16 மார்ச் 2013

இடைக்கால அரசு,போர்க்குற்ற விசாரணை,ஐ.நா.வில் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்!

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரழிவில் இருந்து அவர்களைக் காப்பாற்ற இடைக்கால அரசு ஒன்றை சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் வலியுறுத்த வேண்டும் என்று நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் வலியுறுத்தினார் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னப்பலம்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பருவகால மீளாய்வுக் கூட்டத்தில் அவர் நேற்று உரையாற்றினார். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் வழியாக அவருக்கு இந்தச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அவரது உரையின் முழு வடிவம் இங்கு தரப்படுகிறது.
நாம் இந்த அவை நிறுவப்பட்ட காலத்தில் இருந்÷த குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை ஒவ்வொரு நாடு தொடர்பாக நடைபெற்றுவரும் மனித உரிமை மீளாய்வு முறையைத் தொடர்ந்து அவதானித்து வந்துள்ளோம். இப்பொழுது இரண்டாவது சுழற்சியில் இருக்கும் இச் செயன்முறையில், சில நாடுகள் முதல் சுழற்சியின்போது இந்த அவையால் செய்யப்பட்ட பரிந்துரைகளை முற்றாக நடைமுறைப்படுத்தாது விடுத்திருந்தமையை அவதானிக்கலாம் குறிப்பாக இலங்கை இதற்கு நல்லதோர் உதாரணமாகின்றது.
இந்த மனித உரிமைகள் மீளாய்வு முறையானது வரலாற்று ரீதியாக சுதந்திரம், இனத்துவம், மொழி, காலாசாரம், என்பவற்றின் அடிப்படையில் தம்மை ஓர் தேசமாகக் கருதும் தமிழர்கள் போன்ற ஒரு மக்கள் கூட்டத்திற்கு தமது பிரச்சினைகள் பற்றி எடுத்தியம்புவதற்கான வாய்ப்பை வழங்குவதில்லை என்பதற்கு இலங்கை தொடர்பாக நடத்தப்பட்டு முடிந்த மனித உரிமை மீளாய்வு நல்லதோர் உதாரணம்.
அவர்களுடைய உண்மையான பிரச்சினைகளும் விருப்புகளும் ஒரு தேசத்தை அழிக்கும் பிரச்சினையாகப் பார்க்கப்படாமல் வெறுமனே தனிநபர் மனித உரிமைப் பிரச்சினையாகவே பார்க்கப்படுகின்றது.
இலங்கை தொடர்பான, கடந்த மனித உரிமைகள் மீளாய்வின்போது ஆஸ்த்திரியாவினால் முன்வைக்கப்பட்ட யோசனையில் "தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்'' என்பதில் மட்டுமே "தமிழர்கள்' பற்றிய குறிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது, தமிழர்கள் ஒரு பிரத்தியேகமான மக்கள் என்ற வகையிலும் அவர்களுக்குப் பிரத்தியேகமான பிரச்சினைகள் இருக்கின்றன என்ற வகையிலும் தமிழர்களது பெயர்தானும் இவ்விவாதத்தில் வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது.
இந்த மனித உரிமை மீளாய்வானது எந்தளவிற்கு தமிழர்களை நீக்கி நடத்தப்படுகின்றது என்றால், 65 வருட கால சிங்கள தமிழ் இன முரண்பாட்டைப் பற்றிப் பெரிதும் அறியாதவர்கள் ""மீளிணக்கம்'' என்பதனுள் எந்தத் தரப்புகள் உள்ளடங்குகின்றன என்பதனைக்கூட அறியாதவர்களாகி விடுவார்கள்.
திட்டமிட்ட வகையில் தமிழர்களது தேசிய இருப்பை இல்லாமல் செய்வதற்கான முயற்சியே இலங்கையின் 26 வருடகால போருக்கான காரணமாகும். "இலங்கை'சுசு என்பது உண்மையில் "சிங்கள பௌத்த அரசு'' என்பதன் ஓர் குறியீட்டுப் பெயராக இருக்க, இலங்கை அரசாங்கம் தாம் ""இலங்கையர்'' என்ற அடையாளத்தினை முன்னிறுத்தி வேலை செய்வதாகக் கூறும்போது நாம் அச்சமடைகின்றோம்.
இந்த வேளையில் நாம் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஓர் நிலைமாற்று கால நிர்வாகத்தை தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது தாயகமான வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் பேரழிவில் இருந்து உடனடியாக பாதுகாக்கும் நோக்கில் அமைக்குமாறு கோரி நிற்கின்றோம்.
இறுதியாக இலங்கை அரசாங்கமானது சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பான மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாகச் செய்யப்பட்டுவரும் அனைத்துலக பரிந்துரைகளையும் நிராகரித்து வருவதனால் ஓர் சுயாதீன, சர்வதேச விசாரணையை நாம் கோரி நிற்கின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக