25 மார்ச் 2013

சர்வதேசம் மத்தியஸ்தம் செய்தால் அரசுடன் பேசத்தயார்-சம்பந்தன்

“கடந்த காலங்களில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகளைக் குழப்பியது அரச தரப்புத்தான். இதனால் அதன் மீது எமக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், விசுவாசமாக ஆக்கபூர்வமாக நம்பகத்தன்மையுடன் சர்வதேசத்தை நடுவராக வைத்துக் கொண்டு அரசு பேச்சுகளை ஆரம்பித்தால் நாம் அதில் பங்கேற்போம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாட்டில் இனப்பிரச்சினை தொடர தாம் விரும்பவில்லை எனவும், அதற்கு மிக விரைவில் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாவதற்கும், மத்தியஸ்தம் வகிப்பதற்கும் உதவ தென்னாபிரிக்காவோ அல்லது ஏனைய மூன்றாம் தரப்போ முன்வருமானால் அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் வடக்குத் தேர்தலை நடத்தி, அதிகாரங்களைப் பகிர்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியிடம் நேற்று மாலை “சுடர் ஒளி’ வினவியது.
இதன்போது அவர் தெரிவித்தவை வருமாறு:
“இந்த நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப்பெற நாம் அரசுடன் விசுவாசமாக பேச்சு நடத்தச் சென்றோம். ஆனால், பல சுற்றுகளில் நடந்த அந்தப் பேச்சுகள் அனைத்தையும் பயனற்றதாக்கி, வடமாகாணசபைத் தேர்தலையும் இழுத்தடித்து எம்மை ஏமாற்ற முனைந்தது அரசு. இந்த நிலையை உணர்ந்துகொண்ட நாம் பேச்சிலிருந்து வெளியேறினோம்.
அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்தோம்.
ஆனால், பேச்சைக் குழப்பியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனவும், அது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வருகின்றதில்லை எனவும் சர்வதேச நாடுகளுக்குப் பொய்களை அள்ளிவீசி வந்தது இந்த அரசு தற்போதும் இதனையே செய்துவருகின்றது.
ஆனால், நாம் ஏற்கனவே உண்மை நிலைவரத்தை பல தடவைகள் இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் தெரிவித்துள்ளோம். அரசு நம்பகத்தன்மையுடன் பேச்சுகளை ஆரம்பித்திருந்தால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் பங்கேற்றிருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளோம்.
இந்நிலையில், இனப்பிரச்சினை அரசியல் தீர்வுப் பேச்சுகளை இலங்கை அரசு தமிழ்க் கூட்டமைப்பு மீண்டும் ஆரம்பிக்க மத்தியஸ்தம் வகிப்பதற்கு சர்வதேச நாடுகள் முன்வந்தால் தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அத்துடன், செப்டெம்பர் மாதத்துக்குள் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழருக்கு அதிகாரங்களை அரசு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா குறியாகவுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக தனது இரண்டாவது பிரேரணையை கடந்த வாரம் ஜெனிவாவில் நிறைவேற்றிய அமெரிக்கா, இலங்கையில் அரசு கூட்டமைப்பு பேச்சு தொடர்பில் தற்போது தமது நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விடயம்.
எனவே, விசுவாசமாக ஆக்கபூர்வமாக நம்பகத்தன்மையுடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பித்தால் நாம் அதில் பங்கேற்போம். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் நாம் காலத்தை இழுத்தடிக்க விரும்பவில்லை.
சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதுவே தமிழ் மக்களினதும் எதிர்பார்ப்பாகும்” என்று தெரிவித்தார் சம்பந்தன் எம்.பி.
இதேவேளை, இலங்கை அரசு தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் அரச தரப்பின் நிலைப்பாடு என்ன என்று கேட்பதற்காக பேச்சுக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவிடம் தொடர்புகொண்டு கேட்பதற்கு நேற்றுப் பல தடவைகள் முயன்றபோதும் அவை பலனளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக