16 மார்ச் 2013

விடுமுறை அறிவிப்பையும் மீறி தீவிரமானது மாணவர் போராட்டம்!

 Anti Lanka Protests Rage Tn Students Demand Eelam தமிழகத்தில் மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டும் மாணவர்கள் போராட்டம் முழு வீச்சில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழக மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 7 பேர் உடல் நிலை கவலைக் கிடமானது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 மாணவர்கள் 6-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் மேலும் 8 மாணவர்கள் இவர்களுடன் இணைந்திருக்கின்றனர். சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர். நந்தன் கல்லூரிதான் சென்னை மாணவர்களுக்கு இப்போது மைய போராட்ட களமாக மாறி வருகிறது. உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக பல கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு குவிந்துள்ளனர். திருச்சியிலும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூரில் பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களும் ஈழத் தமிழருக்காக போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதேபோல் கோவையில் மாநகராட்சி பள்ளிக் கூட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகியிருக்கின்றனர். கோவை ஒண்டிப்புதூரில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம் நடத்தியதற்காக 38 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை மதிமுக அலுவலகத்தில் 6-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக சட்ட மாணவிகள் போராட்டத்தை நடத்தினர். ராஜபக்சே உருவபொம்மையை விளக்கு மாறால் அடித்தும் செருப்பால் அடித்தும் தீயிட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். திருநெல்வேலியில் சித்த மருத்து மாணவ, மாணவியர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கடலூர், விருத்தாசலம் மாணவர்களும் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக