10 மார்ச் 2013

ராஜபக்சே தலைக்கு ரூ1 கோடி!

பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட படத்தை கண்டு பதறித்துடிக்கிறது தமிழகம். “போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே கும்பல் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்’ என்கிற கோரிக்கைகளை முன்னிறுத்தி உணர்வாளர்கள் நடத்தும் போராட்டங்களால் தமிழகம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.
ம.தி.மு.க., தமிழர் தேசிய இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு, தமிழக எழுச்சி இயக்கம், தமிழக பெண்கள் செயற்களம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 14 இயக்கங் கள் இணைந்து நடத்திய சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வீரியமாக இருந்தது. வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான உணர்வாளர்களின் கோபமும் ஆவேசமும் உணர்ச்சிப்பிழம்பாக வெடித்தன.
ராஜபக்சேவின் இன வெறியை சித்தரிக்கும் பதாகைகளையும் பாலச்சந்திரன் படுகொலை பதாகைகளையும் ஏந்தியபடி திரண்டிருந்தனர் உணர்வாளர்கள். ராஜபக்சே கும்பல்களை போர்க் குற்றவாளிகளாக அறிவித்து சர்வதேச கூண்டில் ஏற்று என்று முழங்கிக்கொண்டிருந்தார் வைகோ. அப்போது வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த உணர்வாளர்கள் திடீரென்று ராஜபக்சேவின் உருவ பொம்மையை தூக்கிக் கொண்டு வந்து செருப்பால் அடித்தும் தீ வைத்து கொளுத்தியும் தங்களது கோபத்தை தீர்த்துக் கொண்டனர். ராஜசேகரன் என்ற உணர்வாளர் ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு தீ வைத்து விட்டு, “”செத்தாண்டா ராஜபக்சே” என்று ஆவேச குரல் எழுப்பினார்.
இலங்கைக்கு எதிராக 1 மணி நேரம் கண்டன கோஷங்களை எழுப்பிய உணர்வாளர்களை அழைத்துக்கொண்டு இலங்கை தூதரகத்தை முற்றுகையிட வைகோ, நெடுமாறன், வேல்முருகன் ஆகியோர் நடந்து சென்றனர். 100 அடி தூரம் நடந்து சென்ற அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது போலீஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக