10 ஏப்ரல் 2013

சுயாட்சியுடன் கூடிய இடைக்கால அரசே உடனடித்தேவை!

இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்குத் தீர்வு எதுவும் கிடைக்காது என்பதால், நிரந்தரத் தீர்வு ஒன்றை எட்டும் வரைக்கும் சுயாட்சியுடன் கூடிய இடைக்கால மாகாண அரசு ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தனர். இந்தியத்துணைத் தூதரகத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் ஆயர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.
அந்தச் சந்திப்பில் அனைத்துத் தரப்பினராலும் ஒற்றுமையுடன் இடைக்கால அரசு ஒன்றுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது “தமிழ்மக்கள் தமது பிரச்சினைக்கான தீர்வாக எதனை விரும்புகிறார்கள்? அதற்கு இந்தியா எந்த வகையில் உதவமுடியும்?” என்று இந்திய தூதுக்குழுவினர் வினவினர்.
அதற்குப் பதிலளித்த தமிழர் தரப்புப் பிரதிநிதிகள், “தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுவதற்கு முன்பதாக தற்போது இடம்பெறும் இனஅழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
முல்லைத்தீவில் ஓர் இரவில் 9 ஆயிரம் சிங்களவர்களைக் கொண்டு வந்து குடியேற்றுகின்றனர். தமிழர் தாயகப் பிரதேசங்களில் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் விதத்தில் அரசு செயற்படுகின்றது.
வலி. வடக்கு மக்கள் சொந்த இடங்களுக்குச் சென்று மீளக்குடியமர முடியாமல் இருக்கின்றனர். அவர்களது நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் முடக்கப்பட்டு, அங்கு இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றனர். மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.
மக்கள் சுதந்திரமாக ஒன்று கூடி கதைக்க முடியாத நிலைமை இருக்கின்றது. எங்கும், எதிலும் இராணுவத்தினரின் தலையீடுதான். இதனால் மக்களால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாதுள்ளது.
மேலும் இறுதிக் கட்டப் போரில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டனர். ஐ.நாவால் நியமிக்கப்பட்ட குழுக்கள் கூட 40 ஆயிரம்பேர், 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தப் பாதிப்பை எதிர்கொண்ட மக்களுக்கு இதுவரையில் எதுவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இது திட்டமிட்ட இனப்படுகொலை. இதனை இந்தியா ஏற்க வேண்டும்.
இந்த தமிழின அழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் திட்டமிட்டரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக வடக்கு கிழக்கில் சர்வதேசத்தின் அல்லது இந்தியாவின் கண்காணிப்பின் கீழ் இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பிரிக்கப்பட்ட எமது தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கு மீளவும் இணைக்கப்பட வேண்டும். இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு போதும் தமிழர்களுக்கு நிரந்தத் தீர்வாக அமையாது. மேலும் இந்த அரசு 13 ஆவது திருத்த சட்டத்தில் மாகாண சபைகளுக்கு கொடுத்த அதிகாரங்களையும் மீளவும் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் மாகாணசபையினாலோ அல்லது அதனைக் கொண்டிருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தினாலேயோ தமிழர்களுக்கு நிரந்தரமான எந்தத் தீர்வையும் பெற முடியாது.
மாகாணசபை முற்று முழுதாக ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே 13 ஆவது திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு செயற்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
யாழ். வந்த இந்தியக்குழுவில் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சௌகத்தா றோய், பாரதீய ஜனதாக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரகாசு ஜவதேகர், அனுராக்தாகூர், பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தனஞ்ஜய்சிங், இந்திய தேசியக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்தீப் தீக்ஷித், மதுகௌட் ஜக்சு ஆகியோரும் இந்திய உயர்மட்ட தூதுக் குழுவைச் சேர்ந்த இந்திய அபிவிருத்தி கூட்டு நிர்வாகம், வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலர் எஸ்.இராகவன், இந்திய நிதி ஆலோசகரும், வெளிவிவகார அமைச்சின் சிறப்புச் செயலருமான பமல் ஜீங்கா ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இவர்களை தமிழர் தரப்பு சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், க.சுரேஸ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்கள் எனப் பலரும் சந்தித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக