தமது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தி.மு.க. பொருளாளர் மு.க .ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள மு.க. ஸ்டாலினின் வீட்டில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் 6 பேர் அடங்கிய குழு சோதனை நடத்தியது. இந்த சோதனை பற்றி கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், மத்திய அரசிலிருந்து நேற்றுதான் வெளியே வந்தோம். இன்று சோதனை என வந்திருக்கின்றனர். இது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசின் இந்த மிரட்டல், உருட்டலை நாங்கள் எதிர்கொள்வோம். எந்த வழக்கானாலும் இதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்றார். மேலும் திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்று குற்றம்சாட்டியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, வெளிநாட்டு கார் விவகாரம் தொடர்பாகத்தான் இந்த சோதனை என்றால் ஏன் ஒரு மாதத்துக்கு முன்பே நடத்தியிருக்கலாமே.. இல்லை ஒரு மாதம் கழித்துகூட சோதனை நடத்தியிருக்கலாமே.. நேற்றுதானே அரசில் இருந்து விலகினோம்.. இன்று சிபிஐ சோதனை நடத்துகிறது என்றால் அரசியல் பழிவாங்கல் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? என்றார். இதேபோல் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எப்படி செயல்படுகிறது என்பதற்கான உதாரணம் இது. இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான். சிபிஐ சோதனை நடத்தினாலும் வழக்கு பதிவு செய்தாலும் நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படப் போவது இல்லை என்றார். திமுகவின் மற்றொரு எம்.பியான டி.கே.எஸ். இளங்கோவனும் இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக