01 ஏப்ரல் 2013

“ரோம் எரியும் போது…” சிரித்து மகிழும் ஹக்கீமும் மகிந்தவும்

mahinda-hakeemகொழும்பு ஹவ்லொக் மைதானத்தில் நேற்றுமாலை நடைபெற்ற சிறிலங்கா – சீன தாய்பே அணிகளுக்கு இடையிலான ரக்பி ஆட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலகலப்பாக சிரித்துப் பேசும் ஒளிப்படம் ஒன்றை கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று முகப்புப்படமாக வெளியிட்டுள்ளது.
“ரோம் எரியும் வேளையில்” என்று இந்த ஒளிப்படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான பெளத்த அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹக்கீம் விசனம் வெளியிட்டிருந்தார்.
பெபிலியானவில் முஸ்லிம் வணிக வளாகம் தாக்கப்பட்ட பின்னர், அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் படி சிறிலங்கா அதிபரிடம் ரவூப் ஹக்கீம் கேட்டிருந்தார். ஆனால் அதற்கு சிறிலங்கா அதிபர் செவிசாய்க்கவில்லை.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுகாலை வரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டக்குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆராயப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஹக்கீமும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கத் தவறினால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இந்தநிலையிலேயே நேற்றுமாலை சிறிலங்கா அதிபருடன் இணைந்து அவர் ரக்பி ஆட்டத்தை ரசித்து மகிழ்ந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சீன தைபே அணியுடனான ரக்பி ஆட்டத்தில் சிறிலங்கா அதிபரின் மகனும் சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான யோசித ராஜபக்ச சிறிலங்கா அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.
இதில் சிறிலங்கா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக