடன் இணைந்து ஆக்கப்பூர்வமான பணிகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார் பான் கீ-மூன்.

ஆவணப்படம் திரையிடப்பட்டது:
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின்போது இராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணப் படம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்துக்கிடையே திரையிடப்பட்டது.
இந்த ஆவணப் படத்தை பிரிட்டனின் சனல்-4 தொலைக்காட்சி சார்பில் கெல்லம் மெக்ரே தயாரித்திருந்தார். படத்தை திரையிடுவதற்கு முன் மெக்ரே கூறியதாவது:
இந்த ஆவணப் படத்தை போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கான ஆதாரமாக கருத வேண்டும். இதில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள், விடியோ காட்சிகள் அனைத்தும் முறைப்படி சோதனையிடப்பட்டு உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

போர்நிறுத்தப் பகுதி:
இலங்கையின் கொலைக்களம்’ என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படத்தில் 2009ம் ஆண்டு போரின் போது கடைசி 138 நாள்களில் நிகழ்ந்தவை தொகுக்கப்பட்டுள்ளன.
இதில் விடுதலைப் புலிகள், பொதுமக்கள், இலங்கை இராணுவத்தினரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோ காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த ஆவணப் படத்தை திரையிட சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கை அரசு மீது சர்வதேச அளவிலான போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி இறுதிக் கட்டப் போரில் மட்டும் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை எதிர்ப்பு:
இந்த ஆவணப்படத்தை திரையிட்டதற்கு இலங்கை தூதர் ரவிநாத ஆரியசிங்க கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
இலங்கை அரசுக்கு எதிரான பரப்புரையின் ஒரு பகுதிதான் இந்த ஆவண வெளியீடு. இதில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களும், விடியோ காட்சிகளும் நம்பகத்தன்மையற்றவை. எப்போதும் இலங்கையை குறைகூறும் இயல்புடையவர்களால் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தின்போது, இலங்கைக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

இலங்கையின் அட்டூழியம்:
2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது, போர் நிறுத்தப் பகுதிகளை இலங்கை இராணுவம் அறிவித்தது. அதை நம்பி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதுகாப்புத் தேடி அப்பகுதிகளுக்குச் சென்றனர்.
அப்போது, அவர்கள் மீது தாக்குதலை நடத்தி இலங்கை இராணுவம் கொன்று குவித்தது. இந்தப் போர்நிறுத்தப் பகுதிகளில் கிடந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சடலங்கள் ஆவணப் படத்தில் காண்பிக்கப்பட்டது.
போர்நிறுத்தப் பகுதியில் 2 வாரங்கள் தங்கியிருந்த ஐ.நா. ஊழியர் பீட்டர் மெக்கெயின் பேட்டி ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்தது. அவர் கூறியதாவது:
போர் நிறுத்தப் பகுதிகள் என அறிவித்துவிட்டு, அப்பகுதியைச் சுற்றி அதிக அளவிலான பீரங்கிகளை இராணுவம் நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் அப்பாவி பொதுமக்களை கொன்றழிப்பதற்காகத்தான் அந்த பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன” என்றார்.
இவரும், செஞ்சிலுவை சங்க ஊழியர் ஒருவரும் அளித்த பேட்டியில், “”தாற்காலிக மருத்துவ மையங்கள், உதவி மையங்களையும் கூட ராணுவம் விட்டுவைக்கவில்லை. அங்கும் தாக்குதல் நடத்தியது.
போர்க்களங்களில் உதவி மையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற விதிமுறையை இலங்கை ராணுவம் கடைப்பிடிக்கவில்லை” என்றனர்.
போர்க்களத்திலிருந்து பின்வாங்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் சேர்ந்து, ஆயிரக்கணக்கான மக்களும் இடம்பெயர்ந்து சென்ற காட்சிகளும் ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்டது.
தாக்குதலுக்குள்ளாகி இறக்கும் தருவாயில் உள்ள குழந்தைகளைப் பார்த்து கதறி அழும் பெற்றோர்கள், ராணுவத்தின் விசாரணைக்குப் பின் விடுதலைப் புலி வீரர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட சடலம் உள்ளிட்ட புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.
கைது செய்யப்பட்ட பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்படும் விடியோ காட்சிகளும் ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்டது.
அப்பெண்களின் சடலங்களைப் பார்த்து சிங்கள இராணுவ வீரர்கள் வசைச்சொற்களை உதிர்க்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இறுதியாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், இராணுவம் அமைத்திருந்த பதுங்கு குழியில் உட்கார வைக்கப்பட்டு பிஸ்கட் சாப்பிடும் புகைப்படமும், சில மணி நேரங்களிலேயே உடலில் 5 இடங்களில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சடலமாகக் கிடக்கும் புகைப்படமும் காண்பிக்கப்பட்டது.
இதேவேளை, இலங்கைக்கு எதிரான 2வது தீர்மானத்தை அமெரிக்கா, ஐ.நா. கவுன்சிலில் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், போர்க்குற்றங்களை சர்வதேச சட்டப்படி விசாரிக்கவும், தமிழர் மறுவாழ்வு பணிகளை சர்வதேச குழுவினர் கண்காணிப்பில் மேற்கொள்ளவும் வலியுறுத்தப்படும் என தெரிகிறது.
இந்த தீர்மானத்தை பல நாடுகள் ஆதரிக்கும் என்பதால், எளிதாக வெற்றி பெறும். இதனால், இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு நெருக்கடி முற்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக