05 மார்ச் 2013

இராணுவ அதிகாரியை அனுப்ப மறுத்த கோத்தா!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கும் சிறிலங்கா அரசகுழுவில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் எவரும் பங்கேற்கவில்லை.
இதற்கு முன்னைய கூட்டங்களில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பங்கேற்று, அரசகுழுவினருக்கு உதவியிருந்தனர்.
இம்முறையும் சிறிலங்கா இராணுவ மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கோரியிருந்தார்.
சிறிலங்கா இராணுவத்தை மையப்படுத்திய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு முறியடிக்க, இராணுவ அதிகாரி ஒருவர் பங்கேற்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்ட போதும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இம்முறை சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் எவரையும் அனுப்புவதில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஜெனிவா சென்ற சிறிலங்கா தூதுக்குழுவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில் செயற்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளாலேயே சிறிலங்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அந்த குற்றச்சாட்டுகளை முறியடிக்க உதவாமல் நழுவிக் கொண்டுள்ளது குறித்து சிறிலங்கா குழுவினர் விசனம் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக