19 ஏப்ரல் 2013

புலிகளின் உளவாளி என்று கைதான இளைஞர் விடுதலை!

இராமேஸ்வரம் மண்டபம் முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உளவுத் தகவல் கொடுத்ததுடன், புலிகளின் உளவுப் பிரிவில் இருந்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கில் குறித்த இளைஞனை விடுதலை செய்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பு வழங்கினார்.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாத்திற்கும் 2010 மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கிளிநொச்சிப் பிரசேத்தில் வன்செயல்கள் இடம்பெறும் வகையில் விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவில் அங்கம் வகித்ததுடன், இராமேஸ்வரம் மண்டபம் முகாமிலிருந்து உளவுத் தகவல்களை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வழங்கினாரெனவும் குற்றஞ்சாட்டப்பட்டு கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெகநாதன் வாசுதேவன் என்ற இளைஞனுக்கு எதிராக மேற்படி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கின் விளக்கம் வவுனியா மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.
இதன் போது எதிரியான ஜெகநாதன் வாசுதேவன் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம், சுய விருப்பின் பேரில் வழங்கப்படவில்லையென்பதும், அவர் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்ததாகவும் நிரூபிக்கப்பட்டது.
எனவே குறித்த வாக்கு மூலத்தை சாட்சியாக ஏற்கவில்லையென்றும், வேறுசாட்சியங்களின்மையாலும், நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் குறித்த இளைஞனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக