22 மார்ச் 2013

சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டனர் மாணவர்கள்!

 Students Detained Bid Picket Pc Chennai House சென்னையில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வீடு உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். இலங்கையில் நடந்தது திட்டமிட்ட தமிழின படுகொலை என்பதை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும். ஐ.நா. மேற்பார்வையில் இலங்கையில் நடைபெற்ற தமிழின படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களின் கோரிக்கை. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட பள்ளி கல்வித்துறை வளாகம் முன்பு மாணவர்கள் கூடினர். இதனால் வளாகத்தின் முக்கிய நுழைவு வாயில் பூட்டப்பட்டது. மாணவர்கள், சாஸ்திரி பவனை முற்றுகையிடுவதற்கான ஊர்வலத்தை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் இருந்து தொடங்கினர். போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்து தடுப்புகளை அமைத்தனர். ஆனால் தடுப்புகளை உடைத்த மாணவர்கள் அருகில் இருந்த நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு மாணவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயின் கல்லூரி மாணவர் கார்த்திக் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டதால், மயக்கமடைந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதே போல சென்னையில் மன்றோ சிலை அருகில் உள்ள தென்பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக மாணவர்கள் அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடி நின்றனர். அங்கு ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு, ஊர்வலமாக ராணுவ தலைமை அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். போலீசார் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆவின் பாலகம் அருகில் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றம் எதிரே உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. சென்னையில் நேற்று மட்டும் 22 இடங்களில் நடந்த மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக