23 மார்ச் 2013

ஐ.நா-வின் நடவடிக்கையே சந்தேகத்துக்கு உரியது!

may17_protest[1]ஐ.நா. இப்போது தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், போர் நடந்துகொண்டு இருந்த காலத்தில் மௌனமாகப் பார்த்துக்​கொண்டு இருந்ததும் இதே ஐ.நா-தான். அதிகாரிகள். தமிழ் உணர்வாளர்கள் இதையும் ஒரு பக்கம் விமர்சிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் ஒன்றுகூடலை நடத்தியது ‘மே-17’ இயக்கம். அதன் நிறுவனர்களில் ஒருவரான திருமுருகன் இதுபற்றி நம்மிடம் விரி​வாகப் பேசினார்.
கேள்வி: அமெரிக்கத் தீர்மானத்தை இரண்டு விதமாக விமர்சிக்​கிறார்களே?
பதில்: அமெரிக்கத் தீர்மானம் தமிழர்களுக்குச் செய்யும் மோசடி என்று முதலில் பேசியது எங்கள் இயக்கம்தான். இதுவரை உலகம் பார்க்​காத கொடூரத்தைச் செய்தது இலங்கை அரசு.
இதுபற்றி, சர்வதேச விசாரணை வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்தபோது, உலகத்தை ஏமாற்றுவதற்காக ‘நாங்களே விசாரிக்​கிறோம்’ என்று இலங்கை அரசாங்கமே விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதை அடிப்படையாகக்கொண்டுதான் அமெரிக்கத் தீர்மானம் வடிக்கப்பட்டுள்ளது.
அது எப்படி சரியானதாக இருக்கும்? இலங்கை அரசை எவரும் நம்பாத நிலையில், அமெரிக்கத் தாம்பூலத்தில் வைத்து அதே ஆணைக்குழுவின் முடிவுகளை ஐ.நா. மூலமாக தமிழர்கள் தலையில் கட்டலாம் என்று நினைத்தனர்.
தமிழர்கள் கொஞ்சம் அசந்து இதை ஆதரித்திருந்தால்கூட சர்வதேச சமூகத்தின் காதுகளில் உருவாக்கி வைத்திருக்கும் நமது நியாயங்களையும் உரிமைக்குரலையும் ஒட்டுமொத்தமாக ஊத்தி மூடும் ஆபத்து அதில் இருக்கிறது. இது சம்பந்தமான விழிப்பு உணர்வை மாணவர்கள் ஊட்டியதால் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கேள்வி: ஐ.நா-வின் இந்த மனித உரிமை அமர்வில் வரவேற்கத்தக்க விஷயம் என்று எதுவுமே இல்லையா?
பதில்: ஐ.நா-வின் இந்த அமர்வு தமிழர்களைப் பொறுத்தவரை சிந்தனை மட்டத்தில் தோல்விஅடைந்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழர் தரப்புக் குரல் ஐ.நா. அமர்வில் ஒலித்திருக்கிறது. தமிழீழ மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஐரோப்பிய ஒன்றியமோ, அமெரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ முடிவு செய்வது அல்ல.
ஈழத்து மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் குரலாக கஜேந்திரகுமார் பொன்​னம்பலத்தின் குரல் ஒலித்திருக்கிறது.
அவர், ‘ஈழத் தமிழ் மக்களுக்கு உடனடிப் பாதுகாப்பாக இடைக்கால நிர்வாக சபை வேண்டும். அது, இலங்கை அரசின் மேலாதிக்கத்தில் இல்லாமல் சர்வதேசக் குழுவின் கண்காணிப்பில் அமைய வேண்டும்’ என்று, ஐ.நா. அமர்வில் பேசி இருக்கிறார்.
மக்கள் தங்களது விருப்பங்களைச் சொல்லும் பொது வாக்கெடுப்பை நோக்கி நகரும் வரை இடைக்காலத் தீர்வாக இதைக்கொள்ளலாம்.
கேள்வி: ஐ.நா. தீர்மானத்தின் மூலமாக இராணுவ முற்றுகையில் இருந்து விடிவு கிடைத்தால்கூட, அது பெரிய விஷயம் அல்லவா?
பதில்: அப்படி நடந்தால் நன்மைதான். ஆனால், அது சாத்தியம் அல்ல. குறைந்தபட்சம், பறிக்கப்​பட்ட நிலங்களைத் தமிழர்களிடமே மீண்டும் வழங்கி, இராணுவத்தை விலக்கி, சுதந்திரமாகத் தொழில்​செய்யும்படியான உரிமைகள்கூட அமெரிக்கத் தீர்மானத்தில் இல்லை.
பொத்தாம்பொதுவாக, ‘இலங்கை நீதி வழங்க வேண்டும்’ என, கொலை செய்தவர்களிடமே மீண்டும் இவர்கள் கோருகி​றார்கள். இதை நாம் ஏற்றுக்கொண்டால், எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிடும்.
கேள்வி: இலங்கைக் கொடூரங்கள் குறித்து இதுவரை, தருஸ்மன் குழு அறிக்கை, டப்ளின் தீர்ப்பாய அறிக்கை, சார்ள்ஸ் பெற்றி அறிக்கை ஆகிய மூன்றும் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் சில ஆவணப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இத்தனைக்கும் பிறகு, ஐ.நா. அதிகார​பூர்வமாக வாய் திறக்காதது ஏன்?
பதில்: ஐ.நா-வின் நடவடிக்கைகளில் பலத்த சந்தேகங்கள் உள்ளன. போர் முடிந்தவுடன் ஐ.நா-வின் உயர் சட்ட ஆலோசனைக் குழு, ‘ இலங்கை மீது உடனே சர்வதேச விசாரணையைத் தொடங்க வேண்டும்’ என்று சொன்னது. அதை நிராகரித்த பான் கி மூன், ‘இலங்கை அரசாங்கமே அதை விசாரிக்கலாம்’ என்று கூறினார்.
நல்லிணக்க ஆணைக் குழுவை ராஜபக்ச அமைத்தார். தருஸ்மன் குழு அறிக்கையையோ, கெலம் மேக்ரேயின் ஆவணங்களையோ அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளாத ஐ.நா., இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையை ஏற்றுக்கொள்கிறது என்றால்… அதை நாம் நிராகரித்துப் போராடுவதுதான் நேர்மையானது.
கேள்வி: காங்கிரஸ் கூட்டணியை விட்டு தி.மு.க. வெளியேறி இருக்கும் நிலையில், வருங்காலத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களில் டெசோவையும் இணைத்துக் கொள்வீர்களா?
பதில்: தி.மு.க-வோடு ஈழ ஆதரவு அமைப்புகளுக்கு இதுவரை கிடைத்த அனுபவமே போதுமானது. இன்றைக்கு எழுச்சி பெற்றிருக்கும் மாணவர் போராட்டங்களில் நுழைந்து அதனுடைய திசைவழியை மாற்றிவிடும் வல்லமைகூட தி.மு.க-வுக்கு உண்டு என்பதால், அவர்களுடன் இணைய மாட்டோம்.
தி.மு.க. வெளியேறி இருப்பது அவர்களது அரசியல் நலன் சார்ந்த நடவடிக்கையே தவிர, ஈழப் பிரச்சினைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது சாதாரண மக்களுக்குக் கூட தெரியும்!

ஜூனியர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக