புல்லர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமது மகனின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ராஜிவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புல்லர் வழக்கு தீர்ப்பு 1993ஆம் ஆண்டு டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் பஞ்சாப்பைச் சேர்ந்த புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2003-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியிருந்தார். அந்த மனு 2011ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. 8 ஆண்டுகாலம் கழித்து தமது கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் தமது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை நேற்று நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யா பெஞ்ச், குடியரசுத் தலைவர் காலதாமதமாக கருணை மனுவை நிராகரித்தார் என்பதற்காக தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க முடியாது என்று கூறி புல்லர் மனுவை நிராகரித்தார். 7 தமிழர் வழக்கு இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் பேரறிவாளன் உள்ளிட்ட 3 தமிழர்களும் தங்களது கருணை மனுவை 11 ஆண்டுகாலம் கழித்து குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் தங்களது தூக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதும் இதே நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்த உள்ளது. இதனால் புல்லர் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு 3 தமிழர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது. மேலும் பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் தங்களுக்கு விதிக்கபட்ட தூக்கை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையிலும் புல்லர் வழக்கின் தீர்ப்பு எதிரொலிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அற்புதம் அம்மாள் நம்பிக்கை இந்நிலையில் ராஜிவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் புல்லர் வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது பயத்தையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் புல்லர் வழக்கு வேறு. என் மகன் மீதான வழக்கு வேறு. புல்லர் வழக்கின் தீர்ப்பு என் மகன் வழக்கில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன். வழக்கறிஞர்கள் எங்களுக்கு நம்பிக்கையான தகவல்களையே தந்து வருகின்றனர். நாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம். உலக நாடுகள் தூக்கு தண்டனைக்கு தடை விதித்துள்ள நிலையில், அகிம்சாவாதியான காந்தியடிகள் பிறந்த இந்தியாவில் தடை விதிக்காதது வேதனையளிக்கிறது. தமிழகத்திலேயாவது தூக்கு தண்டனையை ஒழிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டு, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக ஆக்க வேண்டும். சட்டசபையைக் கூட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் மனு அளித்து என் மகனை தன்னிடம் ஒப்படைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக