14 ஏப்ரல் 2013

9 கருணை மனுக்களை நிராகரித்தார் பிரணாப் முகர்ஜி!

பிரணாப் முகர்ஜி கடந்த 9 மாதத்தில் 9 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.மூலம் 14 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி ஆகி உள்ளது.பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அவர் கடந்த 9 மாதங்களில் அடுத்தடுத்து பல தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுத்துள்ளார். மொத்தம் 9 கருணை மனுக்களை அவர் நிராகரித்துள்ளார். இதன் மூலம் ஒரு பெண் உட்பட 14 பேருக்கு தூக்கு தண்டனை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் பிரணாப் தள்ளுபடி செய்த முதல் கருணை மனு, மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப்பின் மனுவாகும். 2004ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் தூக்கில் போடப்பட்ட முதல் குற்றவாளி கசாப்தான். அடுத்ததாக சொத்து தகராறில் 3 உறவினர்களை கொலை செய்த அத்பீர் என்பவரின் கருணை மனுவை ஏற்று, அவரது தண்டனையை ஆயுள் சிறையாக பிரணாப் குறைத்தார். இதை தொடர்ந்து கடந்த ஜனவரியில் சாய்மன்னா நதிகாரின் கருணை மனுவையும், பிப்ரவரியில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்ற அப்சல் குருவின் கருணை மனுவையும் நிராகரித்தார். பின்னர், வீரப்பன் கூட்டாளிகளான சைமன், ஞானபிரகாசம், மாதையன், பிலேந்திரன் ஆகியோரது கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதை தொடர்ந்து பலபேரை கொன்ற சுரேஷ் மற்றும் ராம்ஜி, குர்மீத் சிங், ஜாபர் அலி ஆகியோரது தூக்கு தண்டனையை பிரணாப் முகர்ஜி உறுதி செய்தார். பிறகு, பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த தரம்பால், மற்றும் தனது பெற்றோர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 8 பேரை கொலை செய்த அரியானா முன்னாள் எம்.எல்.ஏவின் மகள் சோனியா, அவளது கணவர் சஞ்சீவின் கருணை மனுவை அவர் நிராகரித்தார்.இதற்குமுன் ஜனாதிபதிகளாக இருந்தவர்களில் சங்கர் தயாள் சர்மா தனது பதவி காலத்தில் வந்த 14 கருணை மனுக்களையும் நிராகரித்தார். கே.ஆர்.நாராயணன் தனக்கு வந்த 10 மனுக்களில் ஒன்றை கூட பைசல் செய்யவில்லை. பின்னர் பதவி ஏற்ற அப்துல் கலாமுக்கு புதிதாக 16 கருணை மனுக்களும் வந்தது. ஆனால், 2 மனுக்கள் மீது மட்டுமே அவர் முடிவு எடுத்தார். பிரதிபா பாட்டீல் தனது பதவி காலத்தில் மொத்தம் 34 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் உட்பட மொத்தம் 3 மனுக்களை அவர் நிராகரித்தார்.இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவை கொல்ல கார் குண்டு வைத்த தேவேந்தர் பால் சிங் புல்லரின் கருணை மனுவையும் அவர் நிராகரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக